இவரை மறந்துட்டோமே.. தேர்தல் களத்தில் சகாயம் ஐஏஎஸ்.. 'நேர்மை' எடுபடுமா?
சென்னை: அரசியல் களம் காணும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?
சகாயம் ஐஏஎஸ் எனும் பெயரை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு மாவட்ட ஆட்சியராக தனது செயல்பாடுகளால் இம்பேக் ஏற்படுத்தியவர் இவர். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரி முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சகாயம் ஐஏஎஸ், தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக பணியாற்றிய போது விருப்ப ஓய்வு பெற்றார்.
நேர்மை என்பது இவரது அடையாளமாக உள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை களம் காண்கிறது.

கூட்டணியுடன் போட்டி
அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாத சூழலால், தற்போது 20 இடங்களில் மட்டும் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய இரு ஆதரவுக் கட்சிகளுடன் சகாயத்தின் அரசியல் பேரவை கூட்டணி அமைத்துள்ளது. போட்டியிடும் 20 வேட்பாளர்களும், இவ்விரு கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவார்கள் எனவும் சகாயம் தெரிவித்துள்ளார்.

அத்தனை ஆர்வம்
சற்று லைட்டாக ரீவைண்ட் செய்து பார்க்கலாம். சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த பிப்.21ம் தேதி நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில், தனது அரசியல் என்ட்ரியை முதன்முறையாக அறிவித்தார் சகாயம். அன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய அந்த பொதுக்கூட்டத்திற்கு மாலை 6 மணியளவில் சகாயம் வந்த போது, அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. அதில், பெரும்பாலானோர் இளைஞர்களே. வயதான நபர்களையே அந்த கூட்டத்தில் காண முடியவில்லை. மேடைக்கு வருவதற்குள், அவர் முன் குறைந்தது 100 இளைஞர்களாவது அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும் செல்பி எடுக்க மல்லுக்கட்டினர்.

கண்கூடாக பார்த்தோம்
அதேபோல், கிட்டத்தட்ட இரவு 8 மணியளவில் பேசுவதற்கு மேடைக்கு சகாயம் வந்த போது ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. அவரை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற வார்த்தையை அவ்வளவு சாதாரணமாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், நமது ஒன் இந்தியா குழு, அதை கண்கூடாக காண நேரிட்டது.

ஒத்துழைக்க மறுப்பு
முழுதாக 2 மணி நேரம் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துவிட்டார் சகாயம் ஐஏஎஸ். நேர்மையாக இருந்ததற்கு பரிசாக, தான் எத்தனை முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டேன் என்பது குறித்தும், எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டேன் என்றும் வேதனையோடு தெரிவித்தார். ஏழைகளுக்கு நல்லது செய்ததற்காக எனது சக அதிகாரிகளே எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தனர் என்றார்.

இளைஞர்களே வாருங்கள்
தொடர்ந்து அவர் பேசுகையில், "இவர் ஊழலை ஒழிப்பதில் அனுபவம் உள்ளவர். எனவே இவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று என் மேல் சுமையை இறக்கி வைத்துவிடுகின்றனர். நான் 29 ஆண்டுகள் சுமையை அனுபவித்துவிட்டேன். போதும்.. நான் மட்டும் நினைத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது. என் நாட்டு இளைஞர்களே, நீங்கள் எல்லோரும் எழுந்து வாருங்கள்" என்று அழைப்பு விடுத்த போது ஆர்ப்பரித்தது கூட்டம்.

நடிகர்கள் வீடே தெரியாது
மேலும், "இத்தனை வருடங்களாக, எனக்கு ஏதாவது ஆகிவிடுவமோ என்ற அச்சத்திலேயே இருந்து, விருப்ப ஓய்வு பெற்று பிறகு, இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தால், மீண்டும் தமிழ் சமூக பணிக்காக இளைஞர்கள் இவரை அழைக்கின்றார்களே என்று என் மனைவி இரண்டு நாட்களாக தூங்கவில்லை. ரஜினியோடு இணையப்போகிறார், அந்த நடிகரோடு இணையப்போகிறார் என்றெல்லாம் சொன்னார்கள். உண்மையில் அந்த நடிகர்கள் வீடெல்லாம் எங்கிருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது" என்றார்.

கணிசமான வாக்குகள்
இறுதியில், தமிழக அரசியல் களத்தில் நாம் அடியெடுத்து வைக்கப் போகிறோம் என்று அவர் அறிவித்த போது, வேட்டுச் சத்தம் அதிர, அந்த இடமே ஐந்து நிமிடங்களுக்கு திக்குமுக்காடிப் போனது. என்னதான், சகாயம் ஐஏஎஸ் பரிட்சயமான முகமாக இருந்தாலும், அவருக்கு இவ்வளவு ஆதரவு உள்ளதா என்று நமக்கே வியப்பாக இருந்தது. எனினும், ஆதரவு அனைத்தும் வாக்குகளாக கன்வெர்ட் ஆகுமா என்பதை தேர்தல் சமயத்தில் தான் அறிந்து கொள்ள முடியும். மீடியா வெளிச்சம் இல்லாமல், சப்தமின்றி 20 தொகுதிகளில் போட்டியிடும் சகாயம் அமைப்பு, அதில் சில குறிப்பிட்ட இடங்களில் கணிசமான வாக்குகளை பெறவும் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அதேசமயம், சகாயம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications