என்னாது.. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கும் வர மாட்டாரா.. ஷாக்கில் தொண்டர்கள்!
சென்னை : இந்த தேர்தலை பொறுத்தவரை அதிக கட்சிகளால் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கட்சி தேமுதிக தான். கடைசி நிமிடம் வரை எந்த முடிவையும் எடுக்காமல் தொண்டர்களை கலக்கத்தில் வைத்திருந்த கட்சியும் தேமுதிக தான்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் கமல், சரத்குமார் மற்றும் பாரிவேந்தருடன் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் தேமுதிக.,வையும் இணைக்க பல விதங்களில் முயற்சித்து பார்த்தும், தொகுதி பங்கீடு முடிந்த பிறகும் கூட அழைப்பு விடுத்தும் பலன் தரவில்லை.
இப்போது அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை.

கூட்டணியில் இழுத்தடித்த தேமுதிக
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதி பங்கீட்டில் கடைசி வரை பிடிவாதமாக இருந்தது. தாங்கள் கேட்ட 41 சீட்களை தர மறுத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதன் பிறகு அமமுக கூட்டணியில் இணைக்க டிடிவி தினகரன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் தினகரனின் அழைப்பை ஏற்க மறுத்த தேமுதிக, கடைசி நேரத்தில் ஒப்புக் கொண்டது.

புதிய கூட்டணியில் தேமுதிக
அமமுக தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக.,விற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை அனுபவம் மிக்க கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக, முதல் முறையாக புதிதாக துவங்கப்பட்டுள்ள அமமுக கட்சியுடன் இணைந்து களம் காண்கிறது.

விஜயகாந்த் போட்டியிடவில்லை
தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் பிரேமலதா விஜயகாந்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. விஜயகாந்த், சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொண்டர்கள் வேதனை
விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து கட்சி தொண்டர்கள் வேதனைபட்டுக் கொண்டிருக்கும் போது, அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற செய்தி மேலும் கவலை கொள்ள செய்துள்ளது. இதனால் விஜயகாந்த் பிரசாரத்திற்காவது வருவாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜயகாந்த் போட்டியிடாததற்கு காரணம்
விஜயகாந்த் போட்டியிடாததற்கு அவரது உடல்நிலை காரணமாக இருக்கலாம். ஆனால் விஜயகாந்த் போட்டியிடாததற்கு அக்கட்சி சார்பில் எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை. நேற்று நடைபெற்ற தொகுதி உடன்படிக்கை, தொகுதி மற்றும் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியிலும் கட்சி தலைவரான விஜயகாந்த்தோ, அவரது மனைவி பிரேமலதாவோ, மைத்துனர் சுதீசோ பங்கேற்கவில்லை.

பிரசாரத்திற்காவது வருவாரா
சமீபத்தில் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்ற பிறகு, பொது நிகழ்ச்சிகள் எதிலும் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் பிரசாரத்திற்கு வருவது சரியாக இருக்குமா என தெரியவில்லை. ஆனால் பிரசாரத்திற்கு விஜயகாந்த் நிச்சயம் வருவார் என சமீபத்தில் பிரேமலதா நம்பிக்கையுடன் கூறி இருந்துள்ளார். அத்துடன் பழையபடி அவர் நன்றாக பேச குரல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், விஜயகாந்த் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என அவரது மகன் விஜயபிரபாகரன் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

வாய்ப்பு மிக குறைவு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்தை ஊர் ஊராக அழைத்து செல்வது சரியானதாக இருக்காது. இதனால் அவர் பிரசாரத்திற்கு வருவதற்கான சாத்தியகூறுகள் மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications