முருங்கை மரம்? கமலை "இழுழுழுக்கும்" திமுக? 1 சீட் எப்படி வாங்குறது? காங்கிரஸுக்கு வேற திக் திக் திக்
சென்னை: திமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை.. அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதேசமயம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் பற்றின பரபரப்புகளும் அடங்கவில்லை. இதில், மக்கள் நீதி மய்யம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இப்போதைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்ற கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது.

மய்யம்: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் இணைய போகிறது என்ற தகவல்கள் கடந்த ஒரு வருட காலமாகவே வட்டமடித்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு வருட காலமாகவே, மய்யத்துக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? கமல் எங்கே களம் காண போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்தபடியே உள்ளன.
ஆரம்பத்தில் 4 சீட்டுக்களை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்ற முடிவெடுத்த மய்யத்தினர், இறுதியில் 2 தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.. அதேபோல, கோவையையும் விட்டுக் கொடுக்ககூடாது என்பதிலும் திடமாக இருந்து வருகிறார்கள்.
கோவை தொகுதி: கோவை தொகுதியை, கமல் தரப்பு கேட்டதுமே, ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்கள் திடுக்கிட்டுப்போனார்கள்.. பிறகு, தங்களது தொகுதியை கமலுக்கு கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்வந்துள்ள நிலையில், கோவையில் மய்யத்தினரின் நிம்மதி பெருமூச்சு கேட்க துவங்கியிருக்கிறது.
இப்போது, அடுத்த குழப்பம் மீண்டும் ஆரம்பமானது.. தென் சென்னை அல்லது மதுரை தொகுதியை எப்படியாவது திமுகவிடம் கேட்டு வாங்கிவிட வேண்டும் என்பதும் மய்யம் மிகுந்த கவனத்தோடு காய் நகர்த்தி வருகிறது. ஒருவேளை இதற்கு உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் கோவையில் மட்டுமே கமல் களமிறங்கக்கூடும். ஆனால், ஒரே ஒரு சீட் மட்டும் ஒதுக்கினால் எப்படி அதை ஏற்பது? என்பதுதான் மய்யத்தினரிடம் எழுந்துள்ளது.
இழுபறி: திமுக 2 சீட்டுக்களை ஒதுக்காமல் போனால், ஒரு பாராளுமன்ற தொகுதி + மேல்சபை எம்பி பதவியையாவது கேட்டு பெற வேண்டும் என்பதே மய்யத்தினரின் திடமாக முடிவாக இருந்து வருகிறது.
இதற்கு காரணம், கடந்த தேர்தல்களில் 7.35% முதல் 9.62% வரை வாக்குகள் பெற்றுள்ளதால், இந்த புள்ளிவிவரங்களை காட்டியே, 2 தொகுதிகளை மய்யம் கேட்கிறதாம்... ஆனாலும் 1 சீட் மட்டுமே கமலுக்கு ஒதுக்க திமுகவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதுவரை அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை மய்யம் - திமுக தரப்பில் முன்னெடுக்கப்படவில்லை.. மறைமுகமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வரும்நிலையில், இழுபறிக்கு காரணம் இந்த சீட் விவகாரங்கள்தான் என்கிறார்கள்..
1+1 ஓகேவா?: நாளை மறுநாள் ஷூட்டிங் காரணமாக கமல்ஹாசன் வெளிநாடு செல்ல உள்ளதால், இன்றோ அல்லது நாளையோ இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என்றும், இது தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications