நாலாபுறத்திலிருந்தும் பாயக் காத்திருக்கும் அஸ்திரங்கள்.. பாமக சமாளிக்குமா.. சரியுமா??
Recommended Video

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி சதுரங்கத்தில் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாகவே பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் எண்ணுகிறார்கள். ஆனால் களநிலவரம் கலவரமாகவே இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.
எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவில் இருக்கும் பாமகவுக்கு எதிர்மறையாக பல்வேறு காரணங்கள் இந்த தேர்தலில் அதிரடி காட்டப்போகின்றன.
“ஏழரையாக” வரப்போகும் காடு வெட்டி “குரு” பிரச்சனை. பாமகவின் பெரும் வாக்கு வங்கியே வன்னியர் சமுதாயம்தான். அந்த சமுதாயத்தின் ஆணிவேராக திகழ்ந்தது வன்னியர் சங்கம். இதன் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு.
பாமகவில் குருவின் பங்களிப்பு அளப்பரியது. வன்னிய சமுதாயத்தின் பெரும்பகுதி வாக்குகளை பாமகவுக்கு ஒவ்வொரு தேர்தல் தோறும் சிந்தாமல் சிதறாமல் பெற்றுத் தருவதில் கில்லாடியான குருவுக்கும் ராமதாஸ் குடும்பத்துக்கும் குரு உயிரோடு இருக்கும்போதே சில உரசல்கள் இருந்து வந்துள்ளது. அதன் பின்னர் குரு உடல்நிலை நலிவுற்றபோது அவரை ராமதாஸ் குடும்பத்தினர் நன்கு கவனித்துக் கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு குரு குடும்பத்தாரால் இப்போது பகிரங்கமாக வைக்கப்படுகிறது.
இவர்களது அலட்சியத்தாலேயே குரு இறந்து விட்டார் என்று குருவின் தாயும் சகோதரியும் இப்போது கூறி வருகிறார்கள். இப்படி குரல் எழுப்பி வரும் பாமகவினரை சீனியர் ராமதாசும், ஜூனியர் ராமதாசும் கட்சியிலிருந்து களையெடுக்கும் பணியை செய்துள்ளனர். இதனால் கோபமடைந்தவர்கள் குருவின் மகன் கனலரசனின் தலைமையில் ஒரு அணியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இவர்களின் வேகமும் கோபமும் இந்த தேர்தலில் நிச்சயமாக பாமகவுக்கு எதிராக பெரிய பங்காற்றும். அதோடு மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற சங்கமும் தொடங்கப்பட்டுள்ளது. குருவின் அம்மா அன்புமணியை எதிர்த்து போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பாமகவுக்கு நிச்சயம் பெரிய சவால்தான்.

வேகம் எடுக்கப் போகும் வேல்முருகன்
குரு குடும்ப பிரச்சனை இப்படி இருக்கையில் ஒரு காலத்தில் பாமகவில் ராமதாசின் தளபதியாக விளங்கியவர் வேல்முருகன். இவர் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். பெருமளவு வன்னிய இளைஞர்களின் ஆதரவோடு வலம்வரும் இவர் இப்போது பாமகவுக்கு எதிராக இன்னும் புதிய வேகத்தோடு இறங்குவார் என்றே தெரிகிறது. அதோடு குரு மரணப் பிரச்னையை கையில் எடுத்திருக்கும் இவர் குருவின் மரணம் தொடர்பாக ஏராளமான தகவல்களை நான் திரட்டியுள்ளேன். அதை விரைவில் வெளியிட உள்ளேன். அப்போது பலரின் முகத்திரைகள் கிழிந்து தொங்கப் போகிறது என்று பேட்டி தட்டியுள்ளார். ஆக குருவின் மரணப் பிரச்சனை இந்த தேர்தலில் வன்னிய சமுதாய மக்களிடையே ஒரு மிகப் பெரிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.

பாமகவின் நம்பகத்தன்மை
பாமக வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ள ஒரு கட்சி என்றாலும் தமிழ்நாட்டில் பிரதான எதிர்கட்சிகள் செய்யாத விசயங்களை கூட துணிந்து செய்தது உண்டு. நிழல் நிதி நிலை அறிக்கையாக இருக்கட்டும் புகை, மது இரண்டுக்கும் எதிரான நிலைப்பாடாக இருக்கட்டும், ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை முன்வைப்பது, ஊழல் புகார்களை தெரிவிப்பது என்று பாமக மீது இந்த விசயங்களில் மக்களுக்கு நம்பிக்கை இருந்து வந்தது. அதற்கேற்றார் போலவே கடந்த 7 வருடங்களாக அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததாக இருக்கட்டும் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

அதிமுக மீதான விமர்சனம்
அதேபோல ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக அரசின் ஊழல்களை எதிர்த்து ஆளுநரிடம் புகார் கொடுத்ததாக இருக்கட்டும், அவர்களின் செயல்பாடுகளை விமர்சித்து கழகத்தின் கதை என்ற புத்தகம் எழுதியதாக இருக்கட்டும் இவற்றையெல்லாம் தாண்டி நாங்கள் ஆட்சிக்கு வருவோம், அப்படி வரும் பட்சத்தில் மது இல்லாத கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசை அமைப்போம் என்று கூறியதாக இருக்கட்டும் அதற்காக முதல்வர் வேட்பாளாராக அன்புமணியை முன்னிறுத்தி அமெரிக்காவில் ஒபாமா மேற்கொண்ட பிரச்சாரம் போலவே இங்கும் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொண்ட விதமாக இருக்கட்டும் இவையெல்லாம் மக்களிடையே பாமகவுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை பெற்றுத்தந்தது.

பலமான வாக்கு வங்கி
அதன் விளைவாகவே கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெறாவிட்டாலும் கூட சுமார் 5.5% வாக்குகளை பெற முடிந்தது. ஆனால் இவற்றையெல்லாம் தகர்த்து விட்டது பாமக இப்போது. நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு வாக்கு சேகரிக்கும் இவர்கள் 21 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைதேர்தலில் என்ன சொல்லி வாக்கு சேகரிப்பார்கள்? இவ்வளவு நாட்களாக ஊழலின் ஊற்றுக் கண் என்று பிரச்சாரம் செய்த அதிமுக அரசை தூயவர்கள் என்று கூறுவார்களா? அதோடு அடுத்து வரும் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளாராக நிறுத்தி வாக்கு சேகரிப்பார்களா அல்லது எடப்பாடிக்காக வாக்கு சேகரிப்பார்களா ? இப்போது இது போன்ற கேள்விகளை அரசியலில் அதிமேதாவிகள் கேட்கவில்லை மிக மிக சாதாரணர்கள் கேட்கின்றார்கள். என்ன பதில் கூறும் பாமக?

கேள்விக் கனைகள்
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிருக பலத்தோடு வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சமூக வலைதள பிரச்சாரங்கள். வளர்ச்சியின் நாயகன் மோடி என்று கட்டமைக்கப்பட்ட பிம்பம் தேர்தல் நேரத்தில் மிகச்சரியாக பெரும் லாபத்தை மோடிக்கு பெற்றுத்தந்தது. இப்போது அதே சமூக வலைதளத்தினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படப் போகிறது. தேர்தலுக்கு தேர்தல் எப்படியும் அணி மாறிவிடுவார்கள் என்ற இமேஜ் பாமகவுக்கு எப்போதுமே உண்டு. இந்த கெட்டபெயர் இருந்தாலும் கூட அவர்கள் சமுதாய வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தே வந்தன. ஆனால் இப்போதைய நிலையே வேறு. சமுதாய வாக்குகளாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அந்த வாக்காளர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

கிழித்தெடுக்கும் வலைதளங்கள்
எப்போது அன்புமணி ராமதாஸ் இரு கட்சிகளோடு பேசி வருகிறோம் என்று கூறினாரோ அன்று முதலே கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக முன்னெடுத்த விஷயங்கள், ஜூனியர் ராமதாசும் சீனியர் ராமதாசும் உரைத்த சூளுரைகள் எல்லாமே எப்போதும் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எல்லாம் உதிக்கின்ற சூரியன் மேற்கே உதித்தாலும், காருள்ளவரை, பாருள்ளவரை இனிமேல் திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே கிடையாது என்ற வீர வசனங்கள் எல்லாம் இப்போதும் காணக் கிடைக்கிறது. அப்போது வீர வசனங்களாக பார்க்கப்பட்டாவை எல்லாம் இப்போது பாமகவின் அதிமுக கூட்டணி நிலைப்பாட்டை பார்த்தப் பிறகு மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

சொந்த கட்சியிலும் சலசலப்பு
அதிமுகவோடு பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை எனபதால் கட்சிப் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள அவர் அதிமுகவோடு கூட்டணி அமைக்கப்பட்டு விட்டதால் ஊழல் குறித்து இனிமேல் பேச முடியாது என்பதாலேயே விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். பிரியாவைப் போன்றே கட்சியின் மூத்த நிர்வாகிகளும் உள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உன்னிப்பாக கவனிக்கும் திமுக
இதையெல்லாம் திமுக அணியினர் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவர்கள் பாமக அதிருப்தியாளர்களை கையில் எடுக்கும் பட்சத்தில் எதை
நினைத்து அதற்கான விலையும் கொடுத்து அதிமுக பாமகவை தங்களது அணிக்குள் கொண்டு வந்ததோ அந்த எண்ணம் முழுமையாக நிறைவேறுமா என்பது சந்தேகமே.












Click it and Unblock the Notifications