மந்தைவெளியில் வீடு இருக்கு! ஆனாலும் மாரிஸ் ஹோட்டலில் தங்கிய செந்தில் பாலாஜி! பின்னணி என்ன?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மந்தைவெளியில் வீடு இருக்கும் போதிலும் , சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த நாள் முதல் அவர் கதீட்ரல் சாலையில் உள்ள மாரிஸ் ஹோட்டலில் தங்கியுள்ளார். இது ஏன் என்பதற்கான பரபரப்பு காரணங்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாட்களுக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அன்று மாலையே அவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பிணை உத்தரவாதம் கொடுப்பது தொடர்பான குளறுபடியால் இரவு 7.15 மணக்குத்தான் அவர் வெளியே வந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பிறகு நேராக முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதியின் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் சென்னை மந்தைவெளியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மாரிஸ் ஹோட்டலுக்கு சென்றார். அங்கேயே தங்கி வருகிறார். அடுத்த நாள் தனது ஊர்க்காரர்கள், கட்சி நிர்வாகிகளையும் ஒருவரை விடாமல் நீண்ட நேரம் ஆனாலும் பார்த்தார்.
அவர்களது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். தனக்கு உடல் சோர்வாக இருந்த நிலையிலும் அவரால் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் விட முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க, மந்தைவெளியில் சொந்த வீடு இருக்கிறது, எம்எல்ஏ ஹாஸ்டல் இருக்கிறது, தனது நண்பர்கள் வேறு தன்னுடன் தங்கிக் கொள்ளுமாறு அழைத்தனர், ஆனால் செந்தில் பாலாஜி மாரிஸ் ஹோட்டலில் தங்கியுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையே இருக்கிறது. அதாவது ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வொரு இடம் ராசியாக இருக்கும். அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு இந்த ஹோட்டல் ராசியானதாக அமைந்துவிட்டது. அதிமுகவில் இருந்த போது , மாரிஸ் ஹோட்டலில் தங்கியிருந்த போதுதான் செந்தில் பாலாஜி, சட்டசபை தொகுதி வேட்பாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார்.
அது போல் இந்த ஹோட்டலில் தங்கியிருந்த போதுதான் இவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. இதனால் இந்த ஹோட்டலை செந்தில் பாலாஜி சென்டிமென்ட்டாக பார்க்கிறார். பவர்புல் அமைச்சராக இருந்து சிறை சென்ற செந்தில் பாலாஜி, பல்வேறு விமர்சனங்களாலும் ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தனது அமைச்சர் பதவியை (அமைச்சராக இருந்தால் அதிகார துஷ்பிரயோகம் செய்து வழக்கை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வார் என எதிர்தரப்பு வாதம் செய்தால் ஜாமீன் கிடைக்காது) ராஜினாமா செய்தார்.
செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கேற்ப அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போவதையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாரிஸ் ஹோட்டலில் தங்கினால் தனக்கு மீண்டும் நல்லதொரு பயணம் கிடைக்கும் என செந்தில் பாலாஜி நம்புகிறாராம். இதனால்தான் வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டலில் தங்கியுள்ளாராம்.
தொடர்ந்து சிறையில் இருந்ததால் செந்தில் பாலாஜி தளர்ந்து போய் இருப்பதால் அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்யவுள்ளார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரானதும் செல்வாரா, இல்லை முன் கூட்டியே அவர் மருத்துவமனைக்கு செல்வாரா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications