தமிழகத்தில் 25 தொகுதியில் பாஜக போட்டியா? அமித்ஷா சொன்னது இதுதான்.. மழுப்பிய அண்ணாமலை.. ஆஹா!
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி தலைமை அதிமுகதான். 25 சீட் கேட்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிமுகவில் ஜெயக்குமார் மற்றும் செம்மலை ஆகியோர் செல்லியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமித்ஷா சொன்னது போல பிரதமர் மோடி குஜராத்தில் சாதரணமான ஒரு வீட்டில் பிறந்து மக்களுடைய அன்பை பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக இருக்க போகிறார். எங்க கட்சியின் சித்தாந்தம் பூத் லெவலில் இருந்து மேலே வந்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால் முதல்வருக்கு பாஜகவின் சித்தாந்தம் தெரியாது. அவர் பேசுவது அவருக்கு எந்த அளவுக்கு அரசியல் தெரிகிறது என்பதைத்தான் காட்டுகிறது. 9 ஆண்டு காலம் பாஜக என்ன செய்துள்ளது. 10வது ஆண்டு என்ன செய்ய போகிறோம் என முதல்வரின் கேள்விக்கு நேற்று நாங்கள் பதிலளித்து இருக்கிறோம். நீங்கள் 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள். இந்திய அளவில் மோசமான ஊழல் வரலாறு எழுதப்பட்டுள்ளது என்றால் 2004-2014 வரை திமுகவின் அமைச்சர்களால் எழுதப்பட்டுள்ளது.
9 ஆண்டுகள் இருக்கும் பாஜக அமைச்சர் ஒரு குண்டூசியை திருடிவிட்டார் என்று சொல்ல முடியுமா? அந்த அளவுக்கு தூய்மையான அரசு என்றால் வயிறு எரியத்தானே செய்யும். 2 ஆண்டுகளில் தமிழகத்தில் திமுக ஆட்சி ஊழலுக்கு பெயர் வாங்கியுள்ளது. அதனால்தான் நீங்க பால்வளத்துறை அமைச்சரை மாற்றினீர்கள். நிதி அமைச்சராக இருந்த பிடிஆரை ஏன் மாற்றினீர்கள்?
30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து இருப்பதாக சொன்னதற்கு தானே மாற்றினீர்கள். அதனால் ஊழலுக்கு பெயர் வாங்கிய திமுகவின் கூடாரத்திற்கு தலைவராக இருக்கும் ஸ்டாலின் பிஜேபிக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு பாஜகவின் நிலை தரம் தாழ்ந்து செல்லவில்லை. 9 ஆண்டுகளில் எங்கள் சாதனைகள் என்ன என்று மக்களுக்கு தெரியும்.
எம்.பி.பிஎஸ் கலந்தாய்வு மத்திய அரசு நேரடியாக நடத்தப்போவதாக வரும் செய்திகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, " நீட் வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் மெடிக்கல் அட்மிஷன் ஒரு மோசடியாகத்தான் இருந்தது. அது ஒரு ஊழல் நிறைந்த கவுன்சிலிங்காக இருந்தது. ஆற்காடு வீராசாமியே இது குறித்து பேசியிருக்கிறார். எந்த ஊழலும் இன்றி ஏழைத்தாயின் மகனும் மெடிக்கல் காலேஜ் போக வேண்டும் என்பதற்காகத்தான் நீட் கொண்டு வந்து இருக்கிறோம். இதில் எந்த தவறும் இல்லை. திமுகவிற்கு கவுன்சிலிங் பற்றி பேசுவதற்கு எந்த வித அருகதையும் இல்லை" என்றார்.

தமிழ்நாட்டில் கூட்டணி தலைமை அதிமுகதான். 25 சீட் கேட்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.. தேர்தல் வரும் போதுதான் முடிவு செய்வோம் என்று அதிமுகவில் ஜெயக்குமார் மற்றும் செம்மலை ஆகியோர் செல்லியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி 39 சீட்டிலும் ஜெயிக்க வேண்டும். மினிமம் 25 ல் வெற்றி பெற வேண்டும். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கூட்டணியில் உள்ள அனைவரும் பாண்டிச்சேரி உள்பட 40லும் வெற்றி பெற்று போக போகிறோம்.
யார் எப்படி நிற்கிறாங்க... என்பதெற்கு எல்லாம் நேரம் இருக்கு காலம் இருக்கு.. வரும் காலத்தில் அதைப்பற்றி பேசுவார்கள். தலைவர்கள் இருக்கிறார்கள் பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம். இதை பத்திரிகை முன்பு ஆளுக்கொரு கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. நேரமும் காலமும் வரும் போது பேசுவோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடி பெறப் போகும் 400 எம்.பிக்களில் நாமும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை." என்றார்.












Click it and Unblock the Notifications