அப்படி பேச விடாதீங்க.. தப்பாயிடும்! முதல்வரிடம் சைஸாக சொன்ன அதிகாரிகள்.. அமைச்சர்களுக்கு வாய்பூட்டு?
சென்னை: தமிழ்நாடு அமைச்சர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் விரைவில் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட போவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சாக இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் செய்யப்பட உள்ள மாற்றங்களுக்கான உத்தேச பெயர்களும் அடிபட தொடங்கி உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன.

என்ன உத்தரவு
இந்த நிலையில்தான், தங்கள் துறையை தவிர்த்து மற்ற துறைகளின் மீது கருத்து தெரிவிப்பதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரையை அமைச்சர்களுக்கு முதல்வர் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கேட்டுள்ளனராம். ஒருவேளை மற்ற துறைகள் மீது கருத்து சொல்லவேண்டிய சூழல் வந்தால் சம்மந்தப்பட்ட துறையில் என்ன நடந்திருக்கிறது என்பது தெரிந்தால் மட்டுமே சொல்ல வேண்டும் என அமைச்சர்கள் அனைவருக்கும் முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளதாம்.

என்ன காரணம்
ஏன் ? எதற்கு ? என விசாரித்தபோது,''பஸ் கட்டணம் விரைவில் உயரப் போகிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருந்தார். இந்த சூழலில் சேலம் வந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லையா? கட்டணங்கள் உயர்த்தப்படவில்லையா? சூழ்நிலைக்கேற்ப விலைவாசி உயர்கிறது. மக்களை பாதிக்காத வகையில் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்' என சொன்னார்.

அதிமுக பிடித்துக்கொண்டது
இப்போது அதிமுகவும் இந்த விவகாரத்தை பிடித்துக்கொண்டது. அதிமுக நிர்வாகிகள் பலர்.. பாருங்க சொன்ன மாதிரியே பஸ் டிக்கெட் விலையை உயர்த்த போவதாக சிக்னல் கொடுக்கிறார்கள். நிதி நிலையை உயர்த்த முடியாமல் விலைவாசியை உயர்த்துகிறார்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். பாஜகவினரும் இதே அஸ்திரத்தை எடுக்க தொடங்கி உள்ளனர். மக்களும் என்ன டிக்கெட் விலை உயர போகிறதா என்று பயத்துடன் கேட்க தொடங்கி உள்ளனர்.

அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பத்திரிகையாளர்களை சந்திக்கும் சூழல் வந்தால் நேருவின் கருத்தைச் சொல்லி கேள்வி எழுப்பினால், அவர் என்ன பதில் சொல்ல முடியும் ? நேருவின் கருத்தை ஆதரித்தால் சட்டமன்றத்தில் சிவசங்கர் கொடுத்த பதில் தவறாக போய்விடும். தனது கருத்தில் உறுதியாக இருந்து கட்டணம் உயர்த்தப்படாது என சொன்னால் நேருவின் கருத்துக்கு எதிராகப் போகும்.

என்ன சொன்னார்கள்?
ஆக, இப்படிப்பட்ட நெருக்கடிகள் உருவாகும். நேருவிடம் இப்படி ஒரு கேள்வி வருகிறபோது, கட்டணங்கள் உயர்த்தபடாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சொல்லியிருக்கிறார். எடப்பாடிக்கு இதுதான் எனது பதில் என்று அமைச்சர் நேரு சொல்லியிருந்தால் இத்தகைய குழப்பங்கள் வராது. அதனால்தான் மற்ற துறைகள் மீது அமைச்சர்கள் பதில் சொல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்த முதல்வர் ஸ்டாலினிடம் உயர் அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள் என்கிறது கோட்டை தரப்பு.












Click it and Unblock the Notifications