"பச்சை துரோகம்".. எடப்பாடி பழனிசாமி அடித்த கமெண்ட்.."அந்தம்மா இருக்காங்களே".. கிலியில் கட்சி கூடாரம்
எடப்பாடி பழனிசாமி எடுக்க போகும் புது முடிவால் நிர்வாகிகள் கலங்கி உள்ளனர்
சென்னை: ஒருபக்கம் கோர்ட்டின் தீர்ப்பால் சசிகலா அதிர்ந்து கிடக்க, இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஓபிஎஸ், மறுபக்கம் சுருண்டு கிடக்க, எடப்பாடி பழனிசாமி மட்டும் செம குஷியில் இருக்கிறார்..!
பொதுச்செயலாளர் பதவி குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாகி உள்ளது.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இந்த தீர்ப்பை வரவேற்று பேசினர்..
மேலும், சசிகலா இதோடு அரசியலிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அதிமுக சீனியர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஹைகோர்ட்
ஆனால் சசிகலாவோ இந்த தீர்ப்பு குறித்து சென்னை ஹைகோர்ட்டில் அப்பீலுக்கு செல்வோம் என்று கூறியுள்ளார்.. அத்துடன், தன்னுடைய அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என்றும், மாவட்டங்களில் தனக்கான ஆதரவு அதிகமாக பெருகி உள்ளதாகவும் நம்பிக்கையுடன் சொல்கிறார்.. குறிப்பாக, "ஆன்மீக பயணம் முடிந்து விட்டது, இனி அரசியல் பயணம்தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் சசிகலா... இது ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு தரப்பு லேசான கலக்கத்தை தந்துள்ளது.

39 தொகுதிகள்
இதனிடையே, சசிகலா பேரவை என்று புதிதாக கட்சி தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. வரும் எம்பி தேர்தலில் சசிகலா பேரவை சார்பில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்கள் வாங்குகிற ஓட்டு சதவீதம் கணக்கின் பலம் நிரூபிக்கும்பட்சத்தில், அதிமுகவில் சசிகலா இணைவதற்குரிய முக்கியத்துவம் தானாக தேடி வரும் என்று சசிகலாவிடம் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்களாம். இந்த தகவலும் எடப்பாடி தரப்புக்கு லேசான கிலியை தந்து வருகிறது.

எடப்பாடி அடித்த கமெண்ட்
எனினும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆளுமையை எந்த சூழலிலும், யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. காரணம், கோர்ட் தீர்ப்பு வந்தபிறகு, சேலத்துக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை செம்மலை, சேலம் இளங்கோவன் உள்ளிட்ட சேலம் அதிமுகவினர் சந்தித்திருக்கிறார்கள்.. அப்போது, சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து அவர்கள் எடப்பாடியிடமே கருத்து கேட்டார்களாம். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அவரது அரசியல் பயணம் புஸ்வாணமாகிவிடும்" என்று கமெண்ட் அடித்தாராம்..

புஸ்வானம்
அதுமட்டுமல்ல, அந்தம்மா சேலத்துக்கு வந்தபோது அவருக்கு வரவேற்பு அளித்த, ஆதரவு தெரிவித்த அனைத்து நிர்வாகிகளின் விபரங்களும் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. சசிகலாவை சந்திக்க கூடாது என்று பலமுறை வலியுறுத்தியும், அதையும் மீறி சந்தித்துள்ளனர்.. இத்தனைக்கும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த, ஒரு டீமை நேரடியாக அனுப்பி எடப்பாடி பழனிசாமி பேச வைத்ததுடன், சசிகலாவை சந்திக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார்.. ஆனாலும் சிலர் துரோகம் செய்ததை ஏற்க முடியவில்லையாம். எனவேதான் எடப்பாடி லிஸ்ட் கேட்டுள்ளார்.. அந்த லிஸ்ட்டும் ரெடியாகி கொண்டிருக்கிறதாம்.. அந்த லிஸ்ட் எடப்பாடி கையில் கிடைத்ததும், அவர்களுக்கும் சேர்த்து கட்டம் கட்டப்படும் என்று அதிமுகவில் பகீர் பரவி வருகிறது...

அப்செட்
ஆனால், ஓபிஎஸ் தான் கொஞ்சம் அப்செட் என்கிறார்கள்.. காரணம், ஓபிஎஸ்சை சந்தித்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.. அப்போது சசிகலாவின் அரசியல் குறித்து அவரிடமும் விவாதிக்கப்பட்டுள்ளது.. அதற்கு ஓபிஎஸ், "சசிகலா போட்ட வழக்கை எதிர்த்து நாம் போட்ட வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்க வேண்டும். அவருக்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்த்தேன். அப்படி வந்திருந்தால் தான் எடப்பாடிக்கு எதிரான அரசியலை கட்சிக்குள் நாம் பண்ணமுடிந்திருக்கும்.

கூடாரம்
அப்படி வராதது வருத்தம் தான்" என்று புலம்பி தள்ளிவிட்டாராம்.. இருந்தாலும் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்தவர்களிடம் புன்முறுவலுடன் கடைசியாக வழியனுப்பி வைத்தாராம் ஓபிஎஸ்.. அந்த வகையில், ஓபிஎஸ்ஸின் கை இனி கட்டப்பட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக, எடப்பாடி பழனிசாமிக்கு எதை தொட்டாலும் துலங்குகிறதே என்ற பேச்சுதான் அதிமுக கூடாரத்தில் எதிரொலித்து கொண்டிருக்கிறது...












Click it and Unblock the Notifications