நீதிபதி நேர்மையின்றி உத்தரவிட்டால்! அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? உச்ச நீதிமன்றம் பளீர்
சென்னை: ஒரு நீதிபதி நேர்மைற்றவராக தோன்றினால், அவரின் உத்தரவின் நேர்மை இல்லாதது போல தோன்றினால் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் ஓய்வு பெறுவதற்கு முன்பாக நீதிபதிகள் அதிக எண்ணிக்கையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் "சிக்ஸர் அடிக்கும்" போக்கு அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றம் கடும் கவலை தெரிவித்துள்ளது.
ஒரு நீதிபதியின் தீர்ப்புகளுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும், அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் நேர்மையற்ற முறையில் இருந்தால் அல்லது வெளிக்காரணிகளின் அடிப்படையில் இருந்தால், ஏன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற அடங்கிய அமர்வு கேள்வியெழுப்பியது. இச்செயல் நீதித்துறைக்குள் வளர்ந்து வரும் முக்கியப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டுகிறது.

நீதிபதிகளுக்கு எதிராக கேள்வி
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்ஸி, மற்றும் விபுல் பன்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய கேள்வியை எழுப்பியது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட நீதிபதி, தன்னை சஸ்பெண்ட் செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்கும் போது இந்த விவாதம் வெடித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விபின் சங்கி, அந்த மாவட்ட நீதிபதி நல்ல பணி ரெக்கார்ட் கொண்டவர், மிகவும் மதிக்கப்படும் நீதிபதி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அவருக்கு களங்கம் ஏற்படுத்துவது போல இருக்கிறது என அமர்விடம் தெரிவித்தார். அவர் சிறப்பான சாதனைகளை செய்து இருந்தபோதிலும், ஓய்வுபெற சில நாட்களே இருந்த நிலையில், இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தவறானத.. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் சந்தேகங்களை எழுப்புகிறது..
சஸ்பெண்டுக்கான குறிப்பிட்ட காரணங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படாவிட்டாலும், பத்திரிகை செய்திகளின்படி, மனுதாரர் பிறப்பித்த இரண்டு நீதித்துறை உத்தரவுகளின் அடிப்படையிலேயே அது நியமிக்கப்பட்டதாக விபின் சங்கி வாதிட்டார். மேலும், நீதித்துறை உத்தரவுகள் என்பது நீதிபதியின் உரிமை. அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒரு உத்தரவு தவறானது எனில், மேல்முறையீட்டு நீதிமன்றம் மூலம் சரிசெய்யப்பட வேண்டும் ஆனால் நீதிபதிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை மூலம் அல்ல என்றும் விளக்கினார்.
நீதிபதி தவறு
விபின் சங்கியின் வாதத்திற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், "உத்தரவுகள் தவறானவை என்பதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், உத்தரவுகள் வெளிப்படையாகவே நேர்மையற்ற அல்லது தவறான உள்நோக்கங்களின் அடிப்படையில் இருந்தால், பிறகு ஏன் ஒரு நீதிபதியின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது?. இது ஒரு நீதித்துறை முடிவில் உள்நோக்கம் மற்றும் அடிப்படை காரணங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
ஓய்வு பெறுவதற்கு முன்பாக நீதிபதிகள் அதிக உத்தரவுகளைப் பிறப்பிப்பது அதிகரித்து வரும் போக்காக மாறி வருகிறது என்று கூறினார். எந்த உத்தரவுகள் நீதிபதியின் சஸ்பெண்டுக்கு வழிவகுத்தன என்று அமர்வு பின்னர் விசாரித்தது.
சஸ்பெண்டுக்குக் காரணமான உத்தரவுகள்
சஸ்பெண்டுக்குக் காரணமான உத்தரவுகள், சில சுரங்க நடவடிக்கைகளில் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய ராயல்டி மற்றும் அபராதங்களை நிறுத்திவைப்பது தொடர்பானவை என வழக்கறிஞர் தெளிவுபடுத்தினார். "சுரங்க ராயல்டி... எத்தனை கோடிகள்?" என்று தலைமை நீதிபதி கேட்டபோது, சங்கி அவ்வுத்தரவுகளை விரிவாகப் பார்க்கவில்லை என்றும், நீதிபதி நேர்மையற்றவர் என்று நிரூபணம் செய்வதற்கான எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. மனுதாரர் தனது சஸ்பெண்டுக்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள உயர் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்ததற்கு உச்ச நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. மனுதாரரால் எடுக்கப்பட்ட அத்தகைய நடவடிக்கை முன்னெப்போதும் கேள்விப்படாதது, தவறானது என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதியை கண்டித்தது.












Click it and Unblock the Notifications