'ராங்' சிக்னல்.. பாஜகவின் ‘செங்கல்’ பயம்.. ஈபிஎஸ் வயிறு ‘கபகப’னு எரியுதாம்.. சொல்றது யார்னு பாருங்க!
பாஜகவினரை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்கின்றனர் அதிமுகவினர் எனக் கூறியுள்ளார் சரவணன்.
சென்னை : எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகக் கடுமையான வார்த்தைகளைப் பேசுவதற்கு அவர் முதல்வர் ஸ்டாலின் மீது கொண்டிருக்கும் வயிற்றெரிச்சல் தான் காரணம் என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் விமர்சித்துள்ளார் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் எல்லை மீறிய வார்த்தைகளில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலையும் செங்கலுடன் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில், ஈரோடு பிரச்சாரக் களம் எப்படி இருக்கிறது, இந்த கடுமைக்குக் காரணம் என்ன என்பது பற்றிய நமது கேள்விகளுக்கு திமுக செய்தித் தொடர்பாளரும், தணிக்கைக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை பதிலளித்துள்ளார்.

அதிமுகவில் பாஜக எதிர்ப்பு
கேள்வி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். விரைவில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யப்போகிறார்.. ஈரோடு களம் எப்படி இருக்கிறது?
திமுக சரவணன் : ஈரோடு தேர்தல் களத்தில் கை சின்னம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இரட்டை இலை பிளவுபட்ட இலையாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குள் இணக்கம் இல்லை. அதையும் தாண்டி அதிமுக தொண்டர்கள் யாருமே பாஜக கூட்டணியை விரும்பவில்லை. பாஜகவினரை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்கின்றனர் அதிமுகவினர். ஆனால், அது தவறான சிக்னல் ஆகும் என்பதால் அண்ணாமலை பிரச்சாரம் செய்துள்ளார். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் பாஜகவை தேவையில்லாத சுமையாகவே கருதுகிறார்கள். அதிமுகவின் தோல்விக்கு பாஜகவே முக்கிய காரணம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதிமுக தலைவர்கள் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தாங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துகளை காப்பாற்றிக் கொள்ளவும் தான் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறார்கள்.

திட்டமிட்ட அஜெண்டா
தமிழர்கள் நலனுக்காக எதையும் செய்யாத கட்சி பாஜக. தமிழ்நாட்டில் பாஜகவை தவிர ஒட்டுமொத்த கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விட்டால் தமிழ்நாட்டில் நீட் இருக்காது. அந்த கையெழுத்தைப் போட மறுக்கிறார்கள். நீட் தேவையில்லாத அணி. நாங்கள் பொய்யான நம்பிக்கையை அளிக்கவில்லை. இதுதான் நீட்டுக்கு எதிரான எங்கள் நிலைப்பாடு. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவோம் என்ற எங்கள் வாக்குறுதி இன்னும் நிறைவேறாததற்கு காரணம் பாஜக. பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் தாமதம் செய்தார். திமுக நீட் பற்றி ஆட்சிக்கு வந்தபிறகு கண்டுகொள்ளவில்லை என்றால் குற்றம் சுமத்தலாம். ஆனால், வேண்டுமென்றே ஒரு அஜெண்டாவோடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

செங்கல் பயம்
கேள்வி : அண்ணாமலை, தமிழ்நாட்டுக்கு 10 மருத்துவக் கல்லூரிகளை அளித்திருக்கிறோம் என உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த செங்கலை வைத்தே பிரச்சாரம் செய்திருக்கிறாரே..
திமுக சரவணன் : உதயநிதி கையில் கொண்டு வந்த செங்கல் பாஜகவை அவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது. எந்த செங்கலை தூக்கி உதயநிதி பிரச்சாரம் செய்தாரா அதே செங்கலைத் தூக்கிக்கொண்டு அண்ணாமலையும் பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். உதயநிதி ஒரு அருமையான கேள்வியைக் கேட்டார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்குள், கிங்ஸ் மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் ஆகிய மிகப்பெரிய கட்டிடங்களை கட்டி முடித்துள்ளோம். 6 வருடங்களாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் கட்ட முடியவில்லை என்று கேட்டால், ‘கொட்டைப் பாக்கு விலை கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி சொல்வதாக' அமைந்திருக்கிறது அண்ணாமலையின் பேச்சு. செங்கல் பிரச்சாரம் மனதளவில் தாக்கியிருப்பதால், அதே ஆயுதத்தை அவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதே உதயநிதி பிரச்சாரத்தின் மிகப்பெரிய வெற்றி.

வயிற்றெரிச்சல்
கேள்வி : எடப்பாடி பழனிசாமி, மீசை வச்ச ஆம்பளையா வேட்டி கட்டிய ஆம்பளையா என்றெல்லாம் கடுமையாக பேசி இருக்கிறார். அவருக்கு கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். பிரச்சாரத்தில் வார்த்தைகள் எல்லை மீறிப் போவதும், அதே பாணியில் பதில் தருவதும் சரியான அணுகுமுறையா?
திமுக சரவணன் : ஒரு வினை இருந்தால், அதற்கு எதிர்வினை இருக்கும். ஒரு முன்னாள் முதல்வர் தரம் தாழ்ந்த, பாலின சமத்துவமற்ற விமர்சனத்தை வைக்கலாமா? ஆண் என்றால் கொம்பு முளைத்தது போல பேசுவது முன்னாள் முதல்வருக்கு அழகா? அதற்குத்தான் உதயநிதி கேட்டார், 6 நாள் ஷேவ் பண்ணாமல் விட்டால் எல்லோருக்கும் வருவது தானே மீசை? அந்த மீசை யார் காலுக்கு பாலிஷ் போட்டது? என கேள்வி எழுப்பினார். திமுக, ஆட்சியில் செய்த சாதனைகளையும், பாஜக செய்த வஞ்சனைகளையும், அதிமுக எப்படி பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது என்பதையும் தான் பிரச்சாரத்தில் பேசுகிறோம். யாரையும் தனிப்பட்ட தாக்குதல் செய்யவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, இந்தளவுக்கு தரம் தாழ்ந்து பேசுகிறார் என்றால் அதற்குக் காரணம், தமிழக முதல்வர் மீது அளவுகடந்த பொறாமை, வயிற்றெரிச்சல். இப்படிப்பட்ட சிறப்பான ஆட்சியைக் கொடுத்து செல்வாக்கு பெற்றிருக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் பேசிக்கொண்டிருக்கிறார்.

எடப்பாடிக்கு பொறாமை
கேள்வி : திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 கொடுக்கவில்லை என பிரச்சாரக் களத்தில் பேசுகிறாரே ஈபிஎஸ்?
திமுக சரவணன் : குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும். ஆட்சிக்கு வந்ததுமே ரூ. 4000 கொடுத்தோம், பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்தோம், பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தைக் கொண்டு வந்தோம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 கொடுத்தோம்.. இவற்றை எல்லாம் எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டாரே. இதெல்லாம் இவர்களின் எண்ணத்தில் உதித்ததா? நாமும் ஆட்சியில் இருந்தோம், நாம் இதையெல்லாம் செய்யவில்லையே என்ற எண்ணத்தில் ஆற்றாமை, பொறாமையை அவர்களிடத்தில் உண்டு பண்ணி இருக்கிறது. அதனால் தான் இப்படிப்பட்ட தரங்கெட்ட விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications