2016 திரும்புதே.. அப்போ கேப்டன்.. இப்போ தளபதி! மக்கள் நல கூட்டணி வெர்ஷன் 2.0! யாருக்கு சிக்கல்?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவும் அதிமுகவும் தயாராகி வருகிறது. சில கட்சிகள் இன்னும் தங்களது கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருக்கின்றன. இந்த நிலையில் அரசியலில் புது வரவான விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தோடு கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கிடையே 2016 சட்டமன்றத் தேர்தலில் நடந்ததை போல 2026 சட்டமன்றத் தேர்தலில் 'மக்கள் நல கூட்டணி' உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே போகிறது. கூட்டணி வலுவாக இருக்கிறது என கூறிவந்த திமுக கூட்டணியில் சிறுசிறு சலசலப்புகள் எழ ஆரம்பித்திருக்கிறது. 2018ஆம் ஆண்டிலிருந்து திமுக கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் 2026 தேர்தல் வரை அதுவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் சிறு சிறு மாறுதல்கள் ஏற்படலாம். இந்த நிலையில் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஒரு சதவீத வாக்கு கூட இல்லாத மக்கள் நீதி மையத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்கியதால் தங்களை புறக்கணித்ததாக வைகோவின் மதிமுக அதிர்ச்சியில் உள்ளது என சொல்லப்படுகிறது.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இதுவரை திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பேட்டி கொடுத்து அதிர வைத்திருக்கிறார். மேலும் வரும் தேர்தலில் கூடுதலாக இடம் கேட்போம் எனவும் சொல்லியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என வலியுறுத்தி வருகிறது. இப்படியாக தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் சலசலப்புகள் எழத் தொடங்கி இருக்கிறது. அதிமுகவிலோ அந்த பிரச்சினை எதுவுமே இல்லை.
காரணம், பாஜகவை தவிர அந்த கூட்டணியில் எந்த கட்சியுமே அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. கடந்த தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த நிலையில் மாநிலங்களவை சீட்டு பிரச்சினை காரணமாக கூட்டணி குறித்து ஜனவரி மாதத்தில் தான் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்த பாமக உட்கட்சி பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. மேலும் கடந்த முறை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தந்த நிலையில் இந்த முறை தராதது அந்த கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியும் தனித்து தான் போட்டி என அறிவித்து ஒரு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. தனித்து தான் போட்டியென சீமானும் திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசியலுக்கு வந்து தற்போது முழு நேர அரசியலுக்கு திரும்பி இருக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் மூன்றாவது கூட்டணியை அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தோடு விஜய் கூட்டணிக்கு மாநாட்டின் போது அழைப்பு விடுத்தார்.
ஒரு சில அமைப்புகள் விஜய்க்கு ஆதரவாக இருந்தாலும் பெயர் சொல்லிக் கொள்ளும்படியான அரசியல் கட்சிகள் இதுவரை விஜய் கூட்டணிக்கு வரவில்லை. இனியும் அது நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக திமுகவுடன் பிணக்கில் இருக்கும் கட்சிகள் விஜய் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கலாம் என சொல்லப்படுகிறது. 2016 தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கின.
அந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு அந்த கூட்டணியும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் விஜய் தலைமையில் பாமக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஒருவேளை விஜய் தலைமையில் மூன்றாவதாக ஒரு அணி உருவானால் கிட்டத்தட்ட 10 முதல் 15 சதவீத வாக்குகள் உடையலாம். இஸ்லாமிய சமுதாய வாக்குகள், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள், பொது வாக்குகள், இளைஞரின் வாக்குகள், அந்தந்த கட்சிகளின் வாக்குகள் என குறிப்பிட்ட சதவீதம் மூன்றாம் கூட்டணிக்கு சென்றாலும், ஆட்சியைப் பிடிக்க முடியாது.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமையும். அது அதிமுகவாகவும் இருக்கலாம்.. திமுகவாகவும் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். தற்போதைய சூழலில் விஜய், பாமக, நாம் தமிழர் கூட்டணி அமைவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக தென்படுகிறது. மேலும் கூட்டணி கதவை விஜய் திறந்து வைத்திருக்கும் நிலையில் அதனை எந்த கட்சி முதலில் தட்டப் போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications