தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டணம்? வந்து விழுந்த கேள்வி! மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பதில்
சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் பரவின. இது சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்குத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது முதல் 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 100 யூனிட்டிற்கு மேல் பயன்பாட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படலாம் எனத் தகவல் பரவியது.

மின் கட்டணம்
ஏற்கனவே விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், மின் கட்டணமும் உயர்த்தப்படலாம் என்ற இந்த தகவால் மக்கள் கவலையையே ஏற்படுத்துவதாக இருந்தது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்குத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், அது விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள மின்சார துறை பணிகள் தொடர்பாகத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ராதாகிருஷ்ணன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "மின் வாரியத்தின் நஷ்டம் இப்போது மிக பெரியளவில் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மின்வாரியத்தின் நஷ்டம் ரூ.800 கோடியாகக் குறைந்துவிட்டது. அதேநேரம் ஆண்டுக்கு ரூ.17,000 கோடி வரை மானியம் கிடைத்து வருகிறது. மேலும், இது தவிர நஷ்டத்தை ஈடு செய்யத் தமிழக அரசும் ரூ.17,000 கோடி தருகிறது.
வருவாயைப் பொறுத்தவரை மின்துறை வருவாய் சுமார் ரூ.70 ஆயிரம் கோடியாக இருக்கிறது. மின் வாரியத்திற்குத் தேவையான நிதியையும் இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான நிலுவையில் இருக்கும் ஒப்பந்தங்கள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.
மின் கட்டணம் உயருமா?
அப்போது தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுமா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், "மின் கட்டண உயர்வு தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் விளக்கமளித்து இருக்கிறார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின் கட்டண உயர்வில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. மின்துறை இப்போது ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் பெயரில் செயல்படுகிறது. ஒழுங்கு முறை ஆணையத்தின் கொள்கை முடிவை முதல்வர் அறிவிப்பார். அதை நாங்கள் செயல்படுத்துவோம்" என்று அவர் கூறினார்.
மின் தேவை
மின் தேவை குறித்து விளக்கமாகப் பேசிய அவர், "வேலூர் மண்டலத்தில் மட்டும் மின் தேவை சுமார் 1,557 மெகாவாட்டாக இருக்கிறது. இந்தாண்டு மட்டும் இங்கு மூன்று துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மின்துறை ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். 650 டெக்னீஷியன்கள், 1850 களப் பணியாளர்கள் விரைவில் பணிநியமனம் செய்யப்படுபவர்கள்.
இப்போது தமிழகத்திற்கு 14,800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. மிக விரைவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் திறன் கொண்ட தெர்மல் யூனிட்டும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுபோக உடனடியாக 100 துணை மின் நிலையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். காற்றாலை, தண்ணீர், சோலார் மூலமான மின் உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications