எனது வழக்கு மூலமே திமுகவின் நாடகம் முறியடிப்பு.. ஆனால் மேல்முறையீடு செய்யப்போவதில்லை.. கரு நாகராஜன்
சென்னை: தான் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு நடைபெறும் என்பதை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பதன் மூலம் திமுகவின் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்தது.
தமிழ்நாடு அரசு இந்தக் குழுவை அமைக்கப் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.

ஏகே ராஜன் குழு
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். மேலும், நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யத் தமிழக அரசு அமைத்த குழு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்றும் பாதிப்புகளை ஆய்வு செய்தால் தான் உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

திமுக நாடகம் முறியடிப்பு
இந்நிலையில் தீர்ப்பு வெளியான பிறகு சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன், "தமிழ்நாடு அரசு அமைத்த இந்தக் குழு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்பதால் நான் வழக்கு தொடர்ந்தேன். எனது வழக்கில் தான் இந்த குழுவால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் திமுகவின் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு இல்லை
எனவே, இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. கடந்த 25 ஆண்டுகளாகவே மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியாத நிலையே இருந்தது. இதைச் சரி செய்யவே அதிமுக ஆட்சியில் 7.5% உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. கடந்த 2006 திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவால் மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மத்தி அரசின் தேர்வுகளைக் கட்டப்படுத்த முடியாது.

தேர்வு நடத்துவது தவறில்லை
விசிக தலைவர் திருமாவளவன் நீட் தேர்வு நடத்துவது மூலம் கொரோனா பரவும் எனக் கூறுகிறார். ஏன் இப்போது திறக்கப்பட்டுள்ள மால்கள், மார்க்கெட்கள் மூலம் கொரோனா பரவாதா? நீட் தேர்வை நடத்துவதில் எந்தவொரு தவறு இல்லை. இதுபோன்ற கருத்துகளால் மாணவர்கள் குழப்பம் அடையக் கூடாது. அதுதான் எங்கள் நோக்கம்" என்றும் அவர் தெரிவித்தார்,












Click it and Unblock the Notifications