இந்தியில் உரையாற்றிய துரை வைகோ.. "வைகோ மகன் இந்தியில் பேசுவதா!" ஒரு நொடி ஸ்டன் ஆன நெட்டிசன்கள்
சென்னை: தமிழ் மொழிக்காகவும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மதிமுக தலைவர் வைகோ. நாடாளுமன்றத்திலும் கூட அவரது பேச்சு எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலேயே இருக்கும். இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடந்த மாதிரி நாடாளுமன்றத்தில் அவரது மகனும் திருச்சி எம்பியுமான துரை வைகோ இந்தியில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி பல்வேறு வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அLன் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய துரை வைகோ, தனது உரையின் இறுதி பகுதியை இந்தியில் வாசித்தார்.

துரை வைகோ
முதலில் ஆங்கிலத்தில் பேசிய அவர், "தங்களது வாக்குரிமையை இழந்த 13 கோடி குடிமக்களின் சார்பாக நான் இன்று இங்கு பேசுகிறேன். ஜனநாயக ரீதியான வாக்குரிமையை இழந்த சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினரின் சார்பாக பேசுகிறேன். அரசமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் சார்பாக நான் பேசுகிறேன். ஏனென்றால், குடிமக்கள் தங்களின் அரசியலமைப்பு உரிமையான வாக்குரிமையை இழந்துள்ளனர்.
பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி வருகிறது. இதனால் நமது பாரத தேசம் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இன்று வாக்குரிமையை இழப்பது என்பது, நாளை ஒருவர் தனது மதத்தை பின்பற்றும் உரிமையை இழப்பதற்கு வழிவகுக்கும். நாளை ஒருவரின் கலாச்சார உரிமையை இழக்க செய்யும். கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை என அனைத்தையும் இழக்க நேரிடும். இன்னும் துல்லியமாக சொன்னால், வாக்குரிமையை இழப்பது என்பது கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையையே இழப்பதற்கு சமம்!
ஒட்டுமொத்த நாட்டிற்குமான பிரச்சினை
இது மதிமுகவின் பிரச்சனை மட்டுமல்ல.. காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சிகளின் பிரச்சனை மட்டுமல்ல. இது ஜனநாயகத்திற்கான பிரச்சனை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கான பிரச்சனை. இது ஜனநாயகத்திற்கும் கொடுங்கோல் ஆட்சிக்கும் இடையிலான போராட்டம்.
அதனால் தான் இன்று பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைத் தவிர, ஒட்டுமொத்த தேசமும் ஓரணியில் திரண்டுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், சமூக அமைப்புகள் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் இணைந்து நிற்கிறார்கள். வாக்கு திருட்டை தடுக்கவும், 13 கோடி வாக்காளர்களுக்கு நீதி கிடைக்கவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.
பாஜக மீது பாய்ச்சல்
விளையாட்டுகளில் மேட்ச் ஃபிக்சிங் நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இன்று தேர்தலிலேயே மேட்ச் ஃபிக்சிங் நடப்பதை நாம் காண்கிறோம். பாஜகவுக்கு தனியாக ஒரு நடுவர் இருக்கிறார். இந்த மேட்ச் ஃபிக்சிங் காரணமாக நமக்கு சந்தேகத்திற்குரிய தலைமை தேர்தல் ஆணையர் கிடைத்திருக்கிறார். வாக்காளர்களைக் காற்றில் மாயமாக மறைக்கும் மேஜிக்கை தெரிந்த தலைமை தேர்தல் ஆணையர் அவர்!
ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். வாக்களிப்பது என்ற அடிப்படை ஜனநாயக உரிமையை எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் மறுக்கப்படக்கூடாது. அரசியலமைப்புக்கு எதிராகவும் ஜனநாயக விரோதமாகவும் செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
இந்தியில் உரை
தொடர்ந்து இந்தியில் அவர், "எனக்கு இந்தி தெரியாது; ஆனாலும் என் மாநிலமான தமிழ்நாடு என்ன சொல்ல விரும்புகிறது என்பதை இந்த நாடு அறிய வேண்டும். இதனால் சில விஷயங்களை ஹிங்லீஷில் சொல்ல விரும்புகிறேன். எங்களில் பெரும்பாலான தமிழர்களுக்கு இந்தி பேசத் தெரியாது. ஆனால் தமிழ்நாடு உரத்த குரலில் இந்த குரலை எழுப்புகிறது.. "வாக்குத் திருட்டு நிறுத்தப்பட வேண்டும்! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்! அரசியலமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்! மதச்சார்பின்மை வாழ்க! சமூக நீதி வெல்க! ஜனநாயகம் தழைக்கட்டும்!" என்றார்.
விமர்சனம்
அதாவது அவர் இந்தி உரையை ஆங்கிலத்தில் எழுதி வைத்து, அப்படியே இந்தியில் படித்தது போலவே தெரிகிறது. இதற்கிடையே இந்தியில் அவர் ஆற்றிய இந்த உரைய சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் இந்தியில் ஆற்றப்படும் உரைகள், அவையின் தரத்தைத் தாழ்த்திவிட்டன என வைகோ முன்பு கூறியிருந்த நிலையில், அதையும் துரை வைகோவின் இந்தி பேச்சுக்கு கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
