"மாப்பிள்ளை"க்கு கன்பார்ம்டு?.. கடும் ரேஸில் கொங்குவும் "செளத்"தும்.. திமுகவில் முட்டி மோதும் தலைகள்
சபரீசன் ராஜ்ய சபா எம்பியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் 3 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருக்கிறது.. இந்த 3 இடங்களுக்கும் திமுகவில் கடும் போட்டா போட்டி எழுந்துள்ளது..!
தமிழகத்தில் இருந்து 3 ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவி காலியாகி உள்ளது... இந்த 3 பதவிக்கு தேர்தல் நடத்தினால், 3 பதவிகளையும் பெரும்பான்மை எம்எல்ஏக்களை கொண்ட திமுகவே கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் உறுதிபட சொல்லி வருகிறார்கள்.
மேலும், ஆட்சி மாறியதால் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி பதவியும் காலியாகி உள்ளது.. எனவே, திமுகவில் இந்த 3 ராஜ்ய சபா எம்பிக்கள் பதவி மற்றும் டெல்லி பிரதிநிதி பதவி யாருக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளதுடன், அதற்கான போட்டா போட்டிகளும் நடந்து வருகிறது.

சீனியர்கள்
வழக்கமாக, சீனியர்களுக்குதான் இந்த ராஜ்ய சபா பதவி என்பது ஒதுக்கப்படும்.. அல்லது சட்டசபை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கும் ராஜ்ய சபா பதவிக்கு பரிந்துரை செய்யப்படும்.. ஆனால், இந்த முறை 2 விதமான பேச்சு எழுந்துள்ளது.. இளைஞர்களுக்கே முன்னுரிமை என்று ஒரு தரப்பு சொல்கிறது.. கொங்குவில் கோட்டை விட்டுவிட்டதால், இந்த முறை கொங்குவை சரிக்கட்ட அந்த மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பு என்று இன்னொரு தரப்பு சொல்கிறது.

ஓபிஎஸ்
அந்த வகையில், தங்க தமிழ்செல்வன், பெயர் அடிபடுகிறது.. காரணம், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ்ஸை தோற்கடித்துவிட்டால், நிச்சயம் அமைச்சர் பதவி அல்லது ராஜ்ய சபா சீட் உள்ளது என்ற உத்தரவு திமுக தலைமையால் தரப்பட்டிருந்தது.. ஆனால், இந்த முறை ஓபிஎஸ்ஸூடன் போராடி நூலிழையில் தோற்றாலும், ஓபிஎஸ்ஸுக்கு கடைசிவரை ஒரு கலக்கத்தை தந்தார் தங்கம்.. எனவே, அவருக்கு ராஜ்யசபா இடம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேலுமணி
அதுபோலவே, தொண்டாமுத்தூரில் எஸ்பி வேலுமணிக்கு கடைசிவரை டஃப் தந்த கார்த்திகேய சிவசேனாபதிக்கும் இந்த வாய்ப்பு தரப்படலாம் என்கிறார்கள்.. காரணம், கொங்குவில் திமுக பலமிழந்து உள்ளது.. இதை சரிக்கட்டவும், வேலுமணிக்கு கடைசிவரை தொகுதியில் டென்ஷனை ஏற்படுத்தியதாலும் இந்த பதவி சிவசேனாபதிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

சபரீசன்
இன்னொரு சாய்ஸ் சபரீசன் பெயரும் உள்ளது.. இத்தனை வருடம் வெளியில் தெரியாமல் சத்தமின்றி அரசியல் செய்து வந்தவர்.. இந்த முறை திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தவர்.. ஐபேக் டீமை ஸ்டாலினுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.. இப்படி பிளஸ்களை சபரீசன் கொண்டுள்ளதாலும், கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுகவின் டெல்லி விவகாரங்களை இவர்தான் முன்னின்று கவனித்து வருவதாலும், சபரீசன் பெயரும் வலுவாக அடிபடுகிறது.

பத்திரிகையாளர்
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு சாய்ஸ் பெயர் அடிபடுகிறது.. அவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.. திமுகவின் ஆதரவாளரும்கூட.. திமுகவில் ராஜ்ய சபா எம்பி பதவிக்கு வழக்கறிஞர் பிரிவுக்கு ஒரு சீட் ஒதுக்குவது போல, ஏன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சீட் ஒதுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. வாய்ப்பும் கேட்டிருந்தார். அதனால், அவர் பெயரும் இந்த முறை லிஸ்ட்டில் அடிபடுகிறது.

இணக்கம்?
ஆனால், கருணாநிதி இருந்தவரை, டிஆர் பாலுவும், கனிமொழியும்தான் டெல்லியை கவனித்து வந்தனர்.. ஒருவேளை இப்போது சபரீசனை ராஜ்யசபா எம்பியாக டெல்லி அனுப்பினால், கனிமொழியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி வருகின்றனர்.. ஆனால், கனிமொழியும்சரி, சபரீசனும்சரி, அப்படி ஒரு போக்கை மேற்கொள்ளவே மாட்டார்கள் என்று திமுக நிர்வாகிகள் உறுதிபட சொல்கிறார்கள்... அந்த வகையில், யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சபரீசன் தவிர்க்க முடியாத சாய்ஸ் என்கிறார்கள்..!












Click it and Unblock the Notifications