ஆமா.. அது ஏன் 60 கி.மீ தூரத்தில் சென்னைக்கு ஒரு ஏர்போர்ட்.. பரந்தூர் பற்றி தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை: சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தள்ளி அமைக்கப்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜிகே மணி, விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, சிபிஐ கட்சியின் நாகை மாலி பேசுகையில், பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சுற்று வட்டார கிராமங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிவித்தார். பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் பேசுகையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தங்கம் தென்னரசு விளக்கம்
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது. தற்போது பயணிகளை கையாளுவதில் 5ம் இடத்தில் உள்ளது. அதேபோல் சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7% வளர்ச்சி பெற்றுள்ளது. இதைவிட ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் புதிய விமான நிலையம் இருப்பதால்தான் வளர்ச்சி பெற்று வருகின்றன.

ஏன் 60 கி.மீ. தூரம்?
அதுமட்டுமல்லாமல் 30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். இதன்மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அதேபோல் பரந்தூர் விமான நிலையம் சென்னையில் இருந்து 60 கி.மீ. தள்ளி வருவதற்கான காரணம், இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் நகரங்களில் இருந்து தொலைவில் தான் இருக்கின்றன.

பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
அதுமட்டுமல்லாமல், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விளை நிலங்களாக இருப்பதால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூரை 11 இடங்களை ஆய்வு செய்த பின்னரே தேர்வு செய்தோம். அதற்கு பரந்தூரின் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது.

கருத்துக்கேட்பு கூட்டம்
இதுதொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் போது மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன் வைத்தனர். மக்களின் கேள்விகள் நியாயமான கேள்விகளாக இருந்தது. அந்தக் கருத்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் வாழ்வாதாரம்
அதற்கு முதலமைச்சர், இது மிகப்பெரிய திட்டம், நியாயமான திட்டம். ஆனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்தவும், திட்டங்களின் பலன்களையும் எடுத்துக்கூற உத்தரவிட்டார். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தோம்.

தங்கம் தென்னரசு உறுதி
வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடுகள் கட்டி கொடுக்கவும், மாற்று இடம் கொடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நீர் நிலைகளை பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களின் கோரிக்கைகளுக்கான மாற்று வழிகளையும், சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications