இன்று நேற்றா? 1968ல் தொடங்கிய மும்மொழிக் கொள்கைக்கு எதிரான கலகக் குரல்.. தொடருமா விஜய் அரசு?
சென்னை: தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு என்பது ஏதோ தற்காலிக அரசியல் லாபத்திற்காகத் திடீரெனத் தோன்றியதல்ல. அது 1968-இல் பேரறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் விதைக்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளாலும், மக்களாலும் ஒருமித்த கருத்தோடு காக்கப்பட்டு வரும் ஒரு கொள்கை நிலைப்பாடு.
கல்வியிலும், பொருளாதாரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வதற்கு, இந்த இருமொழிக் கொள்கையும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மும்மொழிக் கொள்கை கட்டாயம்
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மூன்று மொழிக் கொள்கையை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பாடத்திட்டம் நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்சி பள்ளிகளிலும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. சிபிஎஸ்சி புதிதாக கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கையின்படி 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் 3 மொழிகள் கற்பதை கட்டாயமாக்கி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த மும்மொழி பாடத்திட்டம் இருக்கிறது. இதற்கு முந்தைய திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு எதிர்ப்பு
இந்தியாவின் கல்வி மற்றும் மொழிக் கொள்கைகளில் 'மும்மொழிக் கொள்கை' (Trilingual policy) எப்போதெல்லாம் முன்வைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதற்கு மிகக் கடுமையான எதிர்வினையையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது.
இருமொழித் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தனது மாநிலக் கொள்கையாகத் தமிழ்நாடு தழுவிக் கொண்டதன் பின்னணியில் ஒரு நீண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் மற்றும் சமூகப் போராட்டம் இருக்கிறது. தமிழ்நாடு மும்மொழித் திட்டத்தை எப்போது முதல், ஏன் எதிர்த்து வருகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டின் முதல் எதிர்ப்பும் (1960-கள்)
மும்மொழிக் கொள்கை என்பது மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 1968-ஆம் ஆண்டின் முதலாவது தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 1968) மூலமே சட்டப்பூர்வ வடிவம் பெற்றது. (அதற்கு முன்பே 1950-களின் இறுதியில் இதற்கான ஆலோசனைகள் நடந்தன). மும்மொழிக் கொள்கையின் நோக்கம்: இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் ஒரு தென்னிந்திய மொழி படிக்கப்பட வேண்டும்; இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி, ஆங்கிலத்துடன் ஹிந்தி படிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
ஆனால், தமிழ்நாடு இதற்கு 1960-களிலேயே, அதாவது இந்தத் திட்டம் சட்டமாவதற்கு முன்பே தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டது.
1965 மொழிப்போர்: 1965-இல் இந்தியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்க மத்திய அரசு முயன்றபோது, தமிழ்நாட்டில் மாபெரும் மாணவர் போராட்டம் வெடித்தது.
1968 வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்: 1967-இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது. மும்மொழித் திட்டம் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்ட அதே 1968-ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று, அப்போதைய முதலமைச்சர் அண்ணா தமிழக சட்டமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அந்தத் தீர்மானத்தின் மூலம் "தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை முற்றிலும் அகற்றப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் இருமொழிக் கொள்கை" அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளிகளில் இருந்து ஹிந்தி போதனை முழுமையாக நீக்கப்பட்டது.
1986 தேசியக் கல்விக் கொள்கையும் எம்.ஜி.ஆர் அரசின் எதிர்ப்பும்
மத்தியில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1986-இல் இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இதிலும் மும்மொழித் திட்டம் தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. நவோதயா பள்ளிகள் மூலம் கிராமப்புறங்களில் மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முயன்றது.
எம்.ஜி.ஆரின் நிலைப்பாடு
அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி மறுத்தார். நவோதயா பள்ளிகள் அமைந்தால் அது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதால், தமிழ்நாட்டிற்குள் இப்பள்ளிகள் நுழையவே முடியாதவாறு கொள்கை முடிவு எடுத்தார்.
இன்று வரை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் அவை இல்லாததற்கு இந்த இருமொழிக் கொள்கை உறுதியே காரணமாகும்.
தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020)
தற்போது நடைமுறையில் உள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) வரைவு வெளியானபோதும், தமிழ்நாடு தனது எதிர்ப்பை மிகத் தீவிரமாகப் பதிவு செய்தது.
கட்டாய மூன்றாம் மொழி: புதிய கல்விக் கொள்கையில், பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் ஏதேனும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
தமிழக அரசின் நிராகரிப்பு
அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொடர்ச்சியான இருமொழிக் கொள்கைப் பாதையிலேயே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் பயணித்தது. "எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது; இருமொழிக் கொள்கையில்தான் தமிழ்நாடு உறுதியாக இருக்கும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறது?
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாட்டின் இந்த அரை நூற்றாண்டு கால எதிர்ப்பிற்குப் பின்னால் முக்கியமான காரணங்கள் உள்ளன.
மறைமுக இந்தி திணிப்பு: மும்மொழிக் கொள்கைத் திட்டத்தின்படி, இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியை மூன்றாம் மொழியாகப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், இந்தி பேசும் வட மாநிலங்களில் எவரும் தமிழ், தெலுங்கு போன்ற தென்னந்திய மொழிகளை விரும்பிப் படிப்பதில்லை; மாறாக அவர்கள் சமஸ்கிருதம் அல்லது பிற மொழிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் இது சமமற்ற, ஒருதலைப்பட்சமான திணிப்பாக மாறுகிறது.
மாணவர்கள் மீதான சுமை: இரண்டு மொழிகளைக் கற்பதே உலகளவில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள சிறந்த முறை. தேவையின்றி மூன்றாவதாக ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தி திணிப்பது பள்ளி மாணவர்களின் கற்றல் சுமையை அதிகரிக்கும்.
ஆங்கிலத்தின் முக்கியத்துவம்: ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழி (Global Link Language); தமிழ் நமது அடையாளம் மற்றும் பண்பாட்டு மொழி. இந்த இரண்டுமே உலகளாவிய வேலைவாய்ப்பிற்கும், உள்ளூர் அறிவு வளர்ச்சிக்கும் போதுமானது என்பது தமிழ்நாட்டின் நீண்டகாலக் கணிப்பு.
மாநில உரிமை: கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய ஒன்று (தற்போது பொதுப்பட்டியலில் உள்ளது). மாநில மக்களின் மொழி உணர்வுக்கு மதிப்பளித்து, கல்வியை வடிவமைக்கும் உரிமை மாநில அரசிற்கே இருக்க வேண்டும் என்பது தமிழகத்தின் வாதம். கல்வியிலும், பொருளாதாரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வதற்கு, இந்த இருமொழிக் கொள்கையும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications