குரூப் போட்டோவில் சீனியர்கள் நிற்க, உதயநிதி சேரில் அமர்ந்திருந்தது ஏன்? இதான் காரணம்! வந்ததுமே மாஸ்!
சென்னை : உதயநிதி ஸ்டாலின், நேற்று அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஆளுநர், முதலமைச்சர் உடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலின் சேரில் அமர்ந்திருக்க, முந்தைய ஆட்சியிலேயே அமைச்சர்களாக இருந்த சிலர் பின்வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.
புதிதாக அமைச்சரவையில் இணைந்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், நாற்காலியில் அமர்ந்திருந்ததும், சீனியர்கள் நின்று கொண்டு இருந்ததும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டன.
ஆனால், துறை வாரியாக தர வரிசை சீனியாரிட்டி அடிப்படையிலேயே இந்த குழு புகைப்பட நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆளுநர் - முதல்வருடன் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது துறைவாரியான முக்கியத்துவத்தின் அடிப்படையிலே அமரவைக்கப்படுவார்கள்.
அந்த அடிப்படையிலேயே, தரவரிசை சீனியாரிட்டியில் 10வது இடம் பிடித்த உதயநிதி ஸ்டாலின், முதல் முறை அமைச்சரானதுமே, குழு புகைப்படத்தில் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அமைச்சரவை
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மொத்தம் 33 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஸ்டாலின் உட்பட தமிழ்நாட்டின் அமைச்சரவையில் 34 பேர் இடம்பெற்றனர். இதில் திமுகவின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ பெரியசாமி உள்ளிட்டோர் அமைச்சர்களாக செயல்பட்டு வருகின்றனர். அதன்பிறகு தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்ச்சையில் சிக்கிய ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் துறை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது.

அமைச்சரவையில் 35வது நபர்
இந்நிலையில் தான் தற்போது புதிய அமைச்சராக ஸ்டாலினின் மகனும், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்போரின் எண்ணிக்கை உதயநிதியோடு சேர்த்து 35ஆக அதிகரித்துள்ளது.

இலாகாக்கள் மாற்றம்
அமைச்சரவை விரிவாக்கம் தவிர, சில மூத்த அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கவனிப்பார். சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வந்தார். அந்தத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.பெரியகருப்பன் கவனித்து வந்த வறுமை ஒழிப்பு இலாகாவும் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

துறை மாற்றம்
அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனியர் அமைச்சர்கள்
அமைச்சர் முத்துச்சாமியிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குரூப் போட்டோ
அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இணைக்கப்பட்ட பின், ஆளுநர் மாளிகையில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. பொதுவாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்போது குழு புகைப்படம் எடுப்பார்கள். புதிதாக அமைச்சர் மாற்றம் செய்யப்படும்போது, அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இந்த புகைப்படத்தை அரசு புகைப்பட கருவூலத்தில் வைக்கவும், அதிகாரபூர்வ பக்கங்களில் பயன்படுத்தப்படும். அதன்படி, நேற்று ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைச்சர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன் வரிசையில்
இந்த புகைப்படத்தில், முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின், முதல்வருக்கு வலது புறமாக கடைசி இடத்திற்கு முன்னால் அமர்ந்து இருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு பின் பக்கம் அன்பில் மகேஷ் நின்றிருந்தார். அமைச்சர்களில் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி வந்து இருந்தார். உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி சின்னம் பொறித்த வெள்ளை சட்டைகளையே அணிந்து வருகிறார். வேட்டி சட்டையுடன் அவர் பொதுவெளியில் வந்தது கிடையாது. அதனையே ஸ்டாலின் தற்போது அமைச்சராக பதவியேற்ற பிறகும் கடைபிடித்து வருகிறார்.

சேரில் அமர்ந்திருந்த உதயநிதி
அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பின் ஆளுநருடன் அனைத்து அமைச்சர்களும் எடுத்துக் கொண்டுள்ள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. புதிதாக அமைச்சரவையில் இணைந்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், நாற்காலியில் அமர்ந்திருந்ததும், முந்தைய ஆட்சியின்போதே அமைச்சர்களாக இருந்த சீனியர்கள் நின்று கொண்டு இருந்ததும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டன. முக்கிய துறையான நிதித்துறையின் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும் பின்வரிசையில் மாஸ்க் அணிந்தபடி நின்றுகொண்டிருந்தார்.

சீனியாரிட்டி
துறை வாரியான தரவரிசை சீனியாரிட்டி (Inter-se-seniority) அடிப்படையிலேயே இந்த குழு புகைப்பட நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆளுநர் - முதல்வருடன் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது துறைவாரியான முக்கியத்துவத்தின் அடிப்படையிலே அமரவைக்கப்படுவார்கள். நேற்று குழு புகைப்படத்திற்காக புரோட்டோகால் படி அமைச்சர்களை, அதிகாரிகளே அமரவைத்தனர். அந்த அடிப்படையிலேயே, அமைச்சரவை தரவரிசை சீனியாரிட்டியில் 10வது இடம் பிடித்த உதயநிதி ஸ்டாலின், முதல் முறை அமைச்சரானதுமே, குழு புகைப்படத்தில் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்.

10வது இடத்தில் உதயநிதி
தமிழக அமைச்சரவையின் சீனியாரிட்டி பட்டியலின் படியே இன்றைய குழு புகைப்படத்திலும் இருக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. இன்று அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சரவை தரவரிசை சீனியாரிட்டியில் 10வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க, இரண்டாவது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கீதா ஜீவன் மிஸ்ஸிங்
உதயநிதி ஸ்டாலின் 10வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 11வது இடத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன் ஆகியோர் உள்ளனர். அமைச்சரவை சீனியாரிட்டியில் 16வது இடம் வகிக்கும் கீதா ஜீவன்,நேற்றைய பதவியேற்பு நிகழ்வுக்கு வரவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் காரணமாக நேற்று சென்னை வராமல் தூத்துக்குடியில் தனது வீட்டிலேயே இருந்தார் கீதா ஜீவன். இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி இடத்தில்
தரவரிசை சீனியாரிட்டி பட்டியலில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 23வது இடத்திலும், இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகர்பாபு 26வது இடத்திலும் உள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 30வது இடத்தில் உள்ளார். 35 அமைச்சர்கள் உள்ள இந்த பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடைசி இடத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications