"நோ சான்ஸ்..!" சிவகாசி பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதித்த டெல்லி! என்ன காரணம் தெரியுமா
சென்னை: இந்தியாவே தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், சிவகாசி பட்டாசுகளுக்கு டெல்லி ஏன் தடை விதித்து உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் வரும் அக். 24இல் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்தியாவே தயாராகி வருகிறது. தீபாவளி என்றே பட்டாசுகளும் இனிப்புகளும் தான் நினைவுக்கு வரும்.
இருப்பினும், அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக பல்வேறு மாநிலங்களும் பட்டாசுகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இது சிவகாசி தொழிலாளர்களுக்குச் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சுப்ரீம் கோர்ட்
தலைநகர் டெல்லியில் பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து பாஜக எம்பி மனோஜ் திவாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "டெல்லியில் இப்போது இருக்கும் காற்று மாசை பார்க்கும் போது எப்படி பட்டாசுகளை அனுமதிக்க முடியும். அது பசுமை பட்டாசுகளாக இருந்தாலும் அனுமதிக்க முடியாது" என்று கடிந்து கொண்டது. எனவே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பின்வாங்காது என்பது உறுதியாகத் தெரிகிறது.

காற்று மாசு
முன்னதாக கடந்த 2020இல் காற்று மாசு தரவு 200க்கு மேல் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்கத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. காற்றின் தரம் 100க்கு கீழ் இருந்தால் மட்டுமே நல்லதாகக் கருதப்படும். இருப்பினும், டெல்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் 400க்கு மேல் தான் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி சமயத்தில் காற்றின் தரம் மிக மோசமானதாகவே இருந்து உள்ளது.

மற்ற காரணங்கள்
இருப்பினும், இதை மறுக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், "கடந்த ஆண்டு டெல்லியில் பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்த போதிலும், காற்றின் தரம் மோசமானதாகவே இருந்தது. டெல்லி மாசுக்குப் பட்டாசுகள் காரணமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கும் மாநிலங்கள், மற்ற நாட்களில் காற்று மாசு குறித்துக் கண்டுகொள்வதில்லை. உண்மையில் காற்று மாசுக்கு என்ன காரணம் என அனைவருக்கும் தெரியும்" என்றார்.

முதல்வர் கடிதம்
சிவகாசி பட்டாசுகளுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாகக் கடிதம் எழுதி இருக்கிறார். காற்று மாசுக்கு வாகனங்கள் உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், வேறு எந்த மாநிலமும் பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கவில்லை என்றும் இதனால் பல லட்சம் சிவகாசி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தடையை நீக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

ஐஐடி ஆய்வு
காற்று மாசுக்குக் காரணமாக இருக்கும் மற்ற காரணிகளைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசு பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றே பட்டாசு விற்பனையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். காற்று மாசுக்குப் பட்டாசுகள் ஒரு சதவிகிதம் மட்டுமே காரணம் கான்பூர் ஐஐடி ஆய்வில் தெரிய வந்த பிறகும் அதற்குத் தடை விதிப்பது தவறு என்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அறுபடை காலங்கள்
கல்வி அமைச்சகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்திய ஆய்வில், "தீபாவளி பெரும்பாலும் பயிர் அறுவடைக் காலத்திலேயே வருகிறது. அறுவடைக் காலத்தில் பயிர்கள் எறிக்கப்படுகிறது. இரண்டுமே காற்றின் தரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இரண்டும் ஒரே நேரத்தில் வருவதால் பட்டாசு மற்றும் பயிர் எரிப்பு இரண்டில் எது காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடிவதில்லை" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

மற்ற காரணங்கள்
டெல்லி காற்றில் PM2.5 துகள்கள் 1100 சதவீதம் உயர்கிறது. தீபாவளியின் போது இதற்கு 95 சதவிகிதம் பட்டாசு மட்டுமே காரணமாக இருக்கிறது. இருப்பினும், தீபாவளிக்குப் பிறகு வெறும் 12 மணி நேரத்திற்குள் பட்டாசுகளின் தாக்கம் குறைவதாகவும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் தீபாவளிக்கு முன்பு பல்வேறு பொருட்கள் எரிக்கப்படும் நிலையில், அதுவே காற்று மாசுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

வேதனை
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் காற்று மாசுக்குக் காரணமாக உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் டெல்லி அரசு கவனம் செலுத்த வேண்டும். பட்டாசு தடை என்பது சிவகாசியில் உள்ள பல லட்சம் தங்கள் வாழ்க்கையையே பாதிப்பதாகச் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications