மு.க.அழகிரி அண்ணனின் மன்னன்! ஸ்டாலினை விட்டு அதிமுகவில் ஐக்கியமானது ஏன்? யார் இந்த P.M.Mannan?
சென்னை: முன்னாள் மத்திய இணையமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாகவும் அவரது நிழலாகவும் இருந்த பி.எம்.மன்னன், ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணையாமல் அதிமுகவில் இணைந்தது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரை என்றாலே அழகிரி, அழகிரி என்றாலே மதுரை! திருமங்கலம் பார்முலாவை கொண்டு வந்தவர் மு.க.அழகிரி என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்ததுண்டு! கருணாநிதி முதல்வராக இருந்த போதும் சரி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் சரி மதுரையில் தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி வந்தவர் என சொல்லும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவராக இருந்தார் அழகிரி.

திமுகவில் கருணாநிதி
ஆனால் எப்போது திமுகவில் இருந்து கருணாநிதி வெளியேற்றினாரோ அப்போது முதல் அவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. அவருடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி ஸ்டாலின் பக்கம் சென்றுவிட்டார்கள்.
இந்த நிலையில் அழகிரியுடன் நிழலாக இருந்த பி.எம்.மன்னன் இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அழகிரியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக ஸ்டாலின் பக்கம் சென்ற நிலையில் மன்னன் மட்டும் ஏன் மன்னாதி மன்னன் எம்ஜிஆரின் அதிமுகவில் இணைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்டாலினுடன் சந்திப்பு
பி.எம்.மன்னன், கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார். அவர் திமுகவில் இவரை இணைப்பார் என காத்திருந்தார். ஆனால் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலையொட்டி அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மன்னன், "என்னை அதிமுக, பாஜகவில் இருந்து அழைக்கிறார்கள். ஆனால் நான் திமுகவில் இருப்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றாராம்.
அப்படியாவது ஸ்டாலின் அழைத்து கட்சியில் இணைப்பார் என கருதினார். ஆனால் ஸ்டாலினிடம் இருந்து ஒரு சமிக்ஞையும் வரவில்லை என்பதால் அவர் இன்று அதிமுகவில் இணைந்துவிட்டார்.
யார் இந்த பி.எம்.மன்னன்
பி.எம்.மன்னன் மதுரை அரசியலில் அழகிரி அணியின் முக்கிய தளபதியாக (மாநகர தளபதி என்று சிலர் குறிப்பிடுவர்) இருந்தவர். தற்போது அரசியல் மாற்றங்களால் அதிமுக பக்கம் சென்றுள்ளார். 2006-2011 காலகட்டத்தில் மதுரை மாநகராட்சியின் துணை மேயராக (Deputy Mayor of Madurai Corporation) பதவி வகித்தார். இந்தக் காலத்தில் அழகிரி மதுரை மாவட்டத்தில் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தியபோது, மன்னன் அவருக்கு மிக நெருக்கமானவராக செயல்பட்டார்.
பொட்டு சுரேஷ்
மதுரையை சேர்ந்த பொட்டு சுரேஷ் என்கிற சுரேஷ் பாபு என்பவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த காலங்களில் தென் மாவட்டங்களில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் முதல் அமைச்சர்களாக இருந்தவர்கள் வரை இவருக்கு நெருக்கம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பொட்டு சுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு மர்மநபர்களால் அவரது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த பொட்டு சுரேஷ் மு.க.அழகிரிக்கும் நெருக்கமானவர்! இவரது இறப்பிற்கு அழகிரி, தனது மனைவி, மகனுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த கொலை வழக்கில் பொட்டு சுரேஷின் மனைவி புகாரின் பேரில் பி.எம்.மன்னன் உள்ளிட்டோரிடம் அப்போது சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications