திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் வரும் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அந்த கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது . இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, ஜவாஹிருல்லாத ராஜினாமா செய்து தனி சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று திமுகவினர் நாகையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்நிலையில் தான் தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவது ஏன்? என்பது பற்றி ஜவாஹிருல்லா விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. நாகப்பட்டினம் தொகுதியில் கட்சியின் தலைவர் எம்ச் ஜவாஹிருல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றார். மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது தோல்வியடைந்தார்.

why-we-will-want-to-contest-independent-symbol-manithaneya-makkal-katchi-jawarhirullah-explainedwhy

இந்நிலையில் தான் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு கட்டுப்பட வேண்டிய தேவையில்லை. காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போன்று கூட்டணியை மாற்றலாம் என்பதால் இந்த முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வந்ததாக தகவல்கள் பரவின.

இதனால் ஜவாஹிருல்லா வென்ற நாகை தொகுதியில் அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது. ஜவாஹிருல்லா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனி சின்னத்தில் போட்டியிடலாம் என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்நிலையில் தான் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்தின் பின்னணி பற்றி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ''கடந்த சில நாள்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும் ம.ம.க வுக்கும் பிரிவையும் பிளவையும் உண்டாக்கும் நோக்கில், உண்மையற்றச் செய்திகளை ஊதி பெரிதாக்கி உலாவ விடப்பட்டதை உணர முடிகிறது. திமுகவுக்கும், மமகவுக்கும் இடைப்பட்ட உறவு, வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல. அதை தாண்டிய கொள்கை உறவு ஆகும்.

மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட நிலையிலும் திமுக கூட்டணியில் கொள்கையுணர்வோடு நிலை பெற்றது மமக. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மமகவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற போதும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பெரும் உழைப்பை தந்ததும் மமகவின் தொண்டர்கள்தான்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மமகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் நாட்டின் சூழலை கருதி தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக மமக வின் தொண்டர்கள் உழைத்தார்கள். தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கிளை அமைப்புகளையும் நிர்வாகக் கட்டமைப்பையும் வீரியமான தொண்டர்களையும் கொண்ட மக்கள் இயக்கமாக மமக இருந்த போதும் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத ஆதங்கத்தை திமுக தலைமையிடம் தெரிவித்தோமே தவிர களத்தில் ஒதுங்கிவிடவில்லை.

திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்காக மமக தொண்டர்கள் மாபெரும் பங்களிப்பைச் செய்தார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் கால சூழ்நிலைகளையும் களத்தின் நிலையையும் கருத்திற் கொண்டு பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டோம். இரண்டிலும் வென்றோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அவ்வாறே நாகை, மணப்பாறை தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் மட்டும் வென்றுள்ளோம்.

இந்நிலையில் தொடர்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே 2026 மே 19, 20 தேதிகளில் கூடிய உயர்நிலை குழுவின் ஐந்தாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல் நான்கு தீர்மானங்களைப் பற்றி எழுதினால் அது திமுக மமக உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதாலோ என்னவோ , ஐந்தாவது தீர்மானத்தை மட்டும் தனியாக எடுத்து திரிபுவாத பரப்புரை செய்யப்பட்டுள்ளது. அதாவது புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், வக்பு திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணர்வுப்பூர்வமாக களத்தில் நின்றது. நாமும் அவ்வாறே மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிர்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் உள்ளிட்ட பல தருணங்களில் ஒருமித்த உணர்வோடு திமுகவுடன் இணைந்து களம் கண்டுள்ளோம். எனவே பிறழ உணரப்பட்ட பிழையால் தேவையற்ற விமர்சனங்கள் செய்வதை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் காக்க தொடர்ந்து இணைந்து களமாடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+