ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தினகரன் திடீர் விலகலுக்கு இதுதான் காரணமா?.. உருவாகிறதா புது கூட்டணி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாமல் திடீரென பின்வாங்கியது ஏன்?
சென்னை: தீய சக்திகளுக்கும் துரோக சக்திகளுக்கும் ஆதரவு அளிக்கமாட்டேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளாரே அவர் யாரை சொல்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியின் காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
அமமுகவும் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவித்தது. ஆனால் நேற்றைய தினம் திடீரென தனது வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார் டிடிவி தினகரன். இதுகுறித்து அவர் பேசுகையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அரசியல் கட்சி
இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அமமுக கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமமுக சார்பில் கடந்த ஜனவரி 27 மற்றும் ஜனவரி 31 ஆம் ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

அரசியல் கட்சி
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அமமுகவுக்கு பொதுத் தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில் புதிய சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத ஒரு குழப்பத்தை விளைவிக்கும். எனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை குக்கர் சின்னத்தோடு சந்திப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் தன்னை யாரும் வாபஸ் பெற சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரோடு கிழக்கு தேர்தலில் துரோக சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் ஆதரவு தர மாட்டோம் என சொல்லியிருக்கிறார்.

இடைத்தேர்தல்
அமமுக இடைத்தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் யாருக்காவது ஆதரவு கொடுப்பார் என கருதப்பட்டது. அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் அவர் பாஜக ஆதரித்த அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இல்லாவிட்டால் கடந்த சட்டசபை தேர்தலில் தன்னுடன் கூட்டணி அமைத்த தேமுதிக வேட்பாளரையாவது ஆதரிப்பார் என கருதப்பட்டது.

இரு விஷயங்கள்
ஆனால் இப்படி யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை என கூறியிருக்கிறார். இதில் இரு விஷயங்களுக்குத்தான் விடை கிடைக்கவில்லை. விஷயம் ஒன்று- கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிட்டுதான் அதிமுக, திமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளினார். பின்னர் அமமுக என்ற அமைப்பை தொடங்கி அதன் வெற்றிச் சின்னமாக குக்கரை அறிவித்தார். அப்படியிருக்கும் போது வாபஸ் வாங்குவதற்கு பதில் தனது கட்சிக்கான ஆழத்தை பார்க்க அந்த வேட்பாளரை தினகரன் களமிறக்கியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டார். எனவே இவரது திடீர் விலகலுக்கு காரணம் தெரியவில்லை. டெல்லி மேலிடம் சொல்லித்தான் ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார். அது போல் டிடிவி தினகரனும் தனது வேட்பாளரை வாபஸ் பெற வைத்ததன் பின்புலத்தில ஒரே காரணம் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ஒன்று மட்டும் புரிகிறது- டெல்லி மேலிடம், ஓபிஎஸ், அமமுக ஆகிய மூன்றும் ஒரே பாதையில் பயணிக்கின்றன. எனவே வரும் மேற்கண்ட மூவரும் இனி வரும் தேர்தலில் ஒன்றாக கூட்டணி அமைத்து செயல்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தீய சக்தி யார்
விஷயம் 2- தீய சக்திகளுக்கும் துரோக சக்திகளுக்கும் ஆதரவு இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இவர் யாரை சொல்கிறார் என்ற கேள்வி வருகிறது. நிச்சயம் ஓபிஎஸ்ஸை சொல்லியிருக்க மாட்டார். காரணம், திமுக எனும் தீய சக்தியை அழிக்க அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என ஓபிஎஸ் பேசியதை பார்த்த டிடிவி தினகரன், நான் என்ன பேச வேண்டுமோ அதை ஓபிஎஸ் பேசிவிட்டார். அவர் தனது தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டிருந்தால் நான் கொடுத்திருப்பேன் என கூறியிருந்தார். எனவே தினகரன் தீயசக்தி, துரோக சக்தி என ஆரம்பத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமியைதான் கூறி வருகிறார்.

வெற்றி வாய்ப்பு
ஒரு வேளை ஓபிஎஸ் வேட்பாளர் களத்தில் இருந்து , ஓபிஎஸ் தினகரனை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தால் நிச்சயம் அவர் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது. இதை அவர் பொதுவெளியில் தனது பேட்டியிலேயே தெரிவித்திருந்தார். எனவே திடீரென தினகரன் பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றி வாய்ப்பு இருக்கும் போது சின்னம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதை தினகரன் ஏன் யோசிக்காமல் போய்விட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications