நவ. 26 அரசியல் சாசன நாள்:1957-ல் தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டம் பெரியார் நடத்திய வரலாறு தெரியுமா?
சென்னை: நமது தேசம் இன்று அரசியல் சாசன நாளை கொண்டாடுகிறது. இதே நவம்பர் 26, 1957-ல் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரச் செய்த ஒரு வரலாற்று சம்பவம் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்டது.
1957-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தந்தை பெரியார் நடத்திய, ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சாசன பிரிவுகள் எரிப்பு நாள் போர் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:

இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது - அதற்கென்று ஓர் அரசமைப்புச் சட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த அரசமைப்புச் சட்டம் அனைவரும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்றபடி உண்மையாகவே மூச்சுக் காற்றை சுவாசிக்க விட்டதா? அதைத்தான் தந்தை பெரியார் கேட்டார். ''சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?'' தந்தை பெரியார் விடுத்த இந்த வினாவுக்கு இதுவரை பதில் உண்டா? ஆனாலும், ஆண்டுதோறும் ''ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே'' என்று பள்ளுப் பாடுகிறோம் - மிட்டாய் வழங்குகிறோம். தந்தை பெரியார் இயக்கத்துக்கு வகுத்துத் தந்த இரு விழுமிய கொள்கைகள் -ஒன்று ஜாதி ஒழிப்பு; மற்றொன்று பெண்ணடிமை ஒழிப்பு! இந்த இரண்டையும் ஒழிக்கும் போராட்டத்தில் கடவுள் குறுக்கே வரும், மதம் தன் கோர முகத்தைக் காட்டும். சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் குறுக்கே மலைபோல் நிற்கும் - இன்னும் சொல்லப்போனால், 'சுதந்திர' இந்தியாவின் அரசமைப்புச் சட்டமும் சமர் புரிய வரும். 2,500 ஆண்டுகளுக்குமுன் கவுதம புத்தர் போராடினார். வருணாசிரமம், ஸநாதனங்களுக்கு எதிராக அறவழிப் பணிகளை மேற்கொண்டார். பார்ப்பனிய, ஸநாதன, வருணாசிரம பாம்புகள் பொந்துக்குள் புகுந்தன.
இடையிடையே தலையைத் தூக்கின. அரசர்கள் மாறி மாறி வந்தார்கள். அவர்களின் ராஜகுருக்களாக இருந்த பார்ப்பனர்கள் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அந்த ஜாதீய, வருணாசிரமப் பாம்புக்குப் பால் ஊற்றி வளர்த்தனர். கடைசியாக கவுதம புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கி சுவாகா செய்துவிட்டனர். தங்களின் ஊடுருவல் கலை'மூலம்' பவுத்தத்தை இரு கூறாக்கி, மார்க்கத்தை மதமாக்கினர்.
பெரியார் போராட்டம்: எந்த நோயை ஒழிக்கப் புத்தம் இந்த நாட்டில் பிறந்ததோ, அதை இந்நாட்டிலிருந்தே வெளிநாட்டுக்குப் பத்திரமாக விரட்டியடித்து விட்டனர். ''புத்தி உடையவனே புத்தன்'' என்றார் தந்தை பெரியார் - ஆனால், புத்தரையே - ''புத்தப் பகவான்'' ஆக்கிவிட்டனர்.
2500 ஆண்டுகளுக்குப்பின் பகுத்தறிவுப் பகலவனாக தந்தை பெரியார் தோன்றினார். ஜாதி ஒழிப்புக்கு முட்டுக்கட்டை போடும் ஒவ்வொன்றுக்கும் முகம் கொடுத்து தூள் தூளாக்கினார். கடவுள் சிலைகளை உடைத்தார்; படங்களை எரித்தார் - மக்கள் மத்தியில் பார்ப்பனர்களின் ஆதாரங்களைக் கொண்டே அவற்றின் ஆபாசங்களை, ஒழுக்கக் கேடுகளை, முரண்பாடுகளை, மூடநம்பிக்கைகளை அக்குவேர் ஆணிவேராக அலசினார். கல்லடிகள், செருப்படிகள், அழுகிய முட்டைகள் வீச்சு, பாம்புகள், பன்றிகள், கழுதைகளை, காளைகளைக் கூட்டத்துக்குள் விரட்டி விட்டு மக்களை மருண்டோட செய்தனர். எந்த நியாயமான உரிமைகளைப் பெறுவதாக இருந்தாலும், அதற்குரிய கஷ்ட நஷ்டங்கள் என்னும் விலையைக் கொடுக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.
ஸ்பெஷல் மாநாடு: ஆண்டு முழுவதும் அய்யாவின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடினர். எடைக்கு எடை வெள்ளி நாணயம் முதல் தாங்கள் விரும்பிய பொருள்களை எல்லாம் வழங்கி மகிழ்ந்தனர். பெயருக்குப் பின்னால் இன்றைக்கு ஜாதிப் பட்டம் போடுவதற்கு வெட்கப்படுகிறார்கள் என்றால் அதற்கான மூலகர்த்தா தந்தை பெரியார்தானே! ஆனாலும், அரசமைப்புச் சட்டத்தில் இன்னும் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகள் இருக்கின்றனவே - இதனை எப்படி அனுமதிக்க முடியும்? ''மானமும், அறிவும் அல்லவா மனிதர்க்கு அழகு'' என்று எண்ணிய தந்தை பெரியார் அவர்கள். அதற்கென்றே தஞ்சையில் திராவிடர் கழக ஸ்பெஷல் மாநாட்டைக் கூட்டினார் (3.11.1957). இலட்சோபலட்ச மக்கள் கொட்டும் மழையிலும் கூடினர். அதில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார்.
அரசியல் சாசன எரிப்பு போராட்டம்: ''ஜாதி ஒழிய, தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டத்தை எரித்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1957 நவம்பர் 26 ஆம் தேதி, அன்று மாலையில், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது'' ('விடுதலை' 5.11.1957) என்ற இந்தியாவையே குலுங்க வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15 நாட்கள் அரசுக்கு வாய்தா கொடுத்தும் இந்திய அரசு செவிமடுக்கவில்லை. அதற்கு மாறாக சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டு காலம்வரை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று சென்னை மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா (Prevention of Insult to National Honour -1957) என்று பெயரிடப்பட்டது. நவம்பர் 11 இல் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. சட்டத்தைக் கொளுத்துவோரை நாடு கடத்தவேண்டும் என்று கோரத்தாண்டவம் ஆடியோரும் உண்டு.
கொடும் சிறை தண்டனை: (சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று அரசமைப்புச் சட்டத்திலேயே இல்லை - அப்படி ஒரு போராட்டத்தை அறிவித்து ஆட்சியாளர்களை, சட்ட நிபுணர்களை அதிரச் செய்தவர் தந்தை பெரியார்). ''சட்டத்தைக் கொளுத்தப் போகிறார் என்றதும், ஆத்திரப்படும் உறுப்பினர்களே, எதற்காக அந்தப் போராட்டத்தை பெரியார் நடத்துகிறார் என்பதை யோசித்தீர்களா?'' என்று எதிர்க்கட்சியாக இருந்த அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்விக்கு விடை இல்லை. ஆனாலும், சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதைப்பற்றி சற்றும் கவலைப்படவில்லை தந்தை பெரியார். ''மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ பயந்து லட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டதாகப் பேர் வாங்காதீர்கள்.
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.'' - ஈ.வெ.ரா. என்று அறிக்கை வெளியிட்டார்.
தந்தை பெரியார் கைது: போராட்ட வீரர்களின் பட்டியல் 'விடுதலை'யில் குவிந்துகொண்டே இருந்தது. இப்படி ஒரு தலைவரை, இயக்கத் தொண்டர்களை உலகம் கண்டதுண்டா?
ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைப் பகுதியில் உட்பிரிவுகள் 13(2), 25(1), 26, 29 (1), (2), 368 மதத்தை, ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் உள்ள இந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டம்தான் அது. நாடே கிடுகிடுத்தது. நவம்பர் 26 இல் என்ன நடக்கப் போகிறது என்று ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன. தந்தை பெரியார் இரயில் சுற்றுப்பயணம் செய்து தோழர்களைச் சந்தித்தார். தந்தை பெரியார் போராட்டத்திற்கு முதல் நாள் மாலையிலேயே திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
எரிந்தது அரசியல் சாசன பிரிவுகள்: நவம்பர் 26 இல் போராட்டம், போராட்டம்! ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவு கருஞ்சட்டைத் தோழர்களால் ''திகுதிகு'' என்று எரிந்தது! எரிக்கப்பட்ட சாம்பலை காவல்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலத்துக்கு அனுப்பி வைத்தனர். 10 ஆயிரம் பேர் இந்தப் போராட்டத் தீயில் குதித்தனர். குடும்பம் குடும்பமாகப் பங்குகொண்டவர்களில் - மூதாட்டிகள் உண்டு, கர்ப்பிணிப் பெண்கள் உண்டு. (சிறையில் பிறந்த குழந்தைகளுக்குச் சிறைப் பறவை, சிறை ராணி என்று பெயர் சூட்டினார்கள்! என்னே வீரம்! இத்தகு போராட்டம் வரலாற்றில் கண்டதுண்டா?). இரு கண்களும் பார்வையற்ற திருவரங்கம் மகாமுனி, ஒற்றைக்காலில் தடியூன்றி நடக்கும் தோழர்கள் - வயது முதிர்ந்தோர் என்று சிறைக்கோட்டம் ஏகினர். அந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் கண்கலங்கினர் - பெருமூச்சுவிட்டனர். சிறையிலேயே அய்வர் மறைந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளியில் வந்த தோழர்கள் சில நாட்களில் கண்மூடினர். திருச்சி சிறையில் மரணமடைந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் உடல்களை சிறைக்குள்ளேயே புதைத்துவிட்டனர். முதலமைச்சர் காமராசரை அன்னை மணியம்மையார் திருச்சியிலிருந்து சென்னைக்கு நேரில் வந்து சந்தித்து, புதைக்கப்பட்ட உடல்களை மீட்டு, மிகப் பிரம்மாண்டமான ஊர்வலம் கண்ணீர்க் கடலில் நீந்தி சென்றது.
வரலாறு காணாத போராட்டம்: உலக வரலாற்றில் இத்தகையதொரு போராட்டத்தை யார் கண்டு இருப்பார்கள் - இந்தக் கருஞ்சட்டை இயக்கத்தைத் தவிர? ஒரு செய்தியைச் சொன்னால் உடல் எல்லாம் சிலிர்க்கும். திருப்பனந்தாளையடுத்த சோழபுரத்தைச் சேர்ந்த 139 தோழர்கள் சட்டத் தாளைக் கொளுத்தினர். 40 பேரை மட்டும் கைது செய்து, 99 பேரை விட்டுவிட்டனர். சிறைக்குச் செல்லவில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார்களா? திருப்பனந்தாள் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். ''தந்தை பெரியார் கட்டளைப்படி ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவைக் கொளுத்தினோம். எங்களை ஏன் கைது செய்யவில்லை?'' என்று முழக்கமிட்டனர். ''நீங்கள் கொளுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை'' என்றனர் காவல்துறையினர். ''அப்படியென்றால், உங்கள் எதிரில் இப்பொழுது கொளுத்துகின்றோம்'' என்று கர்ச்சித்தனர் அந்தக் கருஞ்சிறத்தைகள். இரவு நேரமாகிவிட்டது - இனிமேல் கைது செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டனர் காவல்துறையினர்.
என்ன செய்தார்கள் நம் தோழர்கள்? அந்தக் கருஞ்சட்டை வீரர்கள்! காவல்துறை அமைச்சருக்குக் கையெழுத்திட்டுப் புகார் மனு எழுதினர். இப்படி ஒரு கழகமா? இப்படியும் தோழர்களா? வேறொரு வழக்கில் தந்தை பெரியார் அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு 6 மாதத் தண்டனைக்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த என்னைப் பார்த்து, ''அம்மாவுக்குத் துணையாக இருங்கள்'' என்று சொன்னார்கள். அது என் வாழ்வில் ஒரு திருப்புமுனை! 1957 போராட்டத்திற்குப் பிறகு ஜாதி ஒழிப்புப் போர்க் களத்தை விட்டு அகன்றாரா பெரியார் என்றால், இல்லை! சட்ட எரிப்புப் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சிறைபட்ட லால்குடியில் நவம்பர் 26 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் 2024 ஆம் ஆண்டில் உரிய நினைவுச் சின்னம் எழுப்பப்படும்!
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications