சவுக்கு சங்கரின் ஜாமீன் ரத்து ஆகுமா? ஐகோர்ட்டில் காவல் துறை அறிக்கை என்ன
சென்னை: மிரட்டி பணம் பறித்தாக தொடர்ந்தும் ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த சூழலில் மருத்துவ அறிக்கையின் படி அவசர சிகிச்சை தேவையில்லை என்றும் , எனவே யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிரட்டி பணம் பறித்ததாக யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல்துறையினர் கைது செய்தனர் . இந்த வழக்கில் சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

ஆனால் யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, தொடர்ந்து அவதூறான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக காவல்துறை தரப்பிலிருந்து புகார் எழுந்தது. இதையடுத்து ஜாமீன் நிபந்தனைகளை மீறி செயல்படுவதாக கூறிய போலீஸ் , அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விரிவாக விசாரித்தது. வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கவோ அல்லது பத்திரிக்கை மற்றும் சமூக வலைதளங்களில் பேசி வீடியோ வெளியிடவோ கூடாது என கூடுதல் நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்தனர். அத்துடன் நிபந்தனைகளை, மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.
மேலும், சவுக்கு சங்கருக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி முழு உடல் பரிசோதனை செய்து, மருத்துவ அறிக்கையை பிப்ரவரி 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனுக்கு எதிரான காவல்துறையின் வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மருத்துவ அறிக்கை அரசு மருத்துவமனை தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் தன்னையும் வழக்கில் சேர்க்கக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, சவுக்கு சங்கரின் மனுவுக்கு தமிழ்நாடு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர் .
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "சவுக்கு சங்கருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தற்போது தேவை கிடையாது. 2-வது வகை சர்க்கரை நோய் பாதிப்பு மட்டுமே சவுக்கு சங்கருக்கு உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு இதயத்தில் வால்வுகள் பொருத்தப்பட்டதால் உடல்நிலை சீராக உள்ளது. அதனால், இதய சிகிச்சை தற்போது தேவையில்லை.
நல்ல உடல் நிலையில் இருந்தும் சிகிச்சை என்ற பெயரில் வழக்கில் இருந்து தப்பிக்க சவுக்கு சங்கர் முயற்சிக்கிறார். நீதிமன்ற உத்தரவின் படி விசாரணைக்கு இதுவரை ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை சவுக்கு சங்கர் மறைத்து வருகிறார். அதனால், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது மற்றும் மருத்துவ அறிக்கை அடிப்படையில் சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் 18-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications