அன்பில் மகேஷுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? போலீஸ் காவல் கோரிய மனு உட்பட 3 மனுக்கள் மீது விசாரணை
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.. சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவு முதல் போலீஸ் விசாரணை வரை பல விஷயங்கள் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்பில் மகேஷ் வழக்கு
இந்த வழக்கில் அக்டோபர் 26-ம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஷ் தரப்பில் போலீஸ் காவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வாதம்
அன்பில் மகேஷ் ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்கும் காலத்தை மாற்றியது தொடர்பான அரசாணை, அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே பிறப்பிக்கப்பட்டதாக வாதிட்டனர்.
அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் பங்கேற்றதற்காக மட்டும் அன்பில் மகேஷை குற்றவாளியாக்க முடியாது என்றும், பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் பணம் கொடுத்ததாகச் சொல்லப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
ஜெயில் சாப்பாடு, தூக்கம்
அதேபோல ஜெயிலில் அவருக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாகவும் கோர்ட்டில் முறையிடப்பட்டது. முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உத்தரவிடப்பட்டிருந்தும், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே அவருக்கும் வழங்கப்படுவதாகவும், அதை சாப்பிட முடியாததால் உடல் எடை குறைந்துள்ளதாகவும் அவரது தரப்பு தெரிவித்தது. இரவு நேரத்தில் விளக்குகளை அணைக்காமல் வைத்திருப்பதால் தூக்கமும் பாதிக்கப்படுவதாகவும், மருந்துகள் மற்றும் உரிய உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மற்றொருபுறம், போலீஸ் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் உஷாராணி, இந்த வழக்கில் பணம் எங்கிருந்து வந்தது, யார் யாருக்கு சென்றது, அன்பில் மகேஷ் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் சொத்து விவரங்கள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, முத்துக்குமார், சுரேஷ் உள்ளிட்டோரின் பங்கு, பணப்பரிமாற்றம் மற்றும் பினாமி சொத்துகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 5 நாட்கள் போலீஸ் காவல் தேவை என்றும் போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
3 நாள் போலீஸ் காவல்
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, போலீஸார் கேட்ட 5 நாள் காவலுக்கு பதிலாக 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
அதே நேரத்தில் விசாரணையின்போது அன்பில் மகேஷுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தல் அளிக்கக்கூடாது என்றும், உரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அவரது வழக்கறிஞர் தினமும் அவரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், நவம்பர் 2-ம் தேதி மதியம் 12 மணிக்கு அன்பில் மகேஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஜாமீன் மனுவும் விசாரணையும்
இதனிடையே, அன்பில் மகேஷ் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீது லஞ்சம் பெற்றதற்கான நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும், போலீஸ் விசாரணைக்கு ஏற்கனவே ஒத்துழைத்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு கணைய அழற்சி பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரியும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று ஆஜர்படுத்துகிறார்கள்
இந்த 3 மனுக்களும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டன.. அதன்படி, 3 நாள் போலீஸ் விசாரணை முடிந்து இன்று மதியம் 12 மணிக்கு அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அப்போது போலீஸ் காவல் விசாரணையின் அடுத்தகட்ட நிலை, ஜாமீன் கோரிய மனு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் தொடர்பான மனு ஆகியவற்றில் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...!!!


Click it and Unblock the Notifications
