அதிமுகவை இழுக்கும் திமுக! ஸ்டாலின் ப்ளான் என்ன? ‘இருகட்சி’ ஆட்சியா?
சென்னை: அதிமுகவை அரவணைக்கப் பார்க்கிறதா திமுக என ஒரு சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், பாஜகவை எதிர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட உள்ள 'தொகுதி மறு வரையறை' ஆகியவற்றுக்கு எதிராக தனித் தீர்மானத்தைச் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தார். இந்தத் தனி தீர்மானம் அதிமுகவின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜகவை எதிர்த்து மாநில உரிமைகளுக்காகப் போராட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பால் எதிரும் புதிருமாக இருந்து வந்த திமுக, அதிமுக இடையே ஒரு நட்பு தொடங்கி உள்ளதைப் போல தெரிகிறது. பல மாதங்களாக எதிர்க்கட்சி துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு இருக்கையை ஒதுக்குவதில் சபாநாயகர் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்.
ஒபிஎஸ், இபிஎஸ் மோதலால் திமுக தரப்பு மவுனமாக இந்தப் பிரச்சினைக்கு ஒபிஎஸ் தரப்புக்குச் சாதமாகச் செயல்பட்டு வருவதைப் போல் ஒரு தோற்றம் இருந்து வந்தது. அப்போது பல விசயங்களுக்கு ஒபிஎஸ் திமுக சார்ப்பை எடுத்திருந்தார். ஆகவே, அந்தச் சலுகை தரப்படுகிறது எனப் பேச்சு அடிப்பட்டது.

ஆனால், இப்போது பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் வேகம் காட்டி வருகிறார். பாஜக ஆதரவில் ஒபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். ஆக, காட்சிகள் மாறிய உடன் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையும் மாறி இருக்கிறது.
சட்டமன்றத்தில் முதல்வரே எழுந்து சபாநாயகரிடம் இருக்கை ஒதுக்குவது தொடர்பாகப் பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆக, தாமரை மலர்கிறதா என்று தெரியவில்லை. அதிமுக, திமுக இடையே இப்போதைக்கு ஒரு நட்பு மலர்ந்து வருவதைப் போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்போது மட்டுமல்ல, இப்படி அதிமுக தரப்புக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறார் ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து இந்தியச் சமூக நீதி கூட்டமைப்பில் இணைய 37 கட்சித் தலைவர்களுக்குக் கடந்த 2 ஆண்டுகள் முன்னதாக அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். அப்போது அதிமுக சார்பாக ஒபிஎஸுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கு முன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகள் முன்னதாக அதிமுகவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகள் தாய்க் கழகமான திமுகவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அதற்கு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக தொண்டர் ஒருவரைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது' என்றார்.

அதைப்போல் 6 ஆண்டுகளுக்கு முன்னால் 2017இல் திமுக 'முரசொலி' பவளவிழா கொண்டாடப்பட்டது. அப்போது அதிமுக கூட்டணியிலிருந்த கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரிக்கு விழாவில் பங்கேற்கக் கூறி திமுக சார்பாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
இதில், கருணாஸ், தனியரசு ஆகியோர் நேரடியாகவே அதிமுக சின்னத்தில் நின்று வென்றவர்கள். அப்படி இருக்கும் போது அவர்களை திமுக அரவணைக்க முயன்றது.
கடந்த ஐந்து மாதங்கள் முன்பாக நடத்தப்பட்ட திமுக நீட் எதிர்ப்பு உண்ணா விரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, 'இணைந்து டெல்லிக்குச் செல்வோம் வாருங்கள்' என்று அதிமுகவுக்கு அழைப்புக் கொடுத்தார்.

இப்படித் தொடர்ந்து அதிமுகவுக்கு திமுக தரப்பு அழைப்பு விடுத்துக் கொண்டே உள்ளது. ஆனால், திமுகவைத் தீயசக்தி என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள் அதிமுகவினர். குறிப்பாக எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ஜெ காலம் வரை கருணாநிதியைத் தீயசக்தி என்றே அதிமுக தலைமை அடையாளப்படுத்தி வந்துள்ளது.
ஆனால், ஜெ மறைவின் போதுகூட ஜெயலலிதா இழப்பை ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே திமுக கூறியது. குறிப்பாக ஸ்டாலின் அவரை இரும்புப் பெண்மணி என்றே மரியாதையோடு அடையாளப்படுத்தினார்.

ஆனால், மு.கருணாநிதி மறைந்தபோது அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதே அரவணைப்போடு இறங்கி வரவில்லை. இறுதிவரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை அவர் ஏறக்குறைய ஜெயலலிதாவின் மனநிலையோடுதான் திமுகவை அணுகினார்.
இப்போதுகூட சட்டப்பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த பிறகும் கூட திமுகவை விமர்சித்தே கருத்துகளைக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
"நான் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பயணிகளுக்காக மத்திய அமைச்சரை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினோம்.

ஒரு காலகட்டத்தில் ஒரே திட்டத்திற்காக 63 ஆயிரம் கோடி நிதிக்கு அடிக்கல் நாட்டிய சரித்திரம் கிடையாது. இந்தப் பணிகள் எந்தளவுக்கு நடைபெற்றுள்ளது? மத்திய அரசு அதற்கு எவ்வளவு நிதி அளித்துள்ளது எனக் கேள்வி எழுப்பினேன். அதற்கும் பதிலளிக்கவில்லை.
அதிமுக ஆட்சியிலிருந்தபோது 50 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த காவேரி நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். அதில் வென்று தீர்ப்பையும் பெற்றார்.
அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்தது காவிரி நடுவர் மன்றம். அப்போது நாங்கள் மத்திய அரசுடன் கூட்டணியிலிருந்தாலும் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து 22 நாள்கள் நாடாளுமன்றத்தையே நடத்தவிடாமல் ஒத்திவைக்க அழுத்தம் கொடுத்தோம்.
இப்போது திமுகவுக்கு இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது மத்திய அரசு நிதியை அளிக்கவில்லை என்று அவையில் போராடி இருக்கலாமே? ஏன் அவையைத் தள்ளிவைக்க முயற்சி எடுக்கவில்லை? எதுவுமே செய்யவில்லையே?" என்று ஆவேசமாகப் பொங்கி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி இப்போது திமுக எதிர்ப்பிலும் பாஜக எதிர்ப்பிலும் வேகம் காட்டுகிறார். அது அவர் ஆளும் கட்சியாக இருந்தது முதல் தொடர்கிறது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, ஆளும் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த பிறகும் ஸ்டாலின் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அதிமுக தனக்குப் போட்டியாக இருப்பதை திமுக விரும்புகிறது. அந்த இடத்திற்கு பாஜக வந்துவிடாமல் தடுக்க, அதிமுகவும் திமுகவும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. அதற்குத்தான் இந்த அழைப்பு, உழைப்பு எல்லாம்?












Click it and Unblock the Notifications