ராமனை எரிக்கும் ராவண லீலா தொடங்கி திக, திமுகவினர் 'ராவணனின் பேரன்கள்' என பேசுவது எதனால் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒட்டுமொத்த இந்திய தேசமும் 'ராமர் கோவில் திருவிழா' எனும் பக்தி பரவசத்தில் திளைத்த போது தமிழ்நாடு மட்டும் "ராமர்மயமாக்கல்" என்பதில் இருந்து விலகி நின்றது. அத்துடன் இல்லாமல் ராமரின் எதிரியான "ராவணனின்" பேரன்கள் என திராவிடர் கழகமும் அதன் அரசியல் நீட்சியான திமுகவும் தொடர்ந்தும் மேடைகளில் முழங்கி வருகின்றன.

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் ராமாயணம் எனும் இதிகாசத்தின் பல்வேறு அம்சங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் அடங்கும். ஆனால் பிராமணர் அல்லாதார் இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம் என "அறிவியக்கம்" அல்லது "திராவிடர் விடுதலை இயக்கம்" உருவெடுத்து தலையெடுத்த காலம் முதல் ராமாயண எதிர்ப்பும் ராவணன் ஆதரவு நிலையும் வீச்சு பெற்றது.

Why DK, DMK Celebrated Dravidian Pride King Ravana against God Ram?

ராவண காவியம்: வட இந்திய ராமன் ஒரு ஆரியர்; இலங்கை வேந்தன் ராவணன் திராவிட மரபினத்தை சேர்ந்தவர்; தமிழர் என்கிற கோட்பாடு தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்தால் ஆழ விதைக்கப்பட்டது. இதன் விளைவாகத்தான் "ராவண காவியம்" எனும் மாபெரும் இலக்கியத்தை புலவர் குழந்தை உருவாக்கினார். ராவண காவியத்துக்கு 1948-ல் தடை விதிக்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது தடை நீக்கப்பட்டது. திராவிடர் கழகம், பெரியாரின் பற்றாளராக இருந்தவர் புலவர் குழந்தை. திராவிடர் இயக்கம்தான் ராவண காவியத்தை உருவாக்க காரணமாக இருந்தது.

அண்ணாவின் எதிர்ப்பு: 1950களில் அதாவது திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திமுக உருவான காலம் தொட்டே ராமன் எரிப்பும் ராவணன் திராவிடன் என்கிற கோட்பாடும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. "கடந்த சில தினங்களுக்குமுன் டில்லி மாநகரில் ராம லீலா கொண்டாடினராம் - வைதீகர்கள்; இராவணனையும் அவன் சந்ததிகளையும் அழித்த ராமனின் திருநாளாம் அது. இந்திய சர்க்காரின் செய்தி இலாகா அந்தக் கோலாகலத்தை திரைப்படமாக்கி சினிமா கொட்டகையில் திரையிட்டனர். திரையிலே காட்சி பக்கத்திலேயிருந்த நண்பர் கருணாநிதி கேட்டார். நாம் ராமன் உருவம் செய்து கொளுத்தினால் என்ன? என திராவிட நாடு (28.10.1951) ஏட்டில் பேரறிஞர் அண்ணா எழுதினார்.

ராமனை எரிப்போம்- கருணாநிதி: 1954 காலப் பகுதியில் மூதறிஞர் ராஜாஜி, சக்கரவர்த்தி திருமகன் என ராமனை புகழும் ராமாயண தொடரை எழுதினார். அப்போது முரசொலி ஏட்டில் "சக்கரவர்த்தியின் திருமகன்" - மூக்காஜி என பதிலடி தொடர் எழுதியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அந்த தொடரில் "நாம் அறுதியிட்டுக் கூற முடியும். புராணம் திரும்பியே தீரும். இராம-இராவண யுத்தத்தில் ஜெயிக்கப் போவது திராவிடத்து வீரன் இராவணன். தென்னாட்டிலும் ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும். (முரசொலி 8.10.1954) என கர்ஜித்தவர் கருணாநிதி.

பெரியார் போராட்டம் திமுக வெற்றி: 1970களில் ராமன் எதிர்ப்பு தமிழ்நாட்டில் உக்கிரமடைந்தது. தந்தை பெரியாரின் இறுதி காலத்தில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாடு பெரும் பிரளயத்தை உருவாக்கியது. அந்த மாநாட்டை முன்வைத்து ராமனை பெரியார் செருப்பால் அடித்தார்; அப்படிப்பட்டவர்கள் ஆதரிக்கும் திமுகவுக்கா உங்கள் வாக்கு என்கிற பிரசாரம் படுவேகமாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 1971-ம் ஆண்டு தேர்தலில்தான் வரலாறு காணாத பெருவெற்றியாக 183 இடங்களை திமுகவுக்கு வழங்கினர் என்பதும் சரித்திரம்.

மணியம்மையார்: தந்தை பெரியார் மறைவுக்கு பின் திராவிடர் கழகத்தின் தலைவராக மணியம்மையார் பணியாற்றிய காலத்தில் வட இந்தியாவில் ராம லீலா காலத்தில் ராவணனை எரிப்பதற்கு பதிலடியாக தமிழ்நாட்டில் ராவண லீலா நடத்துவோம்; ராமனை எரிப்போம் என பிரகடனம் செய்தார். அப்போது மத்தியில் பிரதமராக இந்திரா காந்தி அம்மையார் நடுநடுங்கிப் போனார். மணியம்மையாருக்கு இந்திரா கடிதம் எழுத, இந்திரா அம்மையாருக்கு மணியம்மையார் பதில் கடித அரசியல் களம் அப்போது அல்லோகலப்பட்டது. வட இந்திய தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வெற்றிகரமாக ராவண லீலா போராட்டத்தை நடத்தி கொடுத்தனர். 1990களிலும் தமிழ்நாட்டில் ராவண லீலா போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ராமன் படித்தது எங்கே?: சேதுசமுத்திர கால்வாய் பிரச்சனை வந்த போது அது ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என சோ கால்ட் ராம பக்தர்கள் குரல் எழுப்பினர். என்னது ராமர் பாலம் கட்டினரா? ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என அனல் பறக்கும் கேள்வியை கேட்டு இந்திய அரசியலையே அதிர வைத்த புரட்சிக்கு சொந்தக்காரர் மறைந்த முதல்வர் முத்துவேல் கருணாநிதி. அப்போது கருணாநிதி தலையை சீவுவோம் என்றெல்லாம் விலை வைத்தனர் சோ கால்ட் "சாதுக்கள்" . அவரது வழியில்தான் கருணாநிதி மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் சரி, கருணாநிதி பேரன் உதயநிதி ஸ்டாலினும் சரி சனாதன தர்மத்துக்கு எதிராக சண்டமாருதமாக கர்ஜிக்கின்றனர். இத்தகைய ஒரு மரபான ராமன் எரிப்புக்கு பதிலடியான ராவணன் பெருமிதம் பேசுதல் எனும் தொடர்ச்சியாகத்தான் இன்று ராமரை ஒட்டுமொத்த இந்திய நிலமும் கொண்டாடும் போது இயல்பாகவே தமிழர் நிலத்து பிள்ளைகள் "நாங்கள் இராவணின் பேரன்கள்" என செருக்குடன் முழங்குகின்றனர் என்பதே சரித்திரம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+