யாரை திருப்திப்படுத்த இந்த பிளான்? விடவே விடாத ஓபிஎஸ்.. அதிர்ந்து பார்த்த திமுக! 1 வாரமா சரியில்லையே
சென்னை: மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை என அனைத்திலும் திமுகவினரின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த அறிக்கை விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் சென்னையில் நடந்த சிஎஸ்கே மேட்சை நேரில் கண்டுகளித்தார்.மேட்ச் இடைவெளியில் அங்கே அமர்ந்து இருந்த முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உடன் சிறிய சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
ஓ பன்னீர்செல்வம் சிஎஸ்கே மேட்சின் போது இப்படி திடீரென போட்ட மீட்டிங் டெல்லி தரப்பை கோபத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது மரியாதை ரீதியான சந்திப்பு என்று ஒரு பக்கம் கூறப்பட்டது. இன்னொரு பக்கம் எடப்பாடியை எதிர்க்க அவர் திமுகவின் உதவியை நாடுகிறார் என்றும் கூறப்பட்டது .

எடப்பாடி - பாஜக நெருக்கம் ஆனதால் ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்க்கிறார் என்று கூறப்பட்டது. இதை வசதியாக பயன்படுத்திக்கொண்ட அதிமுக தரப்பும் ஓ பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட.. பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்று விமர்சனம் செய்து இருந்தார்.
ஓபிஎஸ் திமுகவுடன் நெருக்கமாக செல்கிறாரோ என்று டெல்லி தரப்பு நினைக்க தொடங்கி உள்ளதாம்.
இதை சரிகட்ட கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் திமுகவிற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். திமுகவின் 2 ஆண்டு ஆட்சி முடிந்ததும் அதை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அதன்பின் பா ரஞ்சித் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக குரலில் பேசினார்.
இந்த நிலையில் இன்று, மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை என அனைத்திலும் திமுகவினரின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த அறிக்கை விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதில், திமுகவினரின் அராஜகத்தை, அத்துமீறல்களை கட்டுப்படுத்தி வைத்தாலே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் 50% குறைந்துவிடும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையிலும், சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது, காவல் துறையையே மிரட்டுபவர்கள் மீது, கட்சி வித்தியாசமின்றி திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்திடுக, என்று கூறி உள்ளார்.
அதாவது திமுகவை நான் எதிர்க்கிறேன் என்று நிரூபிக்கும் விதமாக கடந்த 1 வாரமாக வரிசையாக திமுகவிற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பாஜகவை சமாதானம் செய்யும் விதமாக அவர் இந்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

அறிக்கை: இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டதிட்டங்களை அனைவரும் மதித்து நடந்தால் அங்கே காவல் துறைக்கோ, நீதிமன்றத்திற்கோ எவ்வித வேலையும் இல்லை. இது இல்லாத சூழ்நிலையில், பொது அமைதியைக் காக்க காவல் துறையின் நடவடிக்கை அவசியம் தேவைப்படுகிறது. சட்டதிட்டத்தை மதிப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும்; சட்டத்தையும், மற்றவர்களின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடிய எதிரியாகவும் காவல் துறை விளங்க வேண்டும்.
அதாவது, காவல் துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரி என்ற பக்கம்தான் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட காவல் துறையையே மிரட்டும் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்களும் தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.
அண்மையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் விசாரணை மேற்கொண்டிருந்த காவல் ஆய்வாளரை, கொளத்துப்பாளையம் நகர தி.மு.க. செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தக்கூடாது' என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த ஆய்வாளர் மறுக்கவே, "தொப்பியை கழட்டி விடுவேன், ஜாக்கிரதை" என்று ஆய்வாளரை தி.மு.க. செயலாளர் மிரட்டியுள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
இதே திருப்பூர் மாவட்டம், அவிநாசி, நம்பியாம்பாளையத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையில் ஆதரவாளர்களுடன் நுழைந்த தி.மு.க. நிர்வாகி அங்குள்ள உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிகப் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது. தமிழ்நாட்டில் காவல் துறையினரையும், பொதுமக்களையும் மிரட்டும் அளவுக்கு தி.மு.க.வின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது. தனது கடை
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் 'திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்' என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து தி.மு.க. கூட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. சாதனை என்ற பெயரில் மக்களுக்கு வேதனையை தி.மு.க.வினர் அளித்து வருகின்றனர்.
இது தவிர மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை என அனைத்திலும் தி.மு.க.வினரின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது. அண்மையில், போதை பொருள் கடத்தல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நேற்று பத்திரிகையில் வெளியான செய்திகள். வெளியாகாத செய்திகள் பல உள்ளன.
இதுபோன்ற செயல்கள்தான் தமிழ்நாடு முழுவதும் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. தி.மு.க.வினரின் அராஜகத்தை, அத்துமீறல்களை கட்டுப்படுத்தி வைத்தாலே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் ஐம்பது விழுக்காடு குறைந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
எனவே, பொதுமக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையிலும், சட்டவிரோதமாக செயல்படுபவர்கள்மீது, காவல் துறையையே மிரட்டுபவர்கள்மீது, கட்சி வித்தியாசமின்றி கடும் நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications