மொத்த பணி விசாக்களை.. தற்காலிகமாக நிறுத்திய சவுதி அரேபியா.. இந்தியர்களுக்கு சிக்கல்.. ஏன்?
சென்னை: இந்தியா உட்பட பதினான்கு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான மொத்த பணி விசாக்களை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் சவுதிக்கு செல்வது தற்காலிகமாக சிக்கலாகி உள்ளது.
இதனால் இந்தியர்கள் block visa எனப்படும் மொத்த வேலை விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, புனித ஹஜ் பயணத்தின் வருகையை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. விசா முறைகேடுகளைத் தடுத்து, அங்கீகரிக்கப்படாத நபர்கள் புனித யாத்திரையில் பங்கேற்பதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவில் இந்தியாவிற்கு பணி விசா நிறுத்தம்: காரணங்கள்
சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க பொதுவாக மொத்த பணி விசாக்களைப் பயன்படுத்துகின்றன. கட்டுமானம் மற்றும் டிரைவிங் போன்ற துறைகளுக்கு இதில் விசா வழங்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக சவுதி தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழிலாளர்களை பெரிதும் நம்பியுள்ளன.
இந்த விசாக்கள் அந்த துறைகளுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றன. மேலும், மக்கள் பலர் பணி அல்லது வருகை விசாவில் நாட்டிற்குள் நுழைந்து, அதிகாரப்பூர்வ அனுமதியின்றி ஹஜ் செய்வதை தடுக்கும் விதமாக சவுதி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வேலை விசா வாங்கிவிட்டு.. அவர்கள் ஹஜ் செல்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத பங்கேற்பு காரணமாக புனித யாத்திரையின் போது கூட்ட நெரிசல், சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த தடை, மே 2025 முதல் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அல்ஜீரியா, இந்தோனேசியா, எகிப்து, ஏமன், ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளுக்கு பொருந்தும்.
சவுதி அரேபியா, புனித யாத்ரீகர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த முடிவு, அதன் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது. பல்வேறு நிறுவன முதலாளிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் இந்த விசா நிறுத்தம் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்கள், இந்த முடிவின் காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார இடையூறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, பல நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கை விசாக்களின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதோடு, ஹஜ் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கம் கொண்டது.
எனினும், சவுதி தொழிலாளர் சந்தையில் இதன் தாக்கம் மற்றும் விசா கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. இதுவரை சவுதி அரசாங்கம், இந்த தடையை எப்போது நீக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
தொழிலாளர் சந்தையில் பல்வேறு எதிர்ப்புகள் இந்த முடிவிற்கு எதிராக எழுந்த போதிலும், ஹஜ்ஜின் போது கடுமையான குடிவரவு விதிகளை அமல்படுத்துவதில் சவுதி அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். புனித யாத்திரை காலம் நெருங்கி வருவதால், மொத்த விசா அமைப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து விரைவில் தகவல் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தற்காலிக விசா நிறுத்தம், வெளிநாட்டினருக்கும் மட்டுமல்லாது, சவுதி அரேபியாவின் குடிமக்களுக்கும் சில சிரமங்களை ஏற்படுத்தலாம். எனினும், இது ஹஜ் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications