நானும், விஜயும் பிரிக்கப்போகும் வாக்குகள்.. நாதக தனித்து போட்டியிடுவது ஏன்? சீமான் கொடுத்த விளக்கம்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். யாருடைய வாக்குகளையும் யாராலும் பிரிக்க முடியாது என்று கூறிய சீமான், கூட்டணி வைக்க வேண்டுமென்றால், அந்த கட்சியிலேயே இணைந்து கொண்டிருக்கலாம்.. தனியாக கட்சி தொடங்கி இருக்க தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் பிரிய வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்?
அதேபோல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தியை வேட்பாளராக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென்றால், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
சீமான் - பாஜக நெருக்கம்
அதற்கேற்ப சீமானும் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வந்தார். அதற்கு வலுவூட்டும் வகையில் பெரியார் சர்ச்சை, அண்ணாமலையுடன் ஒரே மேடையில் அமர்ந்தது என்று பல்வேறு விவகாரங்களை சீமான் கையில் எடுத்தார். இதனால் கடைசி நேரத்தில் நாதக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சீமான் மீண்டும் தனித்து போட்டி என்று வேட்பாளர்கள் தேர்வில் இருக்கிறார்.
சீமான் பேட்டி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நீங்களும், தவெக தலைவர் விஜய்-ம் பிரிக்கப் போகும் வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், யாரும் யாருடைய வாக்குகளையும் பிரிக்க முடியாது. நீங்கள் தவறாக சொல்கிறீர்கள்.
கூட்டணி குறித்து விளக்கம்
தேர்தல் நேரத்தில் இந்த கட்சி சொல்வது சரியாக இருக்கிறது.. இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று மக்கள் வாக்களிப்பார்கள்.. யாரும் யாரின் வாக்குகளையும் பிரிக்க முடியாது.. நாங்கள் ஒரு கோட்பாட்டை வைத்து நகர்கிறோம்.. நாங்கள் புரட்சியை முன் வைத்து நகர்கிறோம்.. சமரசம் செய்ய வேண்டும் என்றால், எப்போதோ கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கலாம்?
வாக்குகள் பிரியுமா?
அப்படி கூட்டணி வைப்பதற்கு நாங்கள் ஏன் கட்சியை தொடங்க வேண்டும்.. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கலாமே.. மக்கள் உடனடியாக ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. புதிதாக ஒரு கோட்பாடு வந்தபின் மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை.. மக்கள் ஒரு காலம் வரும் போது ஏற்றுக் கொள்வார்கள்.. அதுவரை காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications