லோக்சபாவில் 543 இடங்களிலேயே மகளிருக்கு 33% கொடுக்காமல்.. தொகுதியை உயர்த்த பாஜக துடிப்பது ஏன்? காரணம் என்ன?
சென்னை: நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள 543 இடங்களிலேயே மகளிருக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வரமுடியும். இதற்கான வழிகள் அரசியல் அமைப்பில் இருந்தாலும், இதனை செய்யாமல் தொகுதி மறுவரையறை கொண்டு வந்து மகளிருக்கான இட ஒதுக்கீடு செய்ய பாஜக நினைப்பது ஏன்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நாடளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு கூட்டியுள்ளது. இந்த கூட்டம் எதற்காக என்றால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்டுள்ளது.

தற்போதைய எண்ணிக்கையை கூட்டாமலே
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கோரிக்கையாக உள்ளது. சொல்லப்போனால் எதிர்க்கட்சிகளும் இதனை வரவேற்கவே செய்கின்றன. ஆனால், தொகுதி மறுவரையறைக்கே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சரி அது ஒருபக்கம் இருக்கட்டும்.. தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்தே மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.
தற்போது நாடாளுமன்றத்தில் 543 இடங்கள் உள்ளன. இதில் 33 சதவீதம் ஒதுக்கினால் 181 தொகுதிகள் கிட்ட வரும். அரசியல் அமைப்பின் ஆர்டிகிள் 330 மற்றும் 332 ஆகியவை இந்த அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு வழிவகையும் செய்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தற்போதைய எண்ணிக்கையை கூட்டாமலே இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
சிட்டிங் எம்பிக்கள் மாற வேண்டி வரும்
181 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டால் மீதமுள்ள 362 தொகுதிகள் அனைவரும் போட்டியிடும் தொகுதியாக இருக்கும். காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் தற்போது உள்ள எண்ணிக்கையை வைத்தே மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தொகுதிகளின் எண்ணிக்கையினை கூட்டவோ குறைக்கவோ தேவையில்லை என்பதுதான் அந்தக் கட்சிகளுடன் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் பாஜக மட்டும் இந்த எண்ணிக்கையை கூட்டியே ஆக வேண்டும் என நினைப்பது ஏன் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போது உள்ள 543 தொகுதிகளில் 181 தொகுதிகளை ரிசர்வ் செய்வதால், தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள பல ஆண் எம்பிக்கள் தங்கள் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். இதனால், தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அவர்கள் இழப்பார்கள், அல்லது வேறுதொகுதிக்கு மாற வேண்டியிருக்கும். இது அரசியல் ரீதியாக கொஞ்சம் சிக்கலான விஷயமாக பார்க்கிறது பாஜக.
தங்களுக்கு சாதகமாக உள்ள மாநிலங்கள்
850 ஆக தொகுதிகளை உயர்த்தினால், 273 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படும். இதனால், எந்த சீட்களும் பறிக்கப்படாது. சொல்லப்போனால் ஆண் எம்பிக்கள் போட்டியிடும் தொகுதிகளும் அதிகரிக்கவே செய்யும். தொகுதி இடஒதுக்கீட்டை சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளுடன் அரசியலமைப்பு இணைக்கிறது; ஆனால் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகியுள்ளதால், அரசு 2011 தரவுகளை பயன்படுத்தி பின்னர் தொகுதிகளை விரிவுபடுத்தி மறுவரையறை செய்ய விரும்புகிறது.
ஆனால், தங்களுக்கு சாதகமாக உள்ள மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபடுத்த பாஜக பின்வாசல் வழியாக முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது. சிறிய கட்சிகளும், தமிழ்நாடு மற்றும் கேரள போன்ற தென் மாநிலங்களும் மத்திய அரசின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. தொகுதி மறுசீரமைப்பால் தங்களுக்கு உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து போகும் என்பதே தென் மாநிலங்கள் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
எளிய முறையில் சொல்வது என்றால், தற்போது உள்ள 543 தொகுதிகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியும். பல கட்சிகளும் இதனையே விரும்புகின்றன. ஆனால், சிட்டிங் எம்பிக்களின் தொகுதிகள் பறிபோகும் என்பதால் இந்த தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த பாஜக முயற்சிக்கிறது. 2029 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஆளும் கூட்டணியின் நிலையை வலுப்படுத்தவும் பாஜக இதன் மூலம் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.















Click it and Unblock the Notifications