சென்னை கவுன்சிலர்கள், தாம்பரம் மண்டலக் குழுத் தலைவர், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் நீக்கப்பட்டது ஏன்
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலக்குழு தலைவர் ஜெயபிரதீப், மற்றும் 40-வது வார்டு கவுன்சிலர், உசிலம்பட்டி நகரசபை தலைவர் சகுந்தலா(11-வது வார்டு கவுன்சிலர்) ஆகியோரை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடாவடியில் ஈடுபடும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது,
இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் மீது அரசு, அந்த சட்டத்தின் பிரிவு 52-ன்கீழ் நடவடிக்கை எடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து ஆணையிட்டு உள்ளது.

அதன்படி சென்னை பெருநகர மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலக்குழு தலைவர் ஜெயபிரதீப், மற்றும் 40-வது வார்டு கவுன்சிலர், உசிலம்பட்டி நகரசபை தலைவர் சகுந்தலா(11-வது வார்டு கவுன்சிலர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் மண்டலக்குழுத்தலைவர், உசிலம்பட்டி நகராட்சித்தலைவர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் ஆகியோர் நீக்கப்பட்டது குறித்தும், அதற்கான காரணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
உசிலம்பட்டி நகரசபை தலைவர் சகுந்தலா: இவர் நகரசபை கூட்டத்தை கூட்டரங்கில் நடத்தாமல், அவரது அறையில் வைத்து நடத்தியுள்ளார். இந்த கூட்டங்களில் அவரது மகன் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்கள் பேசும்போது அவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறார். மேலும் மன்றத்தின் அதிகாரத்தை சுயமாக எடுத்து கொண்டு அவரது அதிகார வரம்பினை மீறி தன்னிச்சையாக பணிகளை எடுத்து முன் அனுமதி வழங்கி வருகிறார்.
அதேபோல் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலண்மை பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்று ஆணையரின் குறிப்புகள் ஏதும் இல்லாமல் அந்த நிறுவனத்தின் ஒப்பந்ததை ரத்து செய்து இருக்கிறார். (சகுந்தலா தி.மு.க. சார்பில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவருக்கு நகரசபை தலைவர் பதவி கொடுக்காத காரணத்தால் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக நகரசபை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் அ.தி.மு.க.வில் இணைந்து விட்டார்)
சென்னை மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் பாபு (தி.மு.க.):- பள்ளிக்கரணை பகுதியில் சுமார் 4,800 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் குடிநீர் திட்டப்பணிகளை இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள், தனது உதவியாளர்களை சந்திக்கும் வரை அவர்களுக்கு இணைப்பு கொடுக்கக் கூடாது என்று கூறியதாக புகார்கள் வந்தன. மேலும் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுப்பட்ட 5 ஒப்பந்தகாரர்களை பணிமனையில் இருந்து விரட்டி விட்டார். குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்தகாரரை அடித்து விரட்டினார். அவரின் உதவியாளர், பகுதி பொறியாளரை தாக்கி உள்ளார்.
சென்னை மாநகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம் (தி.மு.க.):- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி, 5-வது வார்டில் சாலை சீரமைக்கும் பணி நடந்தது. அப்போது சொக்கலிங்கம், மழை காரணமாக சாலை சீரமைக்கும் பணி எதன் காரணமாக தொடங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி, தகாத வார்த்தைகளை கூறி பணிகளை நிறுத்தினார். மேலும் அவர் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருப்பதுடன், அவற்றை தடுப்பது போன்ற அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார்.
தாம்பரம் மண்டல தலைவர் ஜெயபிரதீப்:- கவுன்சிலர்களின் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். கடந்த 8 மாத காலமாக தொடர்ச்சியாக எந்த ஒரு கூட்டத்தையும் கூட்டவில்லை. தாம்பரம் மாநகராட்சி மண்டல நிதியை தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கூடுதல் நிதியை ஒதுக்கியது. தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை உருவாக்கியது.
கடந்த ஜூலை மாதம் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கான பணிகள் நடந்த செயற்பொறியாளர் அறையின் முன்பு சட்டவிரோதமாக ஆட்களை கூட்டி, அந்த அறையை பூட்டி சாவியை எடுத்து சென்றது. செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அறையை ஆய்வு செய்ய வந்தபோது, தடுத்து நிறுத்தியது. அவரை எங்கும் நகரவிடாமல் தடுத்தது. துணை ஆணையாளர் சென்றபோது, உதவி செயல்பொறியாளர் அறை பூடப்பட்டு இருந்தது. மண்டலம் 3-ல் ஆட்கள் சப்ளை செய்வது தொடர்பாக மேயர், ஆணையாளர் ஆகியோரின் ஒப்புதல் பெற்று பணி உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளரின் இ-டோக்கன் பயன்படுத்தி அதனை ரத்து செய்தது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications