நடிகை மீனாவுக்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறதா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக 90 களின் இறுதி வரை வலம் வந்த நடிகை மீனா, பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவருக்கு மிக முக்கிய பொறுப்பு கட்சியில் வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதிலை பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் கூட இல்லை என்பதால் தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளன. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அதே நேரத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறியுள்ளார். ஆட்சி அரியணையை நோக்கி திமுக, அதிமுக பாஜக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சிகள் போட்டிப்போட தொடங்கியுள்ளன.

28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள்
இதில் அதிமுக பாஜக கூட்டணியினர் ஆட்சியை பிடிக்க தற்போதே தீவிரமாக வேலைகளை செய்து வருகின்றன. இதற்கான முதல் படியாக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றி புதிய தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு புதிய நிர்வாகிகளை நியமிக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து அவர் ஒரு பட்டியலை தயாரித்து அதனை டெல்லி சென்று அளித்தார்.
மாநில அளவில் 28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளாக யார் யாரை நியமிப்பது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டார். அப்போது அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகனின் ஆதரவாளர்களும் இதில் இருக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளார்.
நடிகை மீனாவுக்கு பொறுப்பு?
அப்போது இந்த மாநில அளவிலான 28 பதவிகளுக்கான பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் வெற்றி பெற நடிகர், நடிகைகளின் முகங்களை பாஜக விரும்புகிறது. மேலும் தென் மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. விஜய்யை அதிமுக பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால் திமுகவை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் பாஜக கணக்கு போட்டு வருகிறது. ஆனால் இதற்கு விஜய் பிடி கொடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
பாஜகவில் ஏற்கனவே குஷ்பு, நமீதா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் உள்ள நிலையில், மேலும் சில திரைநட்சத்திரங்களும் கட்சியில் இணையலாம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் நடிகை மீனா பாஜகவில் இணையப்போவதாகவும், அவருக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் தமிழக பாஜகவில் 4 புதிய பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த பட்டியலைத் தான் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜேபி நட்டாவிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் பதில்
இதில் நடிகை மீனா, குஷ்பு மேலும் 2 பேருக்கு இந்த பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் நடிகை மீனாவுக்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் சொல்கின்ற விஷயத்தில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.. பாஜகவில் நிறைய பேர் தற்போது இணைந்து வருகிறார்கள். அப்படி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். இது எதை காட்டுகிறது என்றால், ஸ்டாலினுக்கு ஆட்சி முடியப் போகிறது.. அடுத்த ஆண்டில் தேர்தல் நடக்க போகிறது.. அடுத்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறதோ.. அந்த கட்சியின் பக்கம் எல்லாரும் வந்துகொண்டு இருப்பார்கள்.. அதனால் நாங்க யார் வந்தாலும் வரவேற்போம்.. நீங்க எப்படியாவது கூட்டணியை உடைத்துவிடலாம் என்று நினைக்கிறீங்க.. ஆனால் அதுமட்டும் நடக்கவே நடக்காது.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications