ஜெகன்மோகனா? சந்திரபாபுவா? ஆந்திராவின் ஆட்சி அதிகாரம் யார் கைக்கு மாறப் போகிறது? நேரடி ரிப்போர்ட்!
சென்னை: ஆந்திர தேர்தல் களத்தில் யாருக்குச் செல்வாக்கு உள்ளது? ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்?
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து மாநிலச் சட்டசபைத் தேர்தலும் நடந்துள்ளது. அந்த மாநிலத்தில் ஜெகன்மோகன் vs சந்திரபாபு நாயுடு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஆந்திர அரசியல் என்பது சாதிரீதியாகக் கட்டமைக்கப்பட்டது. காலங்காலமாக அதுதான் யதார்த்த நிலை. இரண்டு சமூகத்தினர் அங்கே உள்ளனர். பல ஆண்டுகளாக அந்தப் பிரிவினரிடையே தான் அதிகார சண்டை நிலவி வருகிறது.
கம்மா சாதியினருக்கும் ரெட்டி சாதியினருக்கும்தான் ஆந்திர அரசியலில் யுத்தம் நிலவி வருகிறது. ஆனால், இந்த 2 சாதிகளுமே மைனாரிட்டிஸ் தான். கம்மா சாதியினர் 7% தான் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாயுடு சாதிக்குள் வருகின்றனர். இந்த நாயுடு என்ற பட்டத்தை கம்மா சாதியில் உள்ள 4 சாதியினர் போட்டுக்கொள்கிறார்கள்.
அதைப்போல ரெட்டி சாதியினர் 8.5% இருப்பார்கள். இவை இரண்டு ம் இல்லாமல் ராஜூ,ஆர்ய வைஷ்யா, பிராமின் எனப் பல சாதியினர் வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒரு பக்கம் ரெட்டி ஆதரவாளர்களாகவும் இன்னொரு பக்கம் நாயுடு ஆதரவாளர்களாகவும் தங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அதனால் இந்தச் சாதிகளைவிட சவுண்ட் அதிகம் கேட்கும் சாதியாக ஆந்திர அரசியலில் கம்மா மற்றும் ரெட்டி வகுப்பினர் உள்ளனர்.

இந்த இருவகுப்பினர் தீர்மானிப்பதுதான் ஆந்திர அரசியலாக உருவெடுக்கும். மற்ற சாதியினருக்கு என்று தனியே குரல் அங்கு இல்லை என்றே சொல்லலாம்.
ஆந்திராவில் பல்வேறு தடைகளை மீறித்தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் அடித்தட்டு மக்களின் அரசியல் பிரதிநிதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றுள்ளார் அவர்.
அதனால், அரசு ஊழியர்கள், உயர்சாதியினர் மத்தியில் ஜெகன்மோகன் ரெட்டி மீது அதிருப்தி நிலவுகிறது. அரசு ஊழியர்களுக்குச் சரியான தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில் சிக்கல் உள்ளது. அதில் மெத்தனமாக உள்ளது ஜெகன்மோகன் அரசு. ஆகவே, அது குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.
இந்த ஆட்சியில் மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்று மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குச் சாட்சியாகச் சாலைகள் தரம் மிகமிக மோசமாக உள்ளன.

இவருக்கு எதிராக பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணிகூட வலுவான கூட்டணி எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், ஆந்திராவில் பாஜகவுக்கு அடித்தளமே இல்லை.
பவன் கல்யாண் தொடங்கிய அரசியல் வேறு. அவர் இப்போது வந்து நிற்கும் அரசியல் வேறு. அவர் கட்சி தொடங்கும்போது 'எனக்குத் தலைவர் அம்பேத்கர்' என்று சொன்னார். சமூகநீதிக்கான செய்தியோடு அரசில் களத்திற்குள் அடியெடுத்து வைத்தார்.
ஆனால், தேர்தலுக்காக அவர் சில சமரசங்களைச் செய்தார். அதாவது பாஜகவுடனும் தெலுங்கு தேசத்துடனும் அவர் கூட்டணி வைத்தார். இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆரம்பக் காலத்தில் அவர் பேசிய கருத்தியலுக்கு முற்றிலும் வேறான திசைக்கு அவர் நகர்ந்துவிட்டார். அவரது கொள்கை படி அவர் ஜெகன்மோகனுடன்தான் சேர்ந்திருக்க வேண்டும். அதுதான் இயற்கையான கூட்டணி.
ஆனால், அதை அவர் கைகழுவிவிட்டார். அது ஒரு சறுக்கலாகவே சொல்லப்படுகிறது. பவன் சாதியைச் சேர்ந்தவர்கள் ஓட்டு அவருக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும், அது முழுமையாகக் கிடைக்கும் என்று சொல்வதற்கு இல்லை என்றே தகவல்கள் வருகின்றன.

ஜெகன்மோகனின் ஆட்சிக்காலத்தில் பெண்களை மையப்படுத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல குழந்தைகளைச் சார்ந்த திட்டங்கள் அங்கே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகளைத் தனியார் தரத்திற்கு உயர்த்தியது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியைக் கொண்டுவந்தது. தரமான பாடங்களை உருவாகிக் கொடுத்தது இவை எல்லாம் நல்ல முயற்சிகள். அதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆகவே, அவருக்கு வீட்டுக்கு ஒரு பெண்ணின் ஓட்டு என்பது உறுதியாக உள்ளது. ஜெகன்மோகனின் அதிகப்படியான ஆதரவு வாக்காளர்கள் தலித்துகள்தான். அதனால்தான் இந்தத் தேர்தலில் நிறைய தலித் வேட்பாளர்களைப் போட்டுள்ளார். ரெட்டி வேட்பாளர்கள் குறைவாகவே நிறுத்தியுள்ளார். இதனால் கட்சிக்குள் சின்ன அளவில் சலசலப்பு உள்ளது. அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் சொல்லும்.
பாரம்பரியமாகப் பார்த்தால் தலித் ஓட்டுக்கள் தெலுங்கு தேசத்திற்கு உரியதாக இருந்தன. அதற்குக் காரணம் என்.டி.ஆர். இதுவரைத் தலித்துகள் ஒரு நாயக பிம்பமாகப் பார்த்தனர். அந்தப் பிம்பம் சந்திரபாபு நாயுடு வந்த பிறகு உடைந்து போனது. அவரால் தலித் மக்களைத் தக்கவைக்க முடியாமல் போய்விட்டது.
ஒரு பக்கம் ஜெகன்மோகன் அடித்தட்டு மக்களின் ஆதரவை அதிகம் பெற்றிருந்தாலும் வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மேல் தட்டு மக்கள் எனப் பலரின் அதிருப்தியையும் அவர் சம்பாதித்திருக்கிறார்.
எனவே ஜெகன் திட்டத்தால் பலன் பெற்றவர்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பலனடையாதவர்களின் எண்ணிக்கை உருவாகி உள்ளது. உயர்சாதி ஓட்டுக்கள் அளவில் குறைவாக இருந்தாலும் அவர்களால் ஏற்படுத்தப்படும் தாக்கம் வலுவானதாக இருக்கும். அதை பல்வேறு கட்டங்களில் நாடு உணர்ந்துள்ளது.
குறிப்பாக, இன்று வரை நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற விபி சிங் ஆட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கியது இந்த உயர் வகுப்பினர்தான்.












Click it and Unblock the Notifications