"திராவிட மாடல்.!" அழுத்தமாகச் சொல்லும் எடப்பாடி.. மீண்டும் திமுக vs அதிமுக! பரபரக்கும் அரசியல் களம்
சென்னை: அதிமுக எதிர்க்கட்சியாகச் சரியாகச் செயல்படுவதில்லை என்ற சிலர் கூறி வரும் நிலையில், திராவிட மாடல் தொடர்பாக எடப்பாடி கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களில் வென்றது குறிப்பாக திமுக மட்டும் 133 இடங்களைக் கைப்பற்றியது.
ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த அதிமுக 66 இடங்களில் மட்டுமே வென்றது. அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 75 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது.

திமுக
அதைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்த நிலையில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளே அவர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆவின் பால் விலை குறைப்பு, மாநிலத்தில் இயங்கும் சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதற்குத் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வரவேற்பு
தனியார் பால் விலை பல்வேறு காரணங்களால் உயர்த்தப்படும் நிலையில், ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது நல்ல பலன் தருவதாக உள்ளதாக குடும்பத் தலைவிகள் தெரிவித்தன. அதைவிடச் சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் குறிப்பிட தகுந்த அளவு பணம் சேமிக்க முடிவதாகப் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

திராவிட மாடல்
அதைத் தொடர்ந்து ஓராண்டில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை அரசு கொண்டு வந்தது. இதை "திராவிட மாடல்" என்றே திமுகவினர் முன்னிலைப் படுத்தி வருகின்றனர். தற்போதைய அரசு திராவிட மாடல் அரசாகச் செயல்பட்டு வருவதாகவே திமுகவினர் கூறி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
எல்லாருக்கும் அனைத்தும் கிடைப்பதே திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளைப் பிற மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தத் துடிப்புடன் உள்ளதாக அவர் சமீபத்தில் கூறி இருந்தார். மற்றொரு நிகழ்ச்சியில் திராவிட மாடல் அரசானது இன்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அரசாக உள்ளது என்றும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தைத்தான் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன என்றும் கூறி இருந்தார்.

அதிமுக
தற்போதைய திமுக அரசு தான் திராவிட மாடல் அரசு என்று திமுகவினர் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக மற்றொரு திராவிட கட்சியான அதிமுக அழுத்தமாக எதுவும் கூறாமல் இருந்தது. அதிமுகவில் ஏற்கனவே எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையே உட்கட்சி மோதல் நிலவும் நிலையில், அது சரியாக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை என்ற விமர்சனமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

எடப்பாடி பழனிசாமி
இந்தச்சூழலில் முதல்முறையாக திராவிட மாடல் தங்களுடையது என்ற ரீதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி நீட் விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார். தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அடித்தளமிட்டதே அதிமுக தான் என்ற அவர், திராவிட மாடல் குறித்தும் பேசினார்

திராவிட மாடல்
"திராவிட மாடல், திராவிட மாடல் என ஸ்டாலின் மூச்சுக்கு 300 தடவை சொல்கிறார்... அப்படி என்ன தான் செய்தீர்கள்? உண்மையில் திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சியே அதிமுக தான். திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான்" என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், அதிமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களை திமுக நிறுத்திவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

முக்கியம்
அதிமுக முறையான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே திமுக vs அதிமுக என்றே இருக்கும் அரசியல் விரைவில் மாறும் எனச் சிலர் கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் திராவிட மாடல் குறித்த இந்தப் பேச்சு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications