அமித்ஷா வருகிறார்.. கிளம்பும் முன்பே அதிரடி.. இதுதான் மாஸ்டர் பிளான்.. திமுக, அதிமுகவே எதிர்பார்க்கல
சென்னை: அமித்ஷா தமிழகம் வரப்போகிறாராம்.. தேர்தல் தேதி நெருங்கி வரும்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை தமிழகத்தில் உண்டுபண்ணி வருகிறது.
கடந்த ஜுன் மாதம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தபோது சில முக்கிய விஷயங்களை, தமிழக பாஜக தலைவர்களிடம் தெரிவித்தாராம்.

பாஜக: அதாவது, "தமிழகத்தின் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்திலிருந்து ஒருவர், பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும்.. அதுவும், ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும்.. தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு 2 முறை வந்தது. அதனை கெடுத்தது திமுகதான்.. இந்த முறை, ஒரு பிரதமரை பாஜக நிச்சயம் உருவாக்கும்" என்றாராம்.
அமித்ஷா எதை மனதில் வைத்து, யாரை மனதில் வைத்து இவ்வாறு சொன்னார் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், தமிழகத்தில் வரப்போகும் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்பது, மேலிட தலைவர்களே எதிர்பார்க்காத ஒன்று.
ரிஸ்க்: திராவிட கட்சிகளின் துணையின்றி, இப்படியொரு ரிஸ்க் எடுத்துள்ளது தமிழக பாஜக.. தேர்தல் தேதியும் நெருங்கி கொண்டிருப்பதால், டெல்லி தலைவர்களும் பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி ஏற்கனவே 7 முறை வந்துசென்ற நிலையில், 8வது முறையாக இங்கே வரப்போறாராம்.
ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 தினங்களில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வந்து, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
சிவகங்கை: இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வரப்போகிறார்.. மொத்தம் 5 தொகுதிகளை கணக்கு செய்திருப்பதாக தெரிகிறது.. குறிப்பாக, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, நாகை, தென்காசி என 5 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
இதற்காக இன்று மதியம் 3.05 மணிக்கு விமானத்தில் அமித்ஷா மதுரை ஏர்போர்ட் வந்திறங்க உள்ளார். அங்கிருந்து 3.50 மணிக்கு சிவகங்கை செல்கிறார். அங்கு பாஜக கூட்டணி வேட்பாளராக இமகமுக தேவநாதன் யாதவை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
அமித்ஷா: பிறகு, சிவகங்கையில் இருந்து மதுரைக்கு அமித்ஷா வருகிறார். மதுரையில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து மாலை 6 மணிக்கு வாகன பேரணி சென்று வாக்கு சேகரிக்கிறார். அதன்பிறகு இன்றிரவு மதுரையில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித்ஷா தங்குகிறார்.
நாளையும் அமித்ஷாவின் பிரச்சாரம் தொடங்குகிறது. காலையில் மதுரையில் இருந்து கிளம்பும் அமித்ஷா, 9.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சென்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.. பின்னர், திருவனந்தபுரம் சென்று விமானத்தில் திருச்சி வந்து ஓட்டலில் மதிய உணவு முடித்து ஓய்வு எடுக்கிறார்.
எதிர்பார்ப்பு: மதியம் 3 மணிக்கு நாகை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார்.. மாலை 6.30 மணிக்கு தென்காசி லோக்சபா தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.. இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடும் நிலையில் அமித்ஷா அவருக்காக பிரச்சாரம் செய்ய போகிறார்.
முன்னதாக, சிவகங்கையில் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அது ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுபோலவே, மதுரையில் நாளை மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வையும் ரத்து செய்துள்ளாராம் அமித்ஷா.
5 தொகுதிகள்: எப்படியாவது 5 வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதுடன், வாக்கு வங்கியையும் தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், அமித்ஷாவின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை தமிழக களத்தில் உண்டுபண்ணி வருகிறது.
அதேபோல, தமிழக பாஜக வேட்பாளர்களுக்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆதரவு திரட்ட போகிறார்.. இதற்காக 2 நாட்கள் மொத்தம் 6 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய போகிறாரம்.. இதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணகிரிக்கு வரும் நிர்மலா சீதாராமன், பாஜக வேட்பாளர் நரசிம்மனுக்கும், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிறகு, தஞ்சையில் ரோடு ஷோவில் பங்கேற்பதுடன், அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு பிரச்சாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications