Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டைம்லைனுக்குள் அடங்காத 'டைம்பாம்' தந்தை பெரியார்.. தமிழருக்கு தொண்டு செய்து பழுத்த ஈரோட்டு கிழவனார்!

Subscribe to Oneindia Tamil

தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று!

Why We celebrate Thanthai Periyar as Great Revolutionary leader?

1919-ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தந்தை பெரியார் இணைந்தார்.

1921-ம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம்

1922-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார்; வகுப்பு வாரியாக பிரதிநித்துவம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்

1924-ம் ஆண்டு வைக்கம் போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனை பெற்றார்

1925-ம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் முன்வைத்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவ தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்

1925-ம் ஆண்டு Self-Respect Movement என்ற சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்க கருத்துகளைப் பரப்பு குடியரசு, திராவிடன் REVOLT இதழ்களை நடத்தினார் பெரியார்.

... இப்படியாக பொதுவாக அனைத்து தலைவர்களுக்கும் எழுதுவதைப் போல ஒரு டைம்லைன் செய்தியை எழுத முயற்சித்தேன். ஆனால் அப்படி எல்லாம் எழுதிவிட முடியவே முடியாது என்ற திடமான முடிவுக்கு நான் வந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டைம் லைனுக்குள் அடக்க முடியாத டைம் பாம் எனலாம் பெரியாரை!

ஏனெனில் பொதுவாழ்வுக்குள் தந்தை பெரியார் கால் வைத்த நாள் முதல் அவர் மரணித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்ட பின்னரும் கூட பெரியாரின் டைம்லைன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நானறிந்த வரையில் டைம் லைன் என்ற வரையறைக்குள் அடக்கவே முடியாத ஆகப் பெருந்தலைவர் தந்தை பெரியார்தான்.

ஏனெனில் செப்டம்பர் 17-ந் தேதி பெரியார் பிறந்த நாளன்று ஶ்ரீரங்கம் பெரியார் சிலை முன்பாக மனுதர்ம எரிப்பு போராட்டம் தொடர்பான செய்திகள் தொலைக்காட்சிகளில் ஓடுகிறது... இந்த போராட்டத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.. நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பிக்கிறது..

இப்படி நேற்றும் இன்றும் நாளையும் இந்த திராவிடர் மரபினம் வழிவந்த தமிழர் தேசிய இனத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை பெரியார் எனும் ஆலமரத்தின் டைம்லைன் இருந்து கொண்டே இருக்கும்.

செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த போதும் தாம் வாழும் சமூகத்தில் நிலவுகிற ஒடுக்குமுறைகளை எதிர்த்து துணிந்து களம் கண்டவர் தந்தை பெரியார். ஜாதிகளற்று மதங்களற்று பெருவாழ்வு வந்த ஆதி மனிதர்களாகிய தமிழர்கள்- திராவிடர்கள், 2,000 ஆண்டுகளாக பிறப்பின் அடிப்படையில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது மனித குலத்துக்கான அநீதி என பொங்கினார்.

சமூக இழிவுகளை துடைக்கும் பணியை எந்த விமர்சனம் வந்தாலும் தொடர்ந்து செய்வேன் என மக்களின் விடுதலைக்கான பணியை தம் தோள்மீது ஏற்றிக் கொண்டு பயணித்தார். சமூக விடுதலை, அரசியல் விடுதலை என தாம் கொண்ட கொள்கையில் இம்மியும் விலகாமல் மரணிக்கும் வரை போராடியவர் தந்தை பெரியார்.

இந்திய சமூகத்தில் ஒரு ஜாதியின் ஆதிக்கம்தான் கோலோச்சிக் கொண்டிருந்தது. கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், சாஸ்திரங்கள், கடவுள்கள், மதநம்பிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அந்த ஜாதியினர் மட்டுமே கோலோச்சி வருகின்றனர்.

மனித குலத்தின் பூர்வகுடிகள், அடிமைத்தனங்களில் சிக்கி சக மனிதர்களையும் மனிதகுலத்தின் சரிபாதி பெண்களையும் ஈவிரக்கமற்ற வகையில் நடத்திக் கொண்டிருந்த- கொண்டிருக்கும் பேரவலம் இன்றைக்கும் தொடருகிறது. அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னை மாகாணம்தான் அதாவது இன்றைய தமிழ்நாடுதான் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியது. பார்ப்பனரல்லாதார் சங்கம், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என இந்த கலகக் குரலின் வரலாறு நெடியது. இந்தக் கலகக் குரலின் மையப் பெரும் புள்ளிதான் தந்தை பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி.

எதன் பெயராலும் எவரது ஆதிக்கமும் கூடாது.. இதுதான் தந்தை பெரியாரின் தத்துவத்தின் ஒற்றை சாராம்சம். ஆதிக்கம் கூடாது என்று பேச்சுவாக்கில் முழங்கிவிட்டு மட்டும் செல்லவில்லை.. யுத்தம் செய்தார்... ஜனநாயகத்தை மட்டுமே நம்பி போராட்டம் நடத்தினார்.. சிறைவாசம் அனுபவித்தார். அவரது போராட்டமும் தத்துவங்களும் மானமும் அறிவும் கொண்ட மனிதர்களுக்கு தலைநிமிர்வைக் கொடுத்தது.அதனால் ஆதிக்கங்கள் அடியோடு ஆட்டம் கண்டன. அந்த ஆட்டத்தில் அலறிப்போன கூட்டத்தாருக்கு இன்றைக்கும் தந்தை பெரியார் என்ற சொல் அஜீரணமாகவே இருக்கிறது. அதனால்தான் அந்த கூட்டத்தாரும் அவரது ஏவல்படையும் எப்போதும் தந்தை பெரியார் என்ற பெயர் மீதும் தந்தை பெரியார் சிலைகள் மீதும் வன்மம் கொண்டவர்களாகவே வரலாற்றிலும் இன்றிலும் பயணிக்கின்றனர்.

கோவை காரமடையில் தந்தை பெரியார் பெயரில் உணவகம் உதயமாவதைக் கொண்ட இந்த ஆதிக்க ஜாதிக் கும்பலின் அடியாட்படையால் சகிக்க முடியவில்லை. ஆம் தந்தை பெரியார் என உச்சரித்தாலே நச்சரவம் போல இன்றைக்கும் ஒருசாரார் நடுங்குகின்றனர். இத்தனைக்கும் தந்தை பெரியார் ஜனநாயக பாதையை மட்டுமே நம்பினார்.. ஒருநாளும் வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் அவர் இந்த மக்களுக்கு சொன்னது, நானே சொன்னாலும் உன் புத்தியை கொண்டு ஆராய்ந்து சரி என்றால் ஏற்றுக் கொள் என்கிற பகுத்தறிவைத்தான். அந்த பகுத்தறிவு போதனைகள்தான் தமிழ் மக்களை இன்றைக்கு இப்பாடியான ஒரு அறிவார்ந்த சமூகமாக செதுக்கி இருக்கிறது.

நாடு விடுதலை அடைந்த போது, ஆங்கிலேயர் கைகளில் இருந்து அதிகாரம் மற்றொரு ஜாதியார் கைகளுக்குப் போகிறதே.. இது ஒன்றும் கொண்டாட்டத்துக்குரிய நாள் அல்ல என துணிந்து குரல் கொடுத்தார். தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது தமிழகத்தில் அமைதியை நிலவ செய்ய தந்தை பெரியாரின் வரலாற்றுச் சிறப்ப்புமிக்க பேருரைதான் காரணமாக இருந்தது.

நாடு குடியரசாகி அரசியல் சாசனம் அமலுக்கு வந்த போது சாதியை பாதுகாக்கிறது இந்த அரசியல் சாசனம் என கர்ஜித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்காக முதலாவது அரசியல் சாசன திருத்தத்தை கொண்டுவரப் போராடி சாதித்தவர் தந்தை பெரியார்.

முதுமையிலும் கைகளில் மூத்திர சட்டியை தூக்கிப் பிடித்தபடி இந்த இன மக்களை சாதிய இழிவில் இருந்து விடுதலை பெறச்செய்யாமல் சாகிறேனே என மனம் வெதும்பியவர் தந்தை பெரியார். தம்மை தேடி அத்தனை அரசியல் பதவிகள் வந்த போதும் அதைப்பற்றி எல்லாம் கிஞ்சித்தும் சபலம் கொள்ளாமல் கொண்ட கொள்கைக்கு நேர்மையாளராக உழைத்தவர்.

பெரியார் என்கிற பெருமரம் இல்லாமல் இந்தியாவின் அரசியல் வரலாறும் இல்லை.. இந்திய ஜனநாயகத்தின் சமூக நீதியின் சரித்திர பக்கங்களும் இல்லை.
பெரியாரை பகுத்தறிவால் ஏற்றுக் கொண்டவர்கள் எந்த சமரசத்துக்கும் எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் களமாடினார்கள். பெரியாரின் தளபதிகள் எத்தனை எத்தனையோ பேர் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறாமலேயே மக்கள் விடுதலைக்காக போராடி மாண்டு போயிருக்கிறார்கள். பெரியார்தான் பேரறிஞர் அண்ணாவை இந்த மண்ணுக்கு கொடுத்தார்.. பெரியார்தான் கருணாநிதியை இந்த நிலத்துக்கு கொடுத்தார்.. பெரியாரை தலைவராக கொண்ட திராவிட கட்சிகள்தான் இந்த தமிழ்நாட்டை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

அன்று தந்தை பெரியாரும் அவர்தம் சகாக்களும் விதைத்த விதைதான் இன்றளவும் இந்த தமிழ்நிலத்தை மதவாதம் கவ்வாமல் காப்பாற்றுகிற கவசமாக இருக்கிறது. அதனால்தான் மதவாதத்தை எதிர்க்கும் அத்தனை பேரும் தந்தை பெரியார் என்கிற பெயரை உரக்க முழங்குகின்றனர். இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும் தீரமிக்க போர்க்குணத்தின் குறியீடாக தந்தை பெரியார் திகழ்கிறார். அதனால்தான் அவர் யாரை மாந்தநேயத்தின் எதிரிகள் என அடையாளம் காட்டினாரோ அவர்கள் இன்றளவும் பெரியார் எனும் பெயரை கேட்டாலே ஈரக்குலை நடுங்கியவர்களாக பிதற்றுகின்றனர்.

இந்தியா நிலமெங்கும் வலதுசாரிகள் ஊடுருவ முடியும்.. தேர்தல் கண்ணாமூச்சிகளை விளையாடிக் காட்ட முடியும்.. வெல்லலாம்.. தோற்கலாம்.. ஆனால் தமிழ் மண்ணில் தலைகீழாக நின்றாலும் வலதுசாரிகள் ஜம்பம் பலிக்கவே பலிக்காது- காரணமே அந்த ஈரோட்டுக் கிழவன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எனும் தந்தை பெரியார்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+