இபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பு நிகழுமா? அரசியலில் எதுவும் நடக்கலாம்..சொல்வது கு.ப.கிருஷ்ணன்
அரசியலில் எதுவும் நடக்கலாம் என ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: ஒற்றைத்தலைமை பஞ்சாயத்தால் பிளவுபட்டுள்ள அதிமுக மீண்டும் ஒன்றாக இணையுமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்போம் என்று கூறியுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் களத்தில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது அதிமுகவில் அரங்கேறும் சம்பவங்களைப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் வரைக்கும் அன்பு மலர்களே..தாய் வழி வந்த தங்கள் எல்லாம் ஓர் வழி சென்றால் நாளை நமதே... என்று பாடிக்கொண்டிருந்தனர். ஒற்றைத்தலைமை என்ற பேச்சு தொடங்கிய நாள் முதலே பிரச்சினை தொடங்கிவிட்டது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பிரச்சினையை ஊதி பெரிதாக்கியது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் எம்எல்ஏக்கள்,எம்.பிக்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் நிற்க ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்து போனார் அவர் பக்கம் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட சிலர் சென்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினால் ஓ.பன்னீர் செல்வம் தனது சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி பலத்தை நிரூபிக்க முயற்சி செய்வார். இந்த நேரத்தில்தான் திருமகன் ஈவேராவின் திடீர் மரணத்தை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தனது தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவிக்க, ஓ.பன்னீர் செல்வமோ, தனது தரப்பு வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்து வேட்புமனுவையும் தாக்கல் செய்ய வைத்தார். அந்த நேரத்தில்தான் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தென்னரசு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் களத்தில் இருந்து விலகிவிட்டார். இதனையடுத்து ஒன்மேன் ஆர்மியாக அதிமுக சார்பில் களமிறங்குகிறார் தென்னரசு. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே நல்ல நேரம் பார்த்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அதிமுகவின் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுப்பதாக கூறினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்காக வாக்கு சேகரிப்போம் என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையனுக்கு நன்றி என்று கூறினார்.

இதனிடையே ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் சந்திப்பார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications