"மனசாட்சி".. யாருன்னு தெரியாதுன்னு நினைக்காதீங்க.. லிஸ்ட் இருக்கு! சீறிய ஸ்டாலின்.. தகித்த அறிவாலயம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்களிடம் கண்டிப்புடன் பேசி இருக்கிறாராம்.
முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் "கலைஞர் அரங்கத்தில்" இந்த கூட்டம் நடைபெற்றது.
உட்கட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், அரசு மீது உள்ள சில விமர்சனங்கள், பல்வேறு மாவட்டங்களில் நிலவும் பூசல்கள் என்று பல விஷயங்கள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

தீர்மானம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் வரும் ஜூன் 3ம் தேதி வர உள்ளது. இந்த நிலையில் அந்த பிறந்த நாள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இது போக திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரண்டு முக்கியமான விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

திமுக கூட்டம்
அதன்படி மாவட்ட செயலாளர்கள் - அமைச்சர்கள் சேர்ந்து செயல்பட வேண்டும். இவர்களுக்கு இடையில் நல்ல உறவு இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறாராம். சமீப காலங்களில் நன்றாக செயல்பட்ட சில மாவட்ட செயலாளர்களையும் அவர் பாராட்டி இருக்கிறாராம். இதெல்லாம் போக.. கட்சி தொண்டர்களை எப்போதும் மதியுங்கள். அவர்கள்தான் நமக்கு முக்கியம். மேலே இருப்பவர்களை விட, கீழே கட்சி பணிகளை செய்யும் தொண்டர்கள்தான் முக்கியம். தேர்தல் நேரத்தில் மட்டும் நாம் போக கூடாது.

தொண்டர் முக்கியம்
அவர்களின் மனம் நோகாமல் மாவட்ட செயலாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொண்டர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியது பற்றி நேற்றே பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தன. அதே சமயம் சில மாவட்ட செயலாளர்களை முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கண்டித்தும் இருக்கிறாராம். இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்த போது.. திமுகவில் உட்கட்சி தேர்தலை இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

அமைப்பு ரீதியான தேர்தல்
தற்போது அமைப்பு ரீதியான பொறுப்புகளுக்கு தேர்தல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் சிலர் இந்த தேர்தலில் சரியாக செயல்படவில்லை என்றும், முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தலைமைக்கு புகார் சென்று இருக்கிறதாம். அதேபோல் தேர்தல் ஆணையராக கட்சி சார்பாக நியமிக்கப்பட்டவர்களும் சரியாக செயல்படவில்லை என்று புகார் சென்றுள்ளதாம். சில இடங்களில் நிர்வாகிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

கண்டித்தார்
இதையடுத்தே நேற்று நடந்த மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி நேரடியாக கேள்வி எழுப்பி இருக்கிறாராம். அதில், உட்கட்சி தேர்தலில் சிலர் செய்த தவறுகள் பற்றி எனக்கு தகவல் வந்துள்ளது. தவறு செய்தவர்கள் யார் யார் என்று எனக்கு தெரியும். அவர்களை பற்றி எனக்கு தெரியாது என்று நினைக்க வேண்டாம். என்னிடம் லிஸ்ட் இருக்கிறது. தவறு செய்தவர்கள் யார் என்று அவர்களின் மனசாட்சிக்கும் தெரியும்.

லிஸ்ட் இருக்கிறது '
லிஸ்டை கவனித்து வருகிறேன். அவர்கள் மீது விசாரணைக்கு பின் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். எல்லோரும் கவனமாக, நேர்மையாக செயல்படுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசி இருக்கிறாராம். திமுகவில் ஒரு மாதத்திற்குள்ளாக உட்கட்சித் தேர்தல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து, பின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் சில மாவட்ட செயலாளர்களிடம் கண்டிப்புடன் பேசி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications