ஆளுநரிடம் ‘நீட்’ விலக்கு கேட்ட தந்தை.. ‘நோ’ சொன்ன ஆர்.என்.ரவி.. திமுக அதிரடி ரிப்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதாவில் எப்போது கையெழுத்துப் போடுவீர்கள் என்று கேள்வி எழுப்பிய மாணவியின் தந்தைக்கு, "கையெழுத்துப் போடவே முடியாது" என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்திருக்கிறார். அவரது இந்தப் பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் இன்று 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விருது வழங்கும் 'எண்ணித் துணிக' விழா நடைபெற்றது. அதில் ஏறக்குறைய 100 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.

 Will never clear Tamil Nadu govts anti-NEET bill says Governor RN Ravi

அப்போது விழாவில் கலந்துகொண்ட சேலத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் ஆளுநரிடம் 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதாவில் எப்போது கையெழுத்துப் போடுவீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஆளுநர் ஆர் என் ரவி, "நெவர், எவர், கிவென்" என்று பதிலளித்தார். மேலும் அவர், "நீட் தேர்வில் வெற்றி பெரும் திறமை இந்த மாணவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் அதை நிரூபிப்பார்கள்" என்றும் கூறினார். அவரது பதிலைக் கேட்டு திருப்தி அடையாத அந்தத் தந்தை, "நாங்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டோம் சார்" என்று விளக்கம் அளித்தார்.

இந்த விவாதத்தால் சற்று நேரம் ஆளுநர் மாளிகையில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியே வந்த அந்தத் தந்தையிடம் நாம் பேசினோம். அவர் யார்? ஆளுநரிடம் கேள்வி எழுப்பியதன் பின்னணி என்ன? என்று வினவினோம்.

 Will never clear Tamil Nadu govts anti-NEET bill says Governor RN Ravi

அவரது பெயர் அம்மாசியப்பன் ராமசாமி என்றவர் பேசத் தடதட என்று தனது உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்க்கும்படி பேசினார்.

"நான் சேலம் உருக்காலையில் வேலை செய்கிறேன். நான் ஒரு இயற்கை விவசாயி. எனது மகள் நீட் தேர்வில் 623 மதிப்பெண்கள் பெற்று, இப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்றுதான் சேர்ந்திருக்கிறார். மாநில அளவில் எனது மகள் 878வது ரேங் கிடைத்தது. அரசு கோட்டாவிலேயே என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்துவிட்டது.

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற வெற்றியாளர்களுக்கு இன்று ஆளுநர் விருது கொடுப்பதற்காக விழா ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு எனது மகளும் அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் நானும் வந்திருந்தேன். நீட் தேர்வில் வென்ற 100 மாணவர்களுக்கு ஆளுநர் விருது வழங்கினார். அது மகிழ்ச்சியானதுதான்.

 Will never clear Tamil Nadu govts anti-NEET bill says Governor RN Ravi

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக 'நீட்' தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற வழி தெரியாமல் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் விழிப் பிதுக்கிப் போய் நின்றார்கள். இன்றைக்கு அதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

என்ன மாதிரி படித்தால்? எப்படி முன்னேற முடியும் என்ற சூத்திரத்தைப் பிடித்துவிட்டார்கள். இதற்குப் பின்னால் எல்லாம் கோட்சிங் செண்டர்கள் தான் உள்ளன. அதனுடன் பள்ளி நிர்வாகமும் உள்ளது.

பள்ளியில் ஆசிரியர்கள் போதுமான வரையான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களால் 'கவர்' செய்ய முடியாத பாடங்களைத் தனியார் கோட்சிங் செண்டர் மூலமாகச் சொல்லிக் கொடுத்து மாணவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறார்கள்.

கல்வியுடன் சேர்த்து நீட் தேர்வையும் முறையே சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாம் இந்தளவுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளோம். இந்தியாவிலேயே அதிக மதிப்பெண் பெற்ற பிரபஞ்சன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். என் மகளுடன் படித்த மாணவர்களில் ஏறக்குறைய 30 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

 Will never clear Tamil Nadu govts anti-NEET bill says Governor RN Ravi

இத்தனை மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதைவைத்து நாம் பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். 12 ஆம் வகுப்பைப் படித்துவிட்டு, அதற்கு முன்னால் ஜஸ்ட் லைக் தட் என்ற அளவில் தேர்வில் வென்ற பிள்ளைகள், இப்போது அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத பாடங்களைப் படிப்பதற்காக 3 ஆண்டுகள் வரை செலவு செய்கிறார்கள்.

ஒரே பாடத்தை 3 ஆண்டுகள் திரும்பத் திரும்பப் படிக்கும் போது ஒரு மாணவனின் மனநிலை எந்தளவுக்குப் பாதிக்கப்படும்? இந்த நீட் தேர்வுக்காக 13 மணிநேரம் படிப்பதாக மாணவர்கள் தங்களின் பேட்டிகளில் சொல்கிறார்கள். அவர்கள் குழந்தையா? அல்லது வேறு ஏதாவதா?

எங்களைப் போன்ற முதல் தலைமுறை குழந்தைகள் மருத்துவப் படிப்புக்குள் செல்வதைத் தடுப்பதற்காகப் பல முட்டுக்கட்டைகளைப் போடுகிறார்கள். முதலில் நீட் என்றார்கள். இப்போது நெக்ஸ்ட் என்கிறார்கள். நாங்கள் எல்லாம் அடித்தளத்திலிருந்து இப்போதுதான் மருத்துவப் படிப்பு நோக்கி வருகிறோம். ஆனால், உள்ள விடாமல் பல தடைகளைக் கொண்டுவருகிறார்கள். நினைத்துப் பாருங்கள்? ஒட்டுமொத்த தமிழகமே நீட் தேர்வை வேண்டாம் என்கிறது.

 Will never clear Tamil Nadu govts anti-NEET bill says Governor RN Ravi

அதற்காகத்தான் இன்றைக்கு நடந்த ஆளுநர் மாளிகை விழாவில், ஆளுநரிடம் 'நீட் தடை மசோதாவுக்கு எப்போது கையெழுத்துப் போடுவீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு காரணத்தைச் சொன்னார்.

ஆனால், ஒரு பெற்றோராக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு நீட் வேண்டாம். நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும்.

எதைச் சரி செய்ய முடியாதோ அதைச் சகித்துக்கொள் என்று சொன்னார்கள். எதைச் சகித்துக் கொள்ள முடியாதோ அதைச் சரி செய் என்று சொன்னார்கள். நாங்கள் சகித்துக் கொள்ளவும் முடியாமல், சரியச் செய்ய முடியாமல் தத்தளிக்கும் பெற்றோராக நாங்கள் இருக்கிறோம்.

ஏனென்றால், இந்த நீட் தேர்வுக்காக ஒவ்வொரு பெற்றோரும் செலவு செய்கின்ற பணம் இருக்கிறதில்லையா? அது சாதாரணமான பணம் இல்லை. 12 ஆம் வகுப்பு வரை படிக்கவைக்கின்ற தொகையைவிடப் பல மடங்கு அதிகம்.

வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டி உள்ளது. 9 ஆம் வகுப்பிலிருந்து தொடங்கி, 12 வகுப்பு வரை நீட் தேர்வுக்கு எனத் தனி கோட்சிங் செண்டரில் படிக்கவைக்கிறோம்.

இதுவரை 20 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன். நான் மத்திய அரசின் ஊழியர். என்னால் கடனை வாங்கி படிக்கவைக்க முடிகிறது ஒரு ஏழை தகப்பன் என்ன செய்வான் சொல்லுங்கள்? ஒரு ஏழை மாணவன் என்ன செய்வான் சொல்லுங்கள்?

அந்த ஆதங்கத்தில்தான் ஆளுநரிடம் கேட்டேன். அவர் கையெழுத்துப் போடவே முடியாது என்று மறுத்துவிட்டார். நான் ஏதோ விரக்தியில் கேட்கவில்லை. எனது மகளை வெற்றி பெற வைத்துவிட்டு இதைக் கேட்கிறேன்" என்கிறார் இந்தத் தந்தை.

 Will never clear Tamil Nadu govts anti-NEET bill says Governor RN Ravi

ஆளுநரின் இந்தப் பேச்சைப் பற்றி திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன், "ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின் படி நடக்கவில்லை. அதை அவர் அவமானப்படுத்துகிறார். ஆளுநர் பதவியை அவர் அவமானப்படுத்தி வருகிறார்.

அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்லி இருக்கிறதோ அதன்படி நடந்துகொள்வதுதான் ஆளுநரின் கடமை. அதைவிட்டுவிட்டு ஆர். என். ரவி தன்னுடைய விருப்பு வெறுப்பு அடிப்படையில் நடந்துகொள்ளக் கூடாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்புகின்ற மசோதாவில் ஏதேனும் சட்டச் சிக்கல் உள்ளதாக அவர் கருதினால், அதை அவர் குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். அதைவிட்டு விட்டு 'நீட் விலக்கு மசோதாவுக்குக் கையெழுத்துப் போட மாட்டேன்' என அவர் சொல்வது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கின்ற செயலாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன்.

 Will never clear Tamil Nadu govts anti-NEET bill says Governor RN Ravi

இது சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மான. அதில் ஆளுநர் கையெழுத்துப் போட மறுக்கிறார் என்றால், அவரது செயல் சட்டமன்றத்தையே அவமதிப்பதாகும். ஆகவே அதை அரசு சட்டரீதியாகவே எதிர்கொள்ளும். முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கான முடிவை விரைவில் எடுப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+