ஏவுகணை போல செங்குத்தாக சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்! அமெரிக்காவில் ஷாக்.. பதறிய மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பரபரப்பான சாலையில் தலைகீழாக ஏவுகணை போல வந்து விழுந்து நொறுங்கியது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சொகுசு பங்களாவில் இருந்து சில கி.மீட்டர் தூரமே உள்ள சாலையில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த அனைவருமே பலியாகியுள்ளனர். இந்த விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய் பார்ப்பவர்களை பதை பதைப்பு அடைய வைத்துள்ளது.

செங்குத்தாக விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமஸ்க்கு சிரிய ரக விமனாம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 9 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலை தடுமாறிய விமானம் பாம் பீச் கவுண்டியில் உள்ள கிரெஸ்ட்ஹேவனுக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.
ஏவுகணை எப்படி செங்குத்தாக வந்து மோதுமோ அதேபோல, விமானத்தின் மூக்குப்பகுதி நேராக சாலையில் மோதியது. இந்த விபத்தில் உடனடியாக அங்கு பெரிய தீப்பிழம்புகள் வெளியாகின. நெஞ்சை பதை பதைக்க வைத்த இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் பலியானதாக அமெரிக்கா விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் பீதி
மீட்பு பணிகளுக்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். விமானம் விபத்தில் சிக்கிய இடத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ரிசார்ட் வெறும் 14 கிலோ தொலைவில் தான் உள்ளது. விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியதில் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது.
விமானத்தின் பாகங்களில் தீப்பற்றி எரிந்தது. வீடுகள் மற்றும் சாலையில் சென்ற வாகனங்களுக்கு மிக அருகில் விமானம் விழுந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். அமெரிக்க நேரப்படி நண்பகல் 12.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
இந்த விபத்து குறித்து பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் நிறைந்த 6 வழிச்சாலையான மிலிட்டரி டிரெயில் சாலையில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து காரணமாக அந்தப் பகுதியை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, பயங்கர டர்புலன்ஸ் இருப்பதாகவும், மேலும் 2 ஆயிரம் அடி மேலே செல்ல அனுமதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
