சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் பெரிய அளவில் ரத்து செய்யப்பட்டது ஏன்? தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை: சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் நேற்று பெரிய அளவில் ரத்து செய்யப்பட்டது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. விபத்துகளை தடுக்க தண்டவாளங்களை பராமரிப்பது அவசியம் என்று கூறியுள்ள தெற்கு ரயில்வே இன்று முதல் 22ம் தேதி வரை இரவு நேர ரயில் சேவையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற்ற காரணத்தால் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம், தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை, காஞ்சீபுரம்-கடற்கரை, திருமால்பூர்-கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.
ஆவடியில் நடை மேம்பாலம் இடிக்கப்பட்ட காரணத்தால் ஆவடி வழித்தடத்திலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று சென்னை மக்கள் புறநகர் ரயில் சேவை கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர். ஞாயிறுகளில் மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவது புதியது இல்லை என்றாலும், மக்களை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் இயக்கங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சீரான இடைவெளியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நேற்று சென்னை கடற்கரை - தாம்பரம் பிரிவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 மணி நேரம் 15 நிமிடங்கள்ரயில் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில்,ரயில் இணைப்புகளை சரிபார்த்தல், வெல்டிங் பணிகள், கனரக எந்திரங்கள் மூலம் தேவையற்ற கழிவுகளை அகற்றுதல் மற்றும் பிற பாதைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முக்கியமான வழித்தடப் பணிகள் பகல் நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டியதால் 44 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாதை பராமரிப்பு பணிகள் தவிர்க்க முடியாதவை ஆகும். இருப்பினும், பயணிகளின் சிரமத்தை தவிர்த்திடும் வகையில், தெற்கு ரயில் வேயின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான தண்டவாளங்களை பராமரிப்பது முக்கியம். தண்டவாளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். ரயில் தடம் புரல்வதை தடுக்கரயில் வே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் எனில், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 21-ம் தேதி வரையில் இரவு 8.15 மற்றும் 9.30 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இரவும் ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து நேற்று இரவு 8.20 மற்றும் 9.30 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று முதல் 21-ந் தேதி வரையில் இரவு 11.20 மற்றும் 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும், இதே தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, தாம்பரத்திலிருந்து நேற்று இரவு 11.15 மற்றும் 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து நேற்று முதல் 22-ந் தேதி வரையில் இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் , அதற்கு மாற்றாக சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து இரவு 12.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications