இனி 3 மாதங்கள் நெருங்க கூட முடியாது.. செந்தில் பாலாஜிக்கு சிக்கலே இல்லையாமே! அதிரும் அமலாக்கத்துறை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு 3 மாதங்கள் வரை ஓய்வு தேவைப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு இதய அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 90 சதவிகிதம் வரை அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு பைபாஸ் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் செய்யப்பட இன்று அதிகாலை நேரம் குறிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு முன் நேற்று அவருக்கு செய்ய வேண்டிய சோதனைகள் எல்லாம் செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அவருக்கு பைபாஸ் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆபரேஷன் அறைக்கு கொண்டு செல்லப்பட்டவருக்கு 6 மணிக்கு ஆபரேஷன் தொடங்கியது. 9 மணி வரை இந்த ஆபரேஷன் நடந்தது. தற்போது இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்று காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்றாலும் இதய துடிப்பு தொடங்கி ரத்த அழுத்தம் வரை எல்லாம் நன்றாகவே உள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும். இதற்காக அவருக்கு மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன.
அந்த மருந்துகள் காரணமாக செந்தில் பாலாஜி இன்னும் மயக்க நிலையிலேயே இருக்கிறார். அவரின் இதயத்துடிப்பு, ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பைபாஸ் செய்தால் ஒன்று முதல் 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி 2 நாட்கள் ஐசியுவில் இருப்பார். அதன்பின் 1 மாதம் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். வெளியே நடக்க, இயல்பு நிலைக்கு திரும்ப, பணிகளை செய்ய 3 மாதங்கள் ஆகும். சிலருக்கு அதற்கும் மேல் ஆகும். பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் சிலருக்கு மாறும் என்பதால் ஓய்வு பெறும் காலமும் மாறலாம்.
செந்தில் பாலாஜியை இப்போதைக்கு டிஸ்சார்ஜ் செய்ய மாட்டார்கள். குறைந்த பட்சம் 7- 10 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அதற்கு பின்பே அவரை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி யோசனை செய்வார்கள், என்று கூறப்படுகிறது.
விசாரணை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு 3 மாதங்கள் வரை ஓய்வு தேவைப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமலாக்கத்துறை அவரை விசாரிப்பது சிக்கல் ஆகி உள்ளது.
அவரை 8 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் அவர் உடல்நிலையை காரணம் காட்டி இன்னும் அமலாக்கத்துறை அவரை கஸ்டடியில் எடுக்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
வழக்கு பின்னணி: போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் தொடர்பான பண மோசடி விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரின் மீது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் 1 மணி நேரத்தில் 200 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளன. கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தினர்.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படியில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது அமலாக்கத் துறை.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு செய்யப்பட்ட ஆஞ்சியோவில் 90 சதவிகித அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அதற்காக தனியார் மருத்துவனையில் அட்மிட்டானார் செந்தில் பாலாஜி.
உயர் நீதிமன்ற அனுமதிக்கு பின்பே அவர் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை அவரை 15 நாட்கள் கஸ்டடி எடுக்க முயன்று 8 நாட்கள் கஸ்டடி பெற்றது. 8 நாட்கள் கஸ்டடி கிடைத்தும் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்த அமலாக்கத் துறையால் முடியவில்லை. காரணம் செந்தில் பாலாஜியின் உடல்நிலை.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு உண்மையாகவே பை பாஸ் சிகிச்சை செய்யப்படவிருக்கிறதா என்பதை அறிய டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களை அனுப்பி, சோதித்துப் பார்க்க மத்திய அரசிடம் கேட்டுள்ளனர் அமலாக்கத் துறையினர்.
இதனையறிந்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் , பைபாஸ் சிகிச்சையை 22- ந்தேதி நடத்தலாம் என முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கஸ்டடி காலத்தை நீட்டித்து தர, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் தயாராகி வருகின்றனர் அமலாக்கத் துறையினர். செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவதற்காக 100-க்கும் அதிகமான கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மட்டுமின்றி இந்த வழக்கிற்கு அப்பாற்பட்டும் ஏகப்பட்ட விஷயங்களை விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம். எப்படியும் தங்களின் விசாரணைக்கு செந்தில் பாலாஜியை கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜிக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. விசாரணையின் போது அந்த வழக்கிலும் கைது செய்யப்படுவார் என்கிறது அமலாகத்துறை வட்டாரம். அதனால் செந்தில் பாலாஜி மீது மேலும் பல வழக்குகள் பாயவிருக்கிறது.












Click it and Unblock the Notifications