கார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றமும்.. மலை உச்சி தீபத் தூணும்! 15 ஆண்டுகளாய் என்ன தான் நடக்கிறது?
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுதல் தொடர்பாக மதுரை முழுவதுமே பரபரப்பு நிலவுகிறது. திருப்பரங்குன்ற மலையில் தூணில் தீபம் ஏற்றுவதற்கும், உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்? திருப்பரங்குன்றத்தை சுற்றி கடந்த சில ஆண்டுகளாக என்ன நடந்து வருகிறது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் முருகப்பெருமான் காலையில் தங்க சப்புரத்திலும், மாலையில் தங்க மயிலிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மேலும் தங்க குதிரை, பூத வாகனம், அன்ன வாகனம் என ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் உலா வருவார். எட்டாம் நாளில் பட்டாபிஷேகமும் ஒன்பதாவது நாளில் தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறிய வைர தேரோட்டமும் நடைபெறும்.

தொடர்ந்து உச்சிப் பிள்ளையார் கோவில் முன்பு தீபம் ஏற்றப்படும். இந்த நிலையில் தான் கடந்த சில வருடங்களாகவே மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. திருப்பரங்குன்றம் கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் மலை உச்சிக்கு செல்லும் வழியில் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது .இந்த கோவிலும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தான் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
ஆனால் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேரடியாக அங்கு ஆய்வு செய்ததோடு மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து ஒன்றுதீபம் ஏற்றுவதற்கு தேவையான நெய் காடா துணி போன்றவை கொண்டு செல்லப்பட்டது. தமிழக பாஜகவை சேர்ந்த ராம சீனிவாசன், இந்து முன்னணியை சேர்ந்த காடேஸ்வர சுப்ரமணியன் உள்ளிட்டோர் இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் திரண்டு 16 கால் மண்டபம் முன்பு கந்தசஷ்டி பாடினர்.
அதே நேரத்தில் அங்கு கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மாலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டதும் உச்சி பிள்ளையார் கோவில் தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை அடுத்து மலை உச்சியில் தீபத் தூனில் தீபம் ஏற்றப்படாத ஆள் அங்கு பாஜகவினரும் இந்து முன்னணியினரும் குவிந்தனர் தொடர்ந்து தடுப்புகளை உடைத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கும் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு என்ன வித்தியாசம்? திருப்பரங்குன்றத்தை சுற்றி என்ன நடக்கிறது? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். ஏற்கனவே சொன்னது போல கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாலமுருகனை வழிபட்டு அதற்குப் பிறகு உச்சி பிள்ளையார் கோவில் செல்வார்கள். அதுவரை தான் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் வருகிறது. அதுவரை பக்தர்கள் வழிபாடு நடத்தவும் தீபம் ஏற்றமும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அதைத் தாண்டி மலை உச்சிக்கு சென்றால் தான் கார்த்திகை தீபத் தூணில் தீபம் ஏற்ற முடியும்.
இடையில் சிக்கந்தர் தர்காவும் அமைந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் திருப்பரங்குன்றத்தில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது சிக்கந்தர் தர்காவில் ஆடு உள்ளிட்டவற்றை பலியிட்டு வழிபாடு நடத்த வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. மேலும் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. தொடர்ந்து முருகன் மாநாடு மதுரையில் இந்து முன்னணி சார்பில் முன்னெடுக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து திருப்பரங்குன்றத்தை சுற்றியே அரசியல் சமுதாய நிகழ்வுகள் இருந்ததால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தது. இதற்கிடையே ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்து வழக்கில் தான் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி தற்போது வரை அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. இப்போது மட்டுமல்ல பல நூற்றாண்டு காலமாகவே இதே பிரச்சனை திருப்பரங்குன்றத்தை சுற்றி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications