போச்சு! ஜெயலலிதா மரண விசாரணை.. பட்டென சசிகலா பக்கம் திரும்பிய "குறி".. அப்போ ஓபிஎஸ்! மேட்டரே வேறயாமே
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது.
இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.
அதற்கு முன்பாக நேற்று இந்த அறிக்கை பற்றி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனையில்தான் சசிகலா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலா
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெ.ஜெயலலிதா 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் அ.ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையத்தால் 27.08.2022 அன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா
இவ்வறிக்கை அறிக்கையும் குறித்து அமைச்சரவை விரிவாக விவாதம் செய்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருமதி V.K.சசிகலா, திரு சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது, என்று தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை
இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. ஜெயலலிதாவிற்கு கடைசியில் உடல்நிலை குன்றியது எப்படி என்ற எய்ம்ஸ் அறிக்கை மட்டுமே வெளியானதே தவிர ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்னும் சீக்ரெட்டாகவே உள்ளது. இந்த நிலையில்தான் அந்த அறிக்கையின் அடிப்படையில் சசிகலாவை விசாரிக்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அப்படி என்றால் அந்த அறிக்கையில் இருந்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்
சசிகலாவிற்கு எதிராக இந்த அறிக்கையில் ஏதாவது இருந்ததா? அதன் காரணமாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அப்போதைய தலைமை செயலாளரை விசாரிக்கும் தமிழ்நாடு அரசு.. அப்போதைய மூத்த அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை ("ஆக்டிங்" முதல்வர்) ஏன் விசாரிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் மூலம் சசிகலாவிற்கு எதிராக ஆணையத்தில் முக்கியமான குறிப்புகள் எதுவும் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விசாரணை
முன்னதாக ஆறுமுக சாமி ஆணையாய் விசாரணையில் தொடக்கத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆஜர் ஆவதை தவிர்த்து வந்தார். 8 முறை விசாரணைக்கு அழைத்தும் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நிலையில் நேற்றும், சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு ஆஜர் ஆனார். ஆணையத்தின் 120 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார் . சசிகலா தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய 34 கேள்விகளுக்கும் அப்போலோ தரப்பு வழக்கறிஞரின் 11 கேள்விகளுக்கும் ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

ஓபிஎஸ்
மொத்தம் ஆறுமுக சாமி தரப்புதான் இவரிடம் அதிகம் கேள்வி எழுப்பியது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். சசிகலா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சசிகலா இந்த விஷயத்தில் சதித்திட்டம் தீட்டியதாக நினைக்கிறீர்களா என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பினார். இதற்கு சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை. அவர் மீது இப்போதும் தனக்கு மதிப்பு உள்ளது என்று ஓபிஎஸ் பதில் அளித்தார்.

என்ன காரணம்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சசிகலா வேறு யாரையும் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இருந்த மாடிக்கு அமைச்சர்கள் யாரும் செல்ல முடியவில்லை என்று ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் கொடுத்து இருந்தார். ஒருவேளை இதன் அடிப்படையில் தற்போது இந்த வழக்கில் சசிகலா குறி வைக்கப்பட்டு உள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது.. இந்த அறிக்கை விவரங்கள் மொத்தமாக வெளியானால் மட்டுமே சசிகலாவை அரசு விசாரிக்கும் முடிவை ஏன் எடுத்தது என்ற விவரங்கள் வெளியாகும்.












Click it and Unblock the Notifications