Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறையும் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைய வாய்ப்பில்லை? பொருளாதார நிபுணர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில வாரங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து வருகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது ஒரு பீப்பாய் சுமார் $73 ஆக உள்ளது. இதன்படி பார்த்தால் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் ஆனால் குறையவே இல்லை..கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலைகள் குறையாதது ஏன் என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "கடந்த சில வாரங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து வருகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது ஒரு பீப்பாய் சுமார் $73 ஆக உள்ளது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து, உலகளவில் எண்ணெய் விலை உயர்வைத் தூண்டுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, நவம்பர் 2021 இல், கடைசியாக கச்சா எண்ணெய் இந்த அளவு விலை குறைந்தது நினைவிருக்கலாம்.

petrol diesel finance

பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கூக்குரல் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கங்கள் தங்கள் வருவாயில் எண்ணெய் வழங்கும் அபரிமிதமான வரி வருவாயை கருத்தில் கொண்டு, சில்லறை விலைகளை குறைப்பதற்கு மனமில்லாமல் இருக்கின்றன.

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான கச்சா விலை தற்போது லிட்டருக்கு ₹39 ஆக உள்ளது. ஜூன் 2022 இல், இது ₹57 ஆக இருந்தது. இதனால், இன்புட் விலை ₹18 ஆன நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் விலை ₹2 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாநில தேர்தல்கள் நெருங்கி வருவதால், மேலும் விலை குறைப்பு சாத்தியங்களை எதிர்பார்க்கலாம்.

அரசியல் சார்ந்த முடிவுகள் ஒருபுறம் இருக்க, முற்றிலும் பொருளாதார அடிப்படையில் எரிபொருள் விலையை குறைக்க ஒன்றிய அரசிற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை என்றே தெரிகிறது. "நீண்ட காலத்திற்கு" உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்க வாய்ப்புண்டு. எந்தவொரு பொருளும், பணவீக்கத்திற்கு ஏற்றாற்போல் விலை ஏறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது எரிபொருள் விலைகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஜூன் வரை சமீப காலம் வரை, நுகர்வோர் பணவீக்கம் (CPI) 5% க்கு மேல் இருந்தது, உணவுப் பொருட்களின் பணவீக்கத்தால் இந்த அளவிற்கு பணவீக்கம் உயர்ந்தது. ஆனால் எரிபொருட்களின் பணவீக்கம், செப்டம்பர் 2023 முதல் நெகட்டிவ் ஆக உள்ளது, இதனால், எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கான ஊக்கத்தை குறைக்கிறது.

எரிபொருள் விலையை குறைக்க ஒன்றிய அரசு ஏன் தயங்குகிறதென்றால், இந்தியாவின் பொது நிதிக்கு பெட்ரோலியப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய். 2023-24 ஆம் ஆண்டில், எரிபொருட்களின் மீதான நேரடி மற்றும் மறைமுக வரிகள் ஆகிய இரண்டிலும் ஒன்றிய அரசுக்கு ₹4 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளது.. இது ஒரு நிதியாண்டிற்கான மொத்த வரி வருவாயில் 18% ஆகும், இருப்பினும் அந்த பங்களிப்பின் முக்கியத்துவம் சமீபத்திய ஆண்டுகளில், EV க்களின் வருகையால் குறைந்துள்ளது. உலகம் முழுவதும் EV விற்பனையில் தொய்வு ஏற்ப்பட்டாலும், இந்தியாவில், அதன் விற்பனை 39% உயர்ந்துள்ளது பெட்ரோலியம் பொருட்களின் விற்பனை சிறிதளவிற்கு குறைந்தது மேலும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

எரிபொருள் விலை குறைப்பு, அளவைப் பொறுத்து, மத்திய அரசின் கஜானாவில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார நிலைப்பாட்டின்படி பார்த்தால், குறையும் வருவாயால், நிதி பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதனை சமாளிக்க, ஒன்று, செலவுகளை குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால், consumption குறையும். நுகர்வு குறைந்தால், ஜிஎஸ்டி வருவாயும் குறையும். மேலும் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும். இது இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு வித பாதிப்பை ஏற்படுத்தும்.

இரண்டாவது, வரி வருவாயை அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழலில், வரியில்லாத பொருட்களே இல்லை எனலாம். ஆகையால், வரி விதிப்பதற்கு எந்தவொரு வாய்ப்புமே இல்லை எனலாம்.நிதிப் பற்றாக்குறை இலக்கை 4.5% ஜிடிபி என்று வைத்திருக்கும் நிலையில், மத்திய அரசு, எந்த விதத்திலும், இதனை அதிகரிக்க விரும்பாது என்றே தெரிகிறது.

வரி வருவாயைத் தவிர, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் ஈவுத்தொகை தொகை மேலும் ₹19,000 கோடிமத்திய அரசிற்கு வருவாயாக கிடைத்துள்ளது. மாநில அரசுகள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வரிகள் மற்றும் ராயல்டிகளில் மேலும் ₹3.18 லட்சம் கோடி வருமானம் ஈட்டின. மாநிலங்களைப் பொறுத்தவரை, ஜூலை 2017 இல் நாடு தழுவிய ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு மாறியதில் இருந்து, எரிபொருள் மற்றும் மதுபானங்கள் மீதான வரிகள், முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

petrol diesel finance

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெயை விட குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பாளர்கள் அதிக லாபம் ஈட்ட உதவியது. இருப்பினும், ரஷ்ய கச்சா எண்ணெய் விலைக்கும் மத்திய கிழக்கு கச்சா எண்ணெய் விலைக்கும் இடையே உள்ள வேறுபாடு குறைந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களின் மொத்த சுத்திகரிப்பு விளிம்பு (GRM) குறைந்துள்ளது. 2024-25ல் மொத்த சுத்திகரிப்பு விளிம்பு ஒரு பீப்பாய் $6-8 ஆக குறையும் என்று கேட்எட்ஜ் (CareEdge) அறிக்கை எதிர்பார்க்கிறது.

2023-24 ஆம் ஆண்டில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு பீப்பாய்க்கு $8-14 GRM என வருவாய் ஈட்டின. GRM வீழ்ச்சியடைந்தால், சில்லறை விலைகளைக் குறைப்பதில் எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே, அடுத்த முறை எதாவது மாநிலத்தின் தேர்தல் வந்தால் மட்டுமே பெட்ரோலியம் பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைஞ்சிடிச்சி, அதனால பெட்ரோல்/டீசல் விலையெல்லாம் குறையுமென்று பகல் கனவு காண வேண்டாம் மக்களே." இவ்வாறு பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+