தாம்பரம் தனி மாவட்டம்? நாளுக்கு நாள் பெருகுதே மக்கள் தொகை!
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக சில மாவட்டங்கள் உதயமாகக் கூடும் என்ற தகவல் உலா வரும் நிலையில் அதில் தாம்பரமும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தாம்பரத்தை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்பதற்காக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பழனியையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை இணைத்து தாம்பரத்தை தனி மாவட்டம் ஆக்க திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா முயற்சிக்கிறார்.
தாம்பரத்தை பொறுத்தவரை சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக திகழ்கிறது. இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் நாளுக்கு நாள் விறுவிறுவென அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவது கவனிக்கத்தக்கது. தாம்பரத்தை பொறுத்தவரை மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகுகிறதே தவிர குறையவில்லை. அந்தளவுக்கு அங்கு வளர்ச்சியை காணமுடிகிறது.
சென்னை மாநகருக்குள் வீடு வாடகை அதிகம் என்பதால் பெரும்பாலானோர் தாம்பரம் பகுதியில் குடியிருந்து கொண்டு சென்னை மாநகருக்கு பணிக்கு சென்று வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் தாம்பரத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே கிளாம்பாக்கம் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் வந்துவிட்டது. இது இன்னும் சவுகரியமாகிவிட்டது.
தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் இருந்து வரும் நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடரில் புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானால் அதன் எண்ணிக்கை 40ஐ தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications