விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?
சென்னை: கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சட்டசபை செயலாளராக இருந்த சீனிவாசன் தனது பதவிக்காலம் முடிய 4 மாதங்கள் இருந்த நிலையில் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னணியில் முதல்வர் விஜய்க்கு தெரியாமல் அவரது ஆலோசகர் மற்றும் 2 அமைச்சர்கள் கொடுத்த அவமானம் தான் முக்கிய காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை செயலாளராக இருந்த சீனிவாசன் திடீரென்று நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2018 ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக அவர் சட்டசபை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். பொதுவாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் சட்டசபை செயலாளர் மாற்றம் செய்யப்படுவார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது சீனிவாசன் அந்த பொறுப்பில் இருந்தாலும் கூட அதன்பிறகு வந்த திமுக ஆட்சியிலும் தொடர்ந்து அந்த பதவியிலேயே நீடித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டில் சீனிவாசனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அவர் ஓய்வு பெற இருந்தார்.
ஆனால் அப்போதும் முதல்வராக இருந்த ஸ்டாலின் அவரது பதவிக்காலத்தை 3 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்தார். அவர் 2026 செப்டம்பர் 30ம் தேதி வரை அந்த பொறுப்பில் இருப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் விஜய் முதல்வரான நிலையில் பதவிக்காலம் முடிவடைவதற்கு 4 மாதங்கள் உள்ள நிலையில் சீனிவாசன் தனது பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டசபை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம், சீனிவாசன் வழங்கி உள்ளார். இதையடுத்து புதிய சட்டசபை செயலாளராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சீனிவாசன் ராஜினாமாவிற்கு முதல்வர் விஜய்யின் ஆலோசகரும், 2 அமைச்சர்களும் தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது முதல்வர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு சட்டசபையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று சீனிவாசன் தவெகவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். இது முதல்வரின் ஆலோசகராக உள்ளவருக்கும், விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் 2 அமைச்சர்களுக்கும் பிடிக்கவில்லையாம்.
அதோடு, சீனிவாசன், முதல்வர் விஜய்யுடன் நெருங்கிவிட்டால் தங்களது பதவிக்கு பங்கம் வந்து விடும் என அவர்கள் நினைத்துள்ளனர். அதுமட்டுமின்றி சீனிவாசனை அவமரியாதை செய்துள்ளனர். அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசியுள்ளார்.
இதனால், மனம் நொந்த சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு, மசோதா நிறைவேற்றம், மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றின்போது சட்டசபை செயலாளரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் தான் முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை கோரிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை சட்டசபை செயலாளராக சீனிவாசன் எந்த பிரச்சனைகளும் இன்றி நடத்தி முடித்திருந்தார்.
சீனிவாசன் சட்டசபையில் செய்தி பிரிவில் இருந்து இந்த பதவிக்கு வந்தார். இதனால் சட்டசபை விதிகள் உள்பட அனைத்து விஷயங்களும் நன்கு தெரியும். இதனை உணர்ந்து தான் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை சட்டசபை செயலாளராக பொறுப்பு வழங்கினார். அதன்பிறகு திமுக ஆட்சி வந்த பிறகும் முதல்வர் ஸ்டாலின் அவரை தொடர செய்ததோடு 3 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்து வழங்கியிருந்தார். ஆனால் முதல்வர் விஜய்யின் ஆலோசகர் மற்றும் 2 அமைச்சர்கள் தரக்குறைவாக நடத்தியதால் சட்டசபை செயலாளர் பதவியை உதறிவிட்டு சீனிவாசன் விலகி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications