"தனிக்காட்டு" ராஜா.. பாஜகவை அதிமுக கழற்றிவிட்டால் என்ன நடக்கும்? எடப்பாடியின் மாஸ்டர் பிளான்? போச்சே
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாக போவதாகவும்.. இரண்டு கட்சிகளை சேர்ந்த முக்கிய சில தலைகள் இதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.. எடப்பாடியின் திட்டம்தான் என்ன என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினோம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் பாஜக - அதிமுக ஒன்றாக கூட்டணி அமைத்துதான் சந்தித்தன. இதில் லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. பாஜக ஒரு இடங்களில் கூட வெல்லவில்லை. அதிமுகவில் ஓ பி ரவீந்திரநாத் மட்டும் வெற்றிபெற்றார்.
அதன்பின் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு 4 எம்எல்ஏக்கள் என்று அதிமுக கூட்டணி 60+ இடங்களை வென்று நம்பிக்கை அளித்தது. ஆனால் அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி இன்றி தனி தனியாக போட்டியிட்டன.
பாஜக தன்னை அடிமட்ட அளவில் வளர்க்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

என்ன நடந்தது?
அதன்பின்தான் கடந்த நாமக்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி பற்றி அறிவித்தார். அதில், எங்களை நேரடியாக எதிர்க்க தெம்பு, திராணி இல்லாமல் வழக்கு போடுகிறார்கள். அடுத்து வருகின்ற எந்த தேர்தல்களாக இருந்தாலும், அதிமுகதான் வெல்லும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம். அதிமுக தலைமையில் இந்த மெகா கூட்டணி அமைக்கப்படும். அதற்கு பிள்ளையார் சுழி போடும் கூட்டமாகவே இந்த கூட்டம் இருக்கும், என்று எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார். உடனே பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணியை வரவேற்று பேசி உள்ளார்.

அண்ணாமலை வரவேற்பு
பாஜக தலைவர் அண்ணாமலை தனது பேச்சில், அதிமுக தலைமையில் செயல்பட நாங்கள் தயார். இதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் நாங்கள் செயல்பட தயார். 2024 தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நாங்கள் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம். யார் பலமான கட்சி என்பது அந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம், என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மொத்தத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க, அவர்களின் தலைமையில் கீழ் செயல்பட பாஜக தயாராகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அதிமுக - பாஜக உடைய போவதாக செய்திகள் வந்த? ஹான்.. அதான் அண்ணாமலை கூட்டணி ரெடின்னு சொல்லிட்டாரே என்ற கேள்வி எழலாம். இதற்கு பின் வேறு ஒரு காரணம் இருக்கிறது.

என்ன காரணம்?
சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர்செல்வத்தையும் ஒன்றாக சந்தித்தார். இந்த சந்திப்புதான் அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது. மோடியை தனியாக சந்தித்து பேசி இரண்டு பேருமே தனி தனியாக நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் இரண்டு பேருக்குமே தனியாக நேரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இரண்டு பேருமே விமான நிலையம் வாருங்கள், பிரதமர் மோடியை வரவேற்கலாம் என்று மட்டுமே இரண்டு பேருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தான் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்கிறார்கள். தன்னை தனியாக அழைக்கவில்லை. ஓபிஎஸ்ஸுக்கும், எனக்கும் ஒரே அளவு மரியாதை கொடுப்பது தவறு என்று எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறாராம். இப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக இருக்கும் ஒருவர்.. முன்பு எடப்பாடிக்கும் ஆலோசகராக இருந்தார். இப்போதும் எடப்பாடிக்கு அவர் நெருங்கிய நட்பில்தான் இருக்கிறார்.

நட்பு
அந்த ஆலோசகர்தான்.. நீங்க பாஜகவை விட்டுட்டு வாங்க.. காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்று கூறி இருக்கிறாராம். அதே நபர்தான் முன் எடப்பாடி - ராகுல் காந்தி இடையே போன் உரையாடலை ஏற்படுத்த ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தான் துடிக்க வேண்டும். எடப்பாடி துடிக்கிற மாதிரி எந்த சந்தர்ப்பத்திலும் தோற்றம் உருவாகிடக் கூடாது. தேர்தல் நெருங்கும் சூழலில், சீட் எண்ணிக்கையை மிகவும் குறைத்துதான் எப்படியும் திமுக பேரம் பேசுவார்கள். அந்த குறைவான சீட்டை ஏற்காமல் காங்கிரஸே வெளியேறும் சூழல் உருவாகும். அப்போ நம்ம கூட்டணி வைக்கலாம் என்று எடப்பாடிக்கு அந்த நபர் ஐடியா கொடுத்து இருக்கிறாராம்.

பாஜக
இந்த நிலையில்தான் பாஜக தனித்து விடப்பட்டால் என்ன செய்யும் என்ற கேள்வி லாஜிக்காக எழுந்துள்ளது. அதாவது ஒருவேளை காங்கிரஸ் - அதிமுக கூட்டணியே உருவானாலும் (அதற்கு தற்போது உள்ள சூழ்நிலையில் 90 சதவிகிதம் வாய்ப்பு குறைவு) கூட பாஜக என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவிற்கு சொன்னதை எல்லாம் கேட்கும் நட்பான கட்சியாக அதிமுக இருக்கிறது. அந்த அதிமுகவே.. வெளி தாண்டி விட்டால்.. பாஜக என்று பயிருக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிஷா இல்லைனா திவ்யா என்று பாஜகவால் முடிவும் எடுக்க முடியாது. அதாவது அதிமுக இல்லை என்றால் திமுக என்று பாஜக முடிவு எடுக்க முடியாது.

திமுக
திமுகவை பாஜக பரம வைரியாக பார்க்கிறது. அப்படிப்பட்ட திமுகவோடு பாஜக கூட்டணி வைக்க சான்ஸே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலில் எல்லாம் சகஜம், இவர்கள் முன்பே கூட்டணி வைத்தவர்கள் தானே என்று வாதம் வைக்கலாம். அப்படி வைத்தால் கூட இரண்டு கட்சிகளும் சில தியாகங்களை செய்ய வேண்டும். உதாரணமாக திமுகவினர் மேல் உள்ள சில மத்திய வழக்குகளை பாஜக வாபஸ் வாங்க வேண்டும். இன்னொரு பக்கம் திமுக கொள்கை ரீதியாக சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். ஆனால் திமுக இதை செய்வதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவும் வழக்குகளை வாபஸ் வாங்க வாய்ப்பே இல்லை.

மூன்றாவது கூட்டணி
இல்லையென்றால் பாஜக மூன்றாவது கூட்டணி.. மக்கள் நல கூட்டணி போல வைக்கலாம். ஆனால் அப்போது மக்கள் நல கூட்டணியில் இருந்த மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை எல்லாம் திமுகவின் தற்போதைய கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் சேர வாய்ப்பே இல்லை. தேமுதிக வேண்டுமானால் சேரலாம். அப்படி இருக்கும் போது அதிமுக மட்டும் பாஜகவை கழற்றிவிட்டால்.. பாஜக என்ன செய்யும்? ஸ்டேட்டஸை சிங்கிளாக மாற்றிவிட்டு சுற்றினால் தமிழ்நாட்டின் பாஜகவின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இலையும் தாமரையும் ஒன்றாக இருக்குமா.. இல்லை இல்லை உதிர்ந்து தாமரை மட்டும் சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் தனியாக தண்ணீரில் மிதக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications