கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு மீண்டும் தள்ளிப்போவது ஏன்? எம்டிசிக்கு அதிரடி கெடு
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்திற்கு சென்னையின் மையப்பகுதிகளில் இருந்து எத்தனை ரூட்களில், எவ்வளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுஒருபுறம் எனில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2012ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.

நிலம் மற்றும் திட்ட மதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கு பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 2019ம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 88 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் புறநகர் பேருந்து நிலையமும், வெளியூருக்குச் செல்லும் பேருந்து முனையமும் அமைக்கப்பட்டுவருகின்றன. புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்திக்கொள்ளும் வசதியும் அமைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணிகள் முழு வீச்சில் நடந்தாலும், இன்னும் எப்போது திறக்கப்படும் என்பது உறுதியாகவில்லை. ஒவ்வொரு முறையும் பேருந்து நிலையத்தின் திறப்பு தள்ளிபோய் வருகிறது. தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு வரும் அரசுப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே பயணிகளை இறங்கிவிடுவார்கள். இதன் காரணமாக கோயம்பேட்டுக்கு தற்போது வந்துசெல்லும் 60 சதவிகித பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி , வடபழனி, கோயம்பேடு வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கிண்டி கத்திபாரா தொடங்கி விமான நிலையம், பல்லாவரம் , தாம்பரம், பெருங்களத்தூரில் மாலை வேளையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால், மக்கள் தங்கள் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாற்றுப்பேருந்தில் செல்வது கஷ்டமாக இருக்கும். வயதானவர்களுக்கும் கடினமாக இருக்கும். தற்போதைய நிலையில் புறநகர் ரயில்களில் ஏறி மாறிக்கொள்ளலாம் என்றால் அங்கு இன்னமும் ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை.
வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்னைக்கு வெளியே அமைந்திருக்கும் பேருந்து நிலையத்தை வந்தடைவதற்கான போக்குவரத்து வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இந்நிலையில்தான் சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்திற்கு சென்னையின் மையப்பகுதிகளில் இருந்து எத்தனை ரூட்களில், எவ்வளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒட்டுமொத்த சென்னை மக்களும் தென்மாவட்டங்கள் செல்ல கிளம்பாக்கம் தான் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே அமைச்சர் சேகர்பாபு இதுபற்றி கூறும் போது, "புதிதாக ரெடியாகி வரும் கிளாம்பாக்கம் பஸ் முனையம், பேருந்துகளின் போக்குவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த பஸ் முனையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைத்து உள்ளார்கள். ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைந்திட வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே ஜூலை இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்க உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications